சென்னை: ""தலித்துகளை இழிவுபடுத்தும் ராமதாஸை கண்டித்து, பா.ம.க., மாவட்டச்
செயலர் மற்றும் அடிப்படை உறுப்பினர் பதவிகளிலிருந்து விலகுகிறேன்,'' என
வேலூர் வட மேற்கு மாவட்டச் செயலர் சாமுவேல் செல்லபாண்டியன் கூறினார்.
செல்லபாண்டியனின் முடிவால், பா.ம.க.,வில் இருந்த ஒரே தலித் மாவட்டச்
செயலரையும் அக்கட்சி இழந்துள்ளது.
இதுகுறித்து, செல்லபாண்டியன் கூறியதாவது: தருமபுரி நாயக்கன் கொட்டாயில்
தலித்கள் மீது வன்னியர்கள் நடத்திய தாக்குதலில், 400 குடிசைகள்
எரிக்கப்பட்டன. தலித் மக்களின் நகை, பணம் மற்றும் உடமைகள்
கொள்ளையடிக்கப்பட்டன.
இச்சம்பவத்துக்கு, கண்டனமோ, வருத்தமோ, ஆறுதலோ தெரிவிக்காத ராமதாஸ், தலித்
மக்களை குற்றம்சாட்டுவதோடு, இழிவுபடுத்தும் வேலையையும் மேற்கொண்டுள்ளார்.
தலித்துக்கு எதிராக, பிற ஜாதியினரை திரட்டும் பணியிலும் ஈடுபட்டுள்ளார்.
கடந்த பொதுத்தேர்தலில் ஏற்பட்ட தோல்வியால், ஜாதி அரசியலை கையில்
எடுத்துள்ளார். குறிப்பாக, தலித் மக்களை, வன்னிய மக்களிடமிருந்து
பிரிக்கும் சூழ்ச்சியை செய்து வருகிறார். இதற்கு, வன்னிய மக்கள்
பலியாகமாட்டார்கள்.
பெரியார், அம்பேத்கர் பெயரை சொல்வதற்கு ராமதாஸுக்கும் எவ்வித
தகுதியுமில்லை. பா.ம.க.,வில் இருக்கும் தலித் மக்கள் கடும் அதிருப்தியில்
உள்ளார்கள். அவர்களும், கட்சியிலிருந்து விரைவில் வெளியேறுவார்கள்.
இவ்வாறு, செல்லபாண்டியன் கூறினார். இவருடன், ஒன்றிய செயலர், மாவட்ட இளைஞர்
அணி செயலர் உள்ளிட்டோரும் பா.ம.க.,விலிருந்து விலகுவதாக அறிவித்தனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக