செவ்வாய், 11 டிசம்பர், 2012

பிடிவாரண்ட் எச்சரிக்கை கோர்ட்டில் சசி ஆஜர்

பெங்களூர்: தமிழக முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கில் இன்று நேரில் ஆஜராகாவிட்டால் கைது செய்ய பிடிவாரண்ட் பிரப்பிக்கப்படும் என்று பெங்களூர் சிறப்பு நீதிமன்றம் அதிரடியாக எச்சரித்ததையடுத்து உடனடியாக இன்று பெங்களூர் நீதிமன்றத்தில் சசிகலா ஆஜரானார்.
ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு வழக்கு பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. நீண்டநாட்களாக நடைபெற்று வரும் இந்த வழக்கில் பலமுறை வாய்தாக்கள், ஒத்திவைப்புகள் நடந்துள்ளன.
நேற்றும் வழக்கு விசாரணைக்கு வந்தபோது குற்றம் சாட்டப்பட்ட சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் ஆஜராகவில்லை. இதனால் கோபமடைந்த புதிய நீதிபதி பாலகிருஷ்ணா சசிகலா, இன்றைய வழக்கு விசாரணைக்கு சசிகலா ஆஜராகாவிட்டால் பிடிவாரண்ட் பிறப்பிக்கப்படும் என்று எச்சரிக்கை விடுத்தார்.

இந்த வழக்கில் ஏற்கனவே காலதாமதம் ஏற்பட்டிருக்கிறது. அதனால் நாளை சசிகலா கண்டிப்பாக ஆஜராக வேண்டும். இல்லையென்றால் பிடிபிவாரண்ட் பிறப்பிக்கப்படும் என்று கூறினார். இதேபோல் இளவரசி, சுதாகரன் ஆகியோரும் ஆஜராக வேண்டும் என்றும் நீதிபதி உத்தரவிட்டார்.
கைது நடவடிக்கைக்கு பயந்து போன சசிகலா வேறு வழியின்றி புதிய நீதிபதி பாலகிருஷ்ணா முன் முதல் முறையாக இன்று பெங்களூர் சிறப்பு நீதிமன்றத்தில் நேரில் ஆஜரானார்.
நேற்றைய விசாரணையின் போது சசிகலா தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், சொத்துக் குவிப்பு வழக்கு தொடர்பாக கைப்பற்றப்பட்டு பயன்படுத்தப்படாத ஆவணங்கள் மற்றும் பொருட்களை திரும்ப ஒப்படைக்க வேண்டும் என்று கோரி மனுதாக்கல் செய்திருந்தார்.
இம் மனுவை இன்று தள்ளுபடி செய்த நீதிபதி வழக்கின் விசாரணையை வரும் 19ம் தேதிக்கு ஒத்திவைத்தார். மேலும் வரும் 19ம் தேதிமுதல் சசிகலாவிடம் கேள்விகள் கேட்கப்பட உள்ளன.
இந்த வழக்கில் ஏற்கெனவே ஜெயலலிதா 1,333 கேள்விகளுக்கு பதில் அளித்திருக்கிறார். சசிகலாவிடம் இதுவரை 632 கேள்விகள் கேட்கப்பட்டிருக்கின்றன. இன்னும் 300க்கும் மேற்பட்ட கேள்விகள் கேட்கப்பட வேண்டியது உள்ளது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக