ஞாயிறு, 9 டிசம்பர், 2012

சூரிய ஒளி மின்சாரத்தை நேரடியாக வீடுகளில்

மின்சாரப் பிரச்னை + சோலார் தமிழகத்தில் சென்னைக்கு வெளியே உள்ள மக்கள் மின்சாரம் இன்றித் தவிக்கிறார்கள். அறிவிக்கப்பட்ட/படாத மின்வெட்டு 10 முதல் 18 மணி நேரம் கூட உள்ளது. சென்னையில் இருக்கும் என் போன்ற பலருக்கு தினசரி 2 மணி நேர மின்வெட்டு + மாதம் ஒரு நாள் 8 மணி நேர மின்வெட்டு. இதை இன்வெர்ட்டர் கொண்டு எளிதாகச் சமாளித்துவிடலாம்.

திடீர் என இவ்வளவு மின்வெட்டு எங்கிருந்து வந்தது என்பது பலருக்கும் புரியவில்லை. கூடங்குளம் அணு மின் நிலையத்தை மக்கள்மீது புகுத்தவே இந்தப் பிரச்னை மக்கள்மீது சுமத்தப்படுகிறது என்று ஒரு கான்ஸ்பிரசி தியரியும் மக்களிடையே பரவியுள்ளது. ஆனால் இதற்காகப் போய் ஒரு மாநிலத்தின் பெருமளவு மக்களை ஜெயலலிதா துன்புறுத்துவார் என்று நான் நினைக்கவில்லை.

தனியார் துறைமீது காழ்ப்புணர்ச்சி கொண்டவர்கள், இந்தப் பிரச்னைக்கான முழுமுதற் காரணமே, மின் உற்பத்தியைத் தனியார்மயமாக்கியதுதான் என்பார்கள். இதை நான் ஏற்கவில்லை. http://www.badriseshadri.in/
மாநில அரசு தன் எதிர்காலத் தேவையைச் சரியாகத் திட்டமிடாததே. மின்வாரியத்திலிருந்து ஓய்வுபெற்ற பொறியாளர் காந்தி என்பவர் எழுதிய “தமிழகத்தில் மின்வெட்டும், மின்கட்டண உயர்வும் – காரணமும் தீர்வும்” (ஆழி பதிப்பகம்) புத்தகத்தில் பல காரணங்கள் குறிக்கப்பட்டுள்ளதாக ஞாநி தன் கட்டுரை ஒன்றில் எழுதியிருந்தார். அந்தக் கட்டுரையில் உள்ளதைப் படித்தாலே காந்தி தெளிவாக, தரவுகளுடன் எழுதியிருக்கிறார் என்பது புரிகிறது. (புத்தகத்தை நான் இன்னமும் படிக்கவில்லை.)

ஆனால் காந்தியின் அனாலிசிஸில் சில குறைபாடுகள் இருப்பதாக நான் பார்க்கிறேன். தனியார் உற்பத்திக்கு மாற்றாக அவர் அரசு உற்பத்தியை முன்வைக்கிறார். நிறுவுவதற்கான மூலதனச் செலவு அதிகமாக இருக்கும் என்னும் காரணத்தால்தான், அவ்வளவு பணம் கையில் இல்லை என்பதால்தான் தனியார் மின் உற்பத்தி நிலையங்களை நிறுவலாம் என்று மத்திய அரசு அனுமதித்தது. இந்த மூலதனச் செலவை நான்கு ஆண்டுகளில் திருப்பித் தருவதற்கே எதிர்ப்பைக் காண்பிக்கிறார்கள் காந்தியும் ஞாநியும்.

மூலதனச் செலவு, அதற்கான வட்டிச் செலவு, மின் நிலையத்தை ஆண்டாண்டு இயக்கும் செலவு, கரி அல்லது இயற்கை எரிவாயு அல்லது நாப்தா போன்ற எரிபொருளின் விலையில் ஏற்படும் மாற்றம், பொதுவான பணவீக்கம் என அனைத்தும் சேர்ந்து அரசு மற்றும் தனியார் மின் நிலையங்களைப் பாதிக்கின்றன. எனவே அவ்வப்போது நுகர்வோருக்கான விலையை ஏற்றிக்கொண்டேதான் இருக்கவேண்டும். நான்கைந்து வருடத்துக்கு ஒருமுறை விலை ஏற்றும்போது மக்கள் கடுமையாக எதிர்க்கிறார்கள். இது ஏற்கமுடியாத ஒன்று. தனியார் என்றால் வெளிப்படையாக விலை ஏறிவிட்டதைச் சொல்வார்கள். அரசு என்றால் கொஞ்ச நாளைக்கு நஷ்டத்தைச் சகித்துக்கொண்டு பிறகு விலையை ஏற்றுவார்கள். ஆனால் அந்த நஷ்டத்தையும் பொதுமக்களின் வரிப்பணத்தைக் கொண்டுதான் சரிக்கட்டியாகவேண்டும். எனவே இந்தச் சிக்கல் ஏதும் இல்லாமல் இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை மின்சார விலையை ஏற்றுவது என்று முடிவெடுத்துவிடலாம்.

மாநில அரசுகள் மின் உற்பத்தி ஆலையை நிர்மாணிக்கக்கூடாது என்று மத்திய அரசு ஒருபோதும் சொல்லவில்லை. மாநில அரசுகள் செய்யத் தவறிவிட்டன என்பதுதான் உண்மை.

அடுத்து, காற்றாலை மின்சக்தி நம்மைக் காப்பாற்றிவிடும் என்பதுபோல ஒரு கருத்து முன்வைக்கப்படுகிறது. இது உண்மையே அல்ல. காற்றாலை மின்சக்தி யூனிட் ஒன்றுக்கு மிக அதிக விலை கொடுக்கவேண்டும். மேலும் installed capacity அதிகம் என்பதால் மட்டுமே இதிலிருந்து முழு மின்சாரமும் எல்லா நாளும் எல்லா நேரமும் கிடைத்துவிடாது. விக்கிபீடியா பக்கம் போய்ப் பார்த்தால் இந்தியாவிலேயே தமிழகத்தில்தான் மிக அதிகமாக 6,970 மெகாவாட் அளவுக்கு காற்றாலைகள் நிர்மாணிக்கப்பட்டிருக்கின்றன என்று போட்டிருக்கும். ஆனால் ஒரு ஆண்டுக்கு அதிலிருந்து எத்தனை யூனிட்டுகள் கிடைத்தன, ஒவ்வொரு யூனிட்டுக்கும் எத்தனை பணம் மின்வாரியத்தால் கொடுக்கப்பட்டது என்பதைப் பாருங்கள். மேலும் மின் தொகுப்புக்கு ஒரு காற்றாலை கொடுக்கும் மின்சாரத்தின் அதே அளவை அந்த நிறுவனம் அதே ஆண்டில் வேண்டுமென்றால் மின் தொகுப்பிலிருந்து எடுத்துக்கொள்ளலாம். இதனால் மின்சார வாரியத்துக்கு நஷ்டம் ஏற்படுகிறது என்றுகூட மின்சார வாரியம் குறை கூறியுள்ளது.

காற்றாலை மோசம் என்று நான் சொல்லவரவில்லை. மாற்று எரிசக்தி என்னும் வகையில் காற்றாலை மிக மிக முக்கியம். ஆனால், காற்றாலையால் நம் பிரச்னை எல்லாம் தீர்ந்துவிடும் என்று யாரேனும் சொன்னால் நம்பாதீர்கள். ஏப்ரல் தொடங்கி அக்டோபர் வரைதான் காற்றாலை நன்றாக இயங்கும். பிறகு படுத்துவிடும்.

நம் அடிப்படை மின் தேவையை இரண்டு வழிகளில் மட்டுமே நம்மால் தீர்க்க முடியும்.

(1) அரசு, தனியார் என அனைவரும் இணைந்து அனல் மின் நிலையங்களையும் அணு மின் நிலையங்களையும் அமைத்து, ஒட்டுமொத்த உற்பத்தியை அதிகரிப்பது.
(2) நாம் ஒவ்வொருவரும் சூரிய ஒளி மின்சாரத்தை நேரடியாக வீடுகளில் அமைத்து மின் தொகுப்பின்மீதுள்ள நம் சார்பைக் குறைத்துக்கொள்வது.

காற்று, குப்பை, கடல் அலை, நீர் மின்சாரம், பிற அனைத்தும் அவ்வப்போது, கொஞ்சம் கொஞ்சமாக நமக்கு உதவலாம். ஆனால் அடிப்படைப் பிரச்னைகளை இவற்றால் சாதிக்க முடியாது. தினம் தினம் இத்தனை மெகாவாட் நம் அனைவருக்கும் வேண்டும்.

சூரிய ஒளி மின்சாரத்தைப் பொருத்தமட்டில் அரசோ தனியாரோ மாபெரும் மின் உற்பத்தி நிலையங்களை அமைப்பதில் எனக்குப் பெரும் நம்பிக்கை இல்லை. இங்கே 50, அங்கே 100 மெகாவாட் கிடைத்தால் பெரிய விஷயம். அரசும் தனியாரும், குறைந்தபட்சம் 1,000 மெகாவாட் மின்சாரம் இல்லாவிட்டால் அதில் அதிகக் கவனத்தைச் செலுத்தக்கூடாது.

மாறாக, தனித்தனியாக நாம் அனைவரும் நம் வீட்டின் சில பிரச்னைகளை சூரிய ஒளி மின்சாரம் கொண்டு தீர்க்கலாம்.

(அ) சூரிய ஒளியில் இயங்கும் தனிப்பட்ட விளக்கு யூனிட்டுகள். இவற்றில் சிலவற்றை நான் சோதனை முயற்சியில் பயன்படுத்த உள்ளேன். பிரகாசம் ஒருவேளை குறைவாக இருந்தாலும், ஒன்றுமே இல்லாமல் இருட்டில் இருப்பதற்கு, இவை எவ்வளவோ தேவலாம். நான் இதுவரையில் பார்த்தவற்றில் சில விளக்குகள் சூரிய ஒளியிலும் சார்ஜ் செய்யலாம். மின்சாரம் மூலவும் சார்ஜ் செய்யலாம்.

(ஆ) சூரிய ஒளி + பேட்டரி + சார்ஜிங் பிளக் (plug): என் வீட்டில் மூன்று செல்பேசிகள், இரண்டு லாப்டாப்கள், இரண்டு சிலேட்டுக் கணினிகள், ஒரு பாக்கெட் ரவுட்டர், ஒரு டி.எஸ்.எல் மாடம்/wi-fi ரவுட்டர் என அவ்வப்போது சார்ஜ் செய்யப்படவேண்டிய பல கருவிகள் உள்ளன. இவை உறிஞ்சும் மின் சக்தி மிகவும் குறைவுதான். இவற்றையெல்லாம் முழுமையாக சூரிய சக்திமூலமே சார்ஜ் செய்துகொள்ள முடியும். அதற்கெனத் தனியான ஒரு சோலார் பேனல் அமைத்து, தனி பேட்டரிமூலம் ஓரிடத்தில் சார்ஜிங் செய்ய வசதி செய்துவிட்டால் போதும்.

(இ) வீட்டில் உள்ள பிற விளக்குகள், மின்விசிறிகள் ஆகியவற்றை மட்டும் ஒரு தனிச் சுற்றில் வைத்து, அவை இயங்குவதற்கான இன்வெர்ட்டர் + பேட்டரி சிஸ்டம், அதனை சார்ஜ் செய்ய சோலார் பேனல்கள் என்று செய்யலாம். இதற்கான செலவு சற்று அதிகம் ஆகும்போலத் தெரிகிறது.

(ஈ) அதிக மின்சாரத்தை இழுக்கக்கூடிய ஏசி, பிரிட்ஜ், மைக்ரோவேவ் அவன், இண்டக்ஷன் அடுப்பு, டிவி ஆகியவற்றை ஒரேயடியாக விட்டுவிடவேண்டும். மெயின்ஸில் கரண்ட் வந்தால் இவை இயங்கும். இல்லாவிட்டால் கோவிந்தா!

நீங்கள் செய்யும் பரிசோதனை முயற்சிகளைப் பற்றியும் எனக்குத் தகவல் தெரிவியுங்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக