புதன், 5 டிசம்பர், 2012

தடை! ஒலிம்பிக் கவுன்சிலில் இந்திய ஒலிம்பிக் சங்கத்திற்கு

இந்திய ஒலிம்பிக் சங்கத்திற்கான நிர்வாகிகள் தேர்வு சமீபத்தில் நடந்தது. இதில் சர்வதேச விதிமுறைகள் கடைபிடிக்கவில்லை என்று குற்றச் சாட்டு எழுந்தது. தேர்தலை முறைப்படி நடத்த வேண்டும் என்று சர்வ தேச ஒலிம்பிக் கவுன்சில் உத்தரவிட்டது. அவ்வாறு நடத்தப்படவில்லை என்றால் இந்திய ஒலிம்பிக் சங்கத்தை சர்வதேச ஒலிம்பிக் கவுன்சிலில் இருந்து தடை  செய்யவும் முடிவு செய்திருந்தது. இந்நிலையில் காமன்வெல்த் போட்டியில் முறைகேடு புகாரில் சிக்கிய லலித் பனோட், இந்திய ஒலிம்பிக் சங்க பொதுச்செயலாளராக போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார். இதையடுத்து லாசேனில் (சுவிஸ்) நடந்த சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி கூட்டத்தில் இந்திய ஒலிம்பிக் சங்கத்தை சஸ்பெண்ட் செய்ய முடிவு எடுக்கப்பட்டது. இந்த சஸ்பெண்ட் மூலம் இந்திய வீரர்கள் ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்பதில் சிக்கல் ஏற்படும். மேலும் இந்திய ஒலிம்பிக் சங்கத்திற்கு சர்வதேச ஒலிம்பிக் கவுன்சிலில் இருந்து நிதிஉதவி கிடைக்காது.


ஒலிம்பிக் கவுன்சில் கூட்டங்களிலும் இந்திய நிர்வாகிகள் பங்கேற்க இயலாது. இந்த சஸ்பெண்ட் குறித்து இந்திய ஒலிம்பிக் சங்க தலைவராக தேர்ந்தெடுக்கப்பட உள்ள அபய்சிங் சவுதாலா கூறுகையில், 4 நாட்களுக்கு முன்பு இந்திய ஒலிம்பிக் சங்க தலைவர் மல்கோத்ரா(பொறுப்பு), சர்வதேச ஒலிம்பிக் கவுன்சிலுக்கு கடிதம் எழுதியிருந்தார். அதில், ஐகோர்ட் உத்தரவுப்படி இந்திய ஒலிம்பிக் சங்க சட்டதிட்டத்தின் அடிப்படையில் தேர்தல் நடைபெறும் என்று கூறியுள்ளார். இந்த தேர்தலை கண்காணிக்க சர்வதேச ஒலிம்பிக் கவுன்சிலில் இருந்து ஒரு பார்வையாளரை அனுப்பி வைக்கும்படி கேட்டிருந்தோம். ஆனால் அவர்கள் பார்வையாளரை அனுப்பாமல் இந்திய ஒலிம்பிக் சங்கத்தை சஸ்பெண்ட் செய்திருக்கிறார்கள் என்றார். இந்திய ஒலிம்பிக் சங்கம் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளதால் இந்திய வீரர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.

அபிநவ் பிந்த்ரா (2008 பீஜிங் ஒலிம்பிக்கில் தங்கம், துப்பாக்கி சுடுதல்): இந்திய ஒலிம்பிக் சங்கத்திற்கு பை  பை... மீண்டும் சுத்தமாக திரும்புவாய் என்று நம்பிக்கையுடன் இருக்கிறோம். விஜயேந்தர்சிங் (பீஜிங் ஒலிம்பிக் வெண்கல பதக்கம்): எதிர்பாராத திருப்பமாக அமைந்துவிட்டது. இந்த பிரச்னையை அதிக நாட்களுக்கு இழுத்து செல்லாமல் விரைவில் முடித்தால் வீரர்களுக்கு நன்மை தரும்.

அஸ்வினி பொன்னப்பா (பேட்மின்டன் வீராங்கனை): சஸ்பெண்ட் உத்தரவால் நாங்கள் தான் பாதிக்கப்பட்டிருக்கிறோம். ஒலிம்பிக் போட்டியில் இந்திய கொடியின் கீழ் பங்கேற்காமல் ஒலிம்பிக் கொடியின் கீழ் பங்கேற்றால் தேசப்பற்று எப்படி இருக்கும்? ஒவ்வொரு வீரருக்கும் ஒலிம்பிக்கில் பங்கேற்பது ஒரு கனவாக இருக்கும். இந்த பிரச்னைக்கு இந்திய ஒலிம்பிக் சங்கம் தான் பொறுப்பேற்க வேண்டும். வீரர்கள் பாதிக்கப்படக்கூடாது.

மகேஷ்பூபதி (டென்னிஸ்):
ஏற்கனவே நான் தடை செய்யப்பட்டிருந்தேன். இப்போது இந்திய ஒலிம்பிக் சங்கம் சஸ்பெண்ட் செய்யப்பட்டிருக்கிறது. இதுபோன்று நடப்பது சகஜம்தான் என்று அதிகாரிகள் கூறுகின்றனர். என்னதான் நடக்கிறது என்று பொறுத்திருந்து பார்ப்போம்.

ஜாய்தீப் டர்மாக்கர் (துப்பாக்கிசுடும் வீரர்):
இந்திய ஒலிம்பிக் போட்டி மட்டுமல்லாமல் மற்ற போட்டிகளிலும் பங்கேற்பதில் சிக்கல் ஏற்படும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக