புதன், 12 டிசம்பர், 2012

தமிழகத்தில் கால் பதிக்கும் வால்மார்ட்..

சென்னை: தமிழகத்தில் கால்பதிக்கும் வால்மார்ட் நிறுவனத்தை எதிர்த்து டிசம்பர் 26ம் தேதி சென்னை அண்ணாநகர் வால்மார்ட் அலுவலம் முன்பு முற்றுகைப் போராட்டம் நடத்தப்படும் என்று ஜி.ராமகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கை:
தமிழகத்தில் வால்மார்ட் நிறுவனம் தனது கடைகளைத் திறப்பதற்கு முயற்சிகள் செய்வதாக வரும் செய்திகள் அதிர்ச்சி அளிக்கிறது. சென்னை புறநகர் பகுதியில் திருவேற்காடு நகராட்சி பள்ளிக்குப்பத்தில் சுமார் 1 லட்சம் சதுர அடி அளவில் வால்மார்ட் நிறுவனத்திற்காக சேமிப்புக்கிடங்கு கட்டப்படுவதாகவும் அண்ணா நகரில் மார்க்கெட்டிங் அலுவலகம் அமைப்பதற்கான பணி நடைபெறுவதாகவும் செய்திகள் வருகின்றன. oneindia.in

பாரதி வால்மார்ட் நிறுவனம் பல சில்லறை வணிகர்களை அணுகி அவர்களுக்குத் தேவையான பொருட்களை குறைந்தவிலையில் தருவதாக கூறி அவர்களை உறுப்பினர்களாக பதிவு செய்து வருகிறது என்றும் இம்மாத இறுதிவரை இந்தப்பதிவு நடக்கும் என்றும் அப்படி சேருகிறவர்களுக்கு தற்காலிக அடையாள அட்டைகளை வழங்கி வருவதாகவும் தெரிகிறது.
தமிழகத்தில் சில்லறை வணிகத்தில் அன்னிய மூலதனத்தை, வால்மார்ட் போன்ற நிறுவனங்களை அனுமதிக்க மாட்டோம் என்ற தமிழக அரசின் முடிவையும் மீறி இது நடைபெறுகிறது. இத்தகைய புறவழி நடவடிக்கைகளை தடுத்து நிறுத்திட, டிசம்பர் 26 அன்று வால்மார்ட் அலுவலகம் முன்பு முற்றுகைப் போராட்டம் நடத்துவது என்று மார்க்சிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு முடிவு செய்துள்ளது.
தமிழக அரசு இப்பிரச்னையில் உண்மைத் தன்மையை கண்டறிந்து திருவேற்காடு மற்றும் அண்ணாநகர் பகுதியில் மட்டுமின்றி தமிழகத்தின் வேறு பகுதிகளிலும் வால்மார்ட் உள்ளிட்ட இதர அன்னிய நிறுவனங்கள் இத்தகைய முயற்சியில் ஈடுபடுவதை தடுத்து சில்லரை வர்த்தகத்தை, வர்த்தகர்களை பாதுகாத்திட உடனடியாக உறுதியான நடவடிக்கைகளை எடுத்திட வேண்டும் என்றும் மார்க்சிஸ்ட் கட்சி அந்த அறிக்கையில் கேட்டுக்கொண்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக