சனி, 8 டிசம்பர், 2012

சீனாவுக்கு விசா இல்லாமல் போகலாம்! ஆனால் இந்தியர்களுக்கு அல்ல

பீஜிங்: விசா இல்லாமல் பீஜிங் நகரத்தை சுற்றிப்பார்க்கும் சலுகையை சீன அரசு அறிவித்துள்ளது. ஆனால் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, உள்ளிட்ட அண்டை நாடுகளுக்கு இந்தச் சலுகை மறுக்கப்பட்டுள்ளது.
சீனாவில் சுற்றுலாவை மேம்படுத்தும் வகையில் அரசு புது திட்டம் ஒன்றை நேற்று அறிவித்தது. அதன்படி, தலைநகர் பீஜிங்கில் மட்டும் 72 மணி நேரம் தங்குவதற்கு விசா தேவையில்லை. 2013 ஜனவரி மாதம் முதல் இந்த திட்டம் அமலுக்கு வருகிறது. விசா இல்லாமல் பீஜிங்கை சுற்றிப்பார்க்கும் சிறப்பு அனுமதி 45 நாடுகளை சேர்ந்தவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.

அமெரிக்கா, ஐரோப்பா
இத் திட்டத்தில் பெரும்பாலும் அமெரிக்க, ஐரோப்பிய நாடுகளே பட்டியலில் இடம்பெற்றுள்ளன. இத்திட்டத்தின்படி வேறு நாட்டு விசா வைத்திருப்பவர்கள், பீஜிங் வழியாக செல்லலாம். அவர்கள் வழியில் பீஜிங்கில் 72 மணி நேரம் தங்கலாம். இதற்கு டிரான்சிட் அனுமதிக்கு மட்டும் விண்ணப்பம் தரவேண்டும். மற்றபடி விசா தேவையில்லை. ஆனால், பீஜிங் வரும் சுற்றுலா பயணிகள் வேறு எந்த நகரத்துக்கும் செல்ல கூடாது. 72 மணி நேரத்துக்குள் பீஜிங்கை விட்டு வெளியேறிவிட வேண்டும். இந்த சிறப்பு சலுகையினால் 2013ம் ஆண்டு 6 லட்சம் முதல் 8 லட்சம் வரை சுற்றுலா பயணிகள் பீஜிங் வருவார்கள் என்று அரசு எதிர்பார்க்கிறது.
இந்தியாவுக்கு சலுகை கிடையாது
சீனா அறிவித்துள்ள புதிய திட்டத்தின்படி இந்தியா, பாகிஸ்தான், வங்கதேசம், மியான்மர், இலங்கை ஆகிய நாட்டினருக்கும் விசா இல்லாமல் தங்குவதற்கு அனுமதி இல்லை. இந்த நாடுகள் அனைத்துமே சீனாவின் அண்டை நாடுகள் என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக