வெள்ளி, 21 டிசம்பர், 2012

70 எம்.எம். திரையில் பா.ஜ.க. கும்பல் பயன்படுத்தும் மூலதனம் இராமன்

இராமன் தேசிய நாயகனா தேசிய வில்லனா

சிறுபான்மையினர்க்கு எதிரான ஆர்.எஸ்.எஸ்இன் பொய்யும் புரட்டும் – 25

‘கல் – மண்ணால் கட்டப்படும் ஒரு கோவிலுக்காக இந்து போராடவில்லை.  அவனுடைய நாகரிகத்தினை, இந்துத் தன்மையினை, தேசிய உணர்வினைக் காப்பாற்ற வேண்டும் என்பதற்காகத்தான் போராடுகின்றான். ஆனால் முசுலீம்கள் வந்தேறியும் – ஆக்கிரமிப்பாளனும் – கோவிலை இடித்தவனுமான பாபரைப் போற்றுகிறார்கள்; பாரதத்தின் அவதார – தேசிய புருஷனான ஸ்ரீராமரை ஏற்க மறுக்கிறார்கள்.
- பா.ஜ.க. அரசில் விளையாட்டுத்துறை அமைச்சராக இருந்த உமாபாரதி, விஜயபாரதம் எனும் ஆர்.எஸ்.எஸ் இதழில்.
தங்கள் தொழிலை வளர்ப்பதற்காக கடந்த 15 ஆண்டுகளாக ஆர்.எஸ்.எஸ். – பா.ஜ.க. கும்பல் பயன்படுத்தும் மூலதனம் இராமன்.  ஒரு பன்னாட்டு நிறுவனத்தின் மனதை மயக்கும் தேர்ந்த விளம்பர உத்தியைப் போன்று இராமனை முன்வைத்து வரலாறு, பொற்காலம், தேசியம், பெருமிதம், சுதேசி, விதேசி, வந்தேறி என இவர்கள் உருவாக்கிய மோசடிகள் பல. இந்த மோசடிகளே அவர்கள் உருவாக்க விரும்பும் ‘இந்து உணர்வுக்கு’ அச்சாரம்.  பாபரும், பாப்ரி மசூதியும், முசுலீம்களும் ஆக்கிரமிப்பாளர்கள் – தேசத்துரோகிகள் என்று சதி வலை விரித்து அதன் மேலே இராமன், அயோத்தி, இந்து உணர்வு, தேசிய நாயகன் – நாட்டுப்பற்று என்றொரு மாயத் தோற்றத்தை உருவாக்கி வருகிறார்கள்.
இந்து மதவெறியர்களைப் பொறுத்தவரை இந்தியக் குடியுரிமை பெற்று வாழும் ஒருவர் இராமனை ஏற்பதும், வழிபடுவதும் ஒரு நிபந்தனை.  மறுப்பவர்கள் தேசத் துரோகிகள்.  பெரும்பான்மை மக்களிடம் அவர்களே அறியாமல் ‘இந்து உணர்வும் – முசுலீம் வெறுப்பும்’ விஷம் போல ஊடுருவுவதற்கு ‘இராமனின்’ மோசடிச் சித்தரிப்பு ஒரு முக்கியமான காரணம் ஏன்பதை நாம் உணர வேண்டும். அப்படி உணரும்போது இந்த மோசடி அவதாரத்தை வெட்டி வீழ்த்தி வேரறுக்கும் கடமையையும் நாம் ஏற்க வேண்டும்.
70 எம்.எம். திரையில் தேசிய நாயகனாகக் காட்டப்படும் இராமனையும் இந்துப் பொற்காலத்தையும் புரிந்து கொள்ள வேண்டுமெனில் பண்டைய – இடைக்கால – நவீனகால இந்தியாவின் வரலாற்றை – மார்க்சிய அறிவியல் கண்ணோட்டத்துடன் தெரிந்து கொள்வது அவசியம்.  ஆரியர்களின் படையெடுப்பு – நிறவெறி – வர்ண – சாதிவெறி, புராணங்கள் – காப்பியங்கள் – வேத உபநிடதங்கள் சொல்லும் இந்து மதம், தொல்குடி மக்களையும், பண்பாட்டையும் பார்ப்பனியம் கவ்விய வரலாறு, பார்ப்பனியத்தை எதிர்த்து வந்த மதங்கள் – மகான்கள், சமஸ்கிருதமயமாக்கம், மொகலாயர் வருகை, இந்து – முசுலீம் மன்னர்களிடையிலான உறவு, போர், இராச்சியங்களின் தோற்றத்திற்கும் மறைவுக்குமான வரலாற்றுக் காரணங்கள், வெள்ளையர் ஆக்கிரமிப்பு – 1947 பிரிவினை…. என சிந்துசமவெளி நாகரீகம் தொடங்கி இன்று வரை உள்ள வரலாற்றைக் கற்றுணர வேண்டும்.  vinavu.com/

இங்கே ‘அவதார’ இராமன் ஒரு தேசிய நாயகனுக்குரிய பண்புகளைக் கொண்டிருக்கிறானா, ‘ஆக்கிரமிப்பாளன்’ பாபர் ஒரு கொடுங்கோலனாக ஆட்சி நடத்தினாரா என்பதை மட்டும் பரிசீலிப்போம்.
வந்தேறியவர்கள் எல்லாம் ஆக்கிரமிப்பாளர்கள் என்று வாதிட்டால் இந்தியாவின் முதல் வந்தேறிகள் ஆரியர்கள்தான்.  திராவிடர்களையும், நாகர்களையும், இதர பூர்வகுடி மக்களையும் வந்தேறிகளான ஆரியர்கள் வேட்டையாடியதை விவரிக்கும் தொல்கதையே இராமாயணத்தின் மூலக் கதையாகும்.  ஆரிய ஆக்கிரமிப்பின் பெருமிதத்தை விவரிக்கும் ஆந்த மூலத் தொல்கதை இன்று இல்லை.  பின்னர் சில நூற்றாண்டுகள் கழித்து ‘புராண – இதிகாச’ காலத்தில் அந்தத் தொல்கதை ஒரு காப்பியத்துக்குரிய அம்சங்களுடன் வால்மீகி இராமாயணமாக உருப்பெற்றது.  அதுவும் வரலாறு நெடுக இடைச்செருகல்களோடும் திருத்தங்களோடும் மாறிக் கொண்டே வந்தது.  கடைசியாக தூர்தர்சனில் காட்டப்பட்ட இராமானந்தசாகரின் இராமாயணத்திற்கும், வால்மீகியின் கதைக்கும் மலைக்கும் மடுவுக்கும் உள்ள வேறுபாடு உள்ளது.
அமெரிக்கா ஆதிக்கம் செய்யும் இன்றைய உலகில் ஹாலிவுட் படங்கள் கூட தமிழில் ‘டப்’ செய்யப்பட்டு உசிலம்பட்டி போன்ற சிறு நகரங்களில் வெளியிடப்படுகின்றன.  அதைப் போல ஆரியர்கள் ஆக்கிரமிப்பு செய்த இந்தியத் துணைக் கண்டத்தில் இராமாயணமும் எல்லா வட்டார மொழிகளிலும் இயற்றப்பட்டது.  இப்படி ஆரியர்களின் இதிகாசங்களும், புராணங்களும் வேத – உபநிடதக் கருத்துக்களும் இந்திய மொழிகளிலும் ஆடல் – பாடல் கலைகளிலும் ஊடுருவியதன் காரணம் ஏன்ன? கல்வியும், அறிவும் மறுக்கப்பட்ட பெரும்பான்மை மக்களுக்குப் பார்ப்பனியத்தின் வருண – சாதி ‘ஒழுக்கத்தை’க் கற்றுத் தருவதற்கும், வாழ்வதற்கும், கண்காணிப்பதற்கும், மீறினால் தண்டனை கிடைக்கும் என்று எச்சரிப்பதற்கும் அவை பயன்பட்டன.  இப்படித் தெற்காசியாவின் பல மொழிகளில் விதவிதமாக இயற்றப்பட்ட ஏல்லா இராமாயணங்களையும், கண்ணில் விளக்கெண்ணெய் ஊற்றிப் பார்த்தாலும் இராமனின் ஆரியப் பண்பு மட்டும் பெரிதாக மாறவில்லை.
தனது இராசகுரு வசிட்டரின் உத்தரவுக்கேற்ப சூத்திரன் சம்பூகனை வெட்டிக் கொன்றான் இராமன்.  காரணம், பார்ப்பனப் புரோகிதர்களின் உதவியின்றி நேரடியாக இறைவனை அறிய சூத்திரன் சம்பூகன் தவம் செய்தான் என்பதே.  தமது நிலங்களை ஆக்கிரமிப்பு செய்த விசுவாமித்திரரை எதிர்த்து பழங்குடியினர் போராடுகின்றனர்.  இராமனோ அசுரப் பழங்குடியினரைக் கொன்று விசுவாமித்திரரைக் காப்பாற்றுகிறான்; போர்க்கலையில் வல்லவனான வாலியை மறைந்து நின்று கொல்கிறான்; மனைவி சீதையின் மேல் சந்தேகம் கொண்டு அவளை உயிரோடு கொளுத்திக் கொல்கிறான்.  இப்படி இந்திய மருமகள்கள் ஸ்டவ் வெடித்துச் சாகடிக்கப்படும் கொடூரத்தைத் தொடங்கியவன் இராமன்தான்.  மொத்தத்தில் இந்தியத் தொல்குடி மக்களையும், இராவணன் போன்ற அவர்களது தலைவர்களையும் வேட்டையாடிய ஆரிய இக்கிரமிப்பின் சின்னம்தான் இராமன்.
இன்றைக்கும் தென்னிந்தியா, கிழக்கிந்தியா, வடமேற்கு இந்தியா, வடகிழக்கு இந்தியாவில் வாழும் பெரும்பான்மை மக்களிடம் இராம வழிபாடு கிடையாது.  எனவே நிறவெறி, வருண வெறி, சாதிவெறி, இனவெறி, ஆணாதிக்க வெறி என பார்ப்பனியத்தின் பண்புகளைக் கொண்டு உருவெடுத்த இராமனை இந்நாட்டு மக்கள் ஏவரும் தேசிய நாயகனாக ஏற்க முடியாது.  மாறாக தேசிய வில்லனாகக் கருதி வெறுக்கத்தான் முடியும்.
ஒரு பேரரசனாக மாற வேண்டும் என்று எல்லா மன்னர்களும் ஆசைப்பட்டதைப் போல முகாலய மன்னர் பாபரும் விரும்பினார்.  இராமனின் ஆரியப் பண்புகள் எதையும் பாபரிடம் காண முடியாது.  பாபரை ஆதரித்தும், எதிர்த்தும் போரிட்ட மன்னர்களில் இந்துக்களுமுண்டு, முசுலீம்களும் உண்டு.  பல போர்களில் பாபருக்கு வெற்றியைத் தந்தவர்கள் அவருடைய இந்துத் தளபதிகள்.  ஏராளமான கோவில்களுக்கும், பார்ப்பனர்களுக்கும் பாபர் மானியமளித்ததை வரலாறு கூறுகிறது.  பாபரின் வரலாற்றைக் கூறும் ‘பாபரிநாமா’ ஏன்ற அரிய வரலாற்று நூலில் அவர் இந்துக் கோவில்களை இடித்ததாகச் செய்திகளோ, குறிப்புகளோ இல்லை.  ஆபாசம் ஏனக் கருதி, குவாலியருக்கு அருகே இருந்த நிர்வாண சமணச் சிலைகளை மட்டும் அவர் இடிக்கச் சொன்னதாக அந்த நூல் கூறுகிறது.
அதே நூலில் கி.பி 11.01.1527 அன்று தனது புதல்வர் ஹூமாயூனுக்கு விட்டுச் சென்ற புகழ்பெற்ற உயிலில் பாபர் பின்வருமாறு கூறுகிறார் :
‘‘அருமை மகனே! வகை வகையான மதங்களைப் பின்பற்றுபவர்கள் இந்தியாவில் வாழ்கிறார்கள்.  இத்தகைய நாட்டின் அரசாட்சியை மன்னாதி மன்னராம் கடவுள் உன்னிடம் ஒப்படைத்ததற்கு நீ நன்றி செலுத்த வேண்டும்.  ஆகவே நீ பின்வருவனவற்றைக் கடமைகளாக அமைத்துக் கொள்”
“நீ உனது மனதைக் குறுகிய மத உணர்வுகள், தப்பெண்ணங்கள் பாதிக்க அனுமதிக்கக் கூடாது.  மக்களின் எல்லா பிரிவினர்களும் பின்பற்றுகின்ற மதசம்பந்தமான மென்மையான உணர்ச்சிகளுக்கும் மதப்பழக்கங்களுக்கும் நீ உரிய மதிப்புக் கொடுத்து பாரபட்சமற்ற முறையில் நீதி வழங்க வேண்டும்.”
“நீ மற்ற சமூகத்தினரின் வழிபாட்டுத் தலங்களை ஒரு போதும் இடித்துச் சேதப்படுத்தக் கூடாது.  நீ எப்போதும் நியாயத்தை நேசிப்பவனாக விளங்க வேண்டும்.  இதனால் மன்னருக்கும் மக்களுக்குமிடையே சுமுகமான இனிய உறவு நிலவ முடியும்.  அப்போதுதான் அமைதியும் திருப்தி உணர்வும் நிலைபெறும்.”
இந்து மதவெறியர்களின் இன்றைய விஷம் கக்கும் வெறிப்பேச்சையும், 500 ஆண்டுகளுக்கு முந்தைய ஒரு மன்னனின் மத நல்லிணக்கச் சிந்தனையையும் ஒப்பிட்டுப் பாருங்கள்;  இராமன் மற்றும் அவனுடைய வாரிசுகளின் யோக்கியதை என்ன என்பது தெரியவரும்.  பாபரின் இந்த உயில் பார்ப்பனீயத்தின் புராணப் புரட்டல்ல;  மறுக்க முடியாத வரலாற்று ஆவணமாகும்.  மகனுக்கு விட்டுச் செல்லும் உயிலில் அந்த மன்னன் பொய் எழுதத் தேவையில்லை.  ஒரு வேளை பாப்ரி மசூதி இருந்த இடத்தில் ராமன் கோவில் இருந்து அதை இடித்திருந்தால் மறைக்க வேண்டிய அவசியமும் பேரரசனான பாபருக்கு அன்று இல்லை.  இருபதாம் நூற்றாண்டில் ஆர்.எஸ்.எஸ். எனும் கிறுக்குக் கூட்டம் தன்மீது குற்றம் சாட்டும் என்று அவர் எதிர்பார்த்திருக்கவும் வாய்ப்பில்லை.  பார்ப்பன ரிஷிகளுக்கு மட்டுமே உரித்தான ஞான திருஷ்டிப் பார்வை பாபருக்குத்தான் கிடையாதே!
என்றாலும் ஆர்.எஸ்.எஸ். கூட்டம் பாபர் மற்றும் ஏனைய முகலாய மன்னர்களைப் பற்றி உருவாக்கியுள்ள பொய்களும், கட்டுக் கதைகளும் கொஞ்ச நஞ்சமல்ல.  பாபருக்குப் பின்வந்த அக்பர் மதங்களை ஒன்றுபடுத்த முயற்சி செய்தார்.  தன் கால மதங்களில் தனக்குத் தெரிந்த நல்ல அம்சங்களை இணைத்து அவர் உருவாக்கிய ‘தீன் இலாஹி’ ஏனும் புதிய மதம் தோல்வியுற்றாலும் அக்காலத்தில் அது ஒரு முற்போக்கான முயற்சியாகும்.  பார்ப்பனர்களின் கடும் எதிர்ப்பு இருப்பினும், சதி எனும் உடன்கட்டை ஏறும் கொடிய பழக்கத்தை அக்பர் தடை செய்தார்.  இதை அவரது வரலாறு கூறும் ‘அயினி அக்பர்’ நூல் தெரிவிக்கின்றது.  பொதுவாகப் பரிசீலிக்கும் போது எல்லா மன்னர்களையும் போல முகலாய மன்னர்களும் சுகபோகிகளாக, சுரண்டல் பேர்வழிகளாக இருந்திருக்கிறார்கள்.  ஆயினும் ஆட்சியிலும், சமூக நோக்கிலும் இராமனைக் காட்டிலும் முன்னுதாரணமானவர்களாகவே அவர்கள் இருந்தனர்.
மனிதகுல வரலாற்றில் ‘தேசிய நாயகர்கள்’ ஏன்று போற்றப்படும் தலைவர்கள் இருந்திருக்கிறார்கள்.  தத்தமது கால மாற்றத்தையும் மக்கள் போராட்டங்களையும் புரிந்து கொண்டு பங்கெடுத்தும் முன்னெடுத்தும் சென்றிருக்கிறார்கள்.  வரலாற்றில் இத்தகைய தனித்தலைவர்களின் பங்கு முதன்மையானது இல்லையென்றாலும், முக்கியமானதுதான்.
தமது அடிமைத்தனத்தையே உணராத ரோமாபுரி அடிமைகளை அணி திரட்டிப் போராடச் செய்த ஸ்பார்ட்டகஸ், அடிமைகளின் ஏக்கத்தைப் போக்கப் பாடுபட்ட ஏசு கிறிஸ்து, அரேபிய நாடோடி இன மக்களை நெறிப்படுத்திய முகமது நபி, பார்ப்பனியத்தின் கொடூரச் சடங்குகளை ஒழிக்கவும், ஒரு சகோதரத்துவச் சமூகத்தைத் தோற்றுவிக்கவும் கனவு கண்ட புத்தர், இத்தாலியை ஒன்றுபடுத்துவதற்காகப் போராடிய கரிபால்டி, இங்கிலாந்து தொழிலாளர் இயக்கத்தின் தந்தையெனப் போற்றப்படும் இராபர்ட் ஓவன், முதலாளித்துவ ஜனநாயகக் கூறுகளை வழங்கிய பிரெஞ்சுப் புரட்சித் தலைவர்கள், அமெரிக்க விடுதலைக்குக்குத் தலைமை தாங்கிய ஜார்ஜ் வாஷிங்டன், நிறவெறியை ஏதிர்த்து அமெரிக்க உள்நாட்டுப் போர் கண்ட ஆப்ரகாம் லிங்கன், அமெரிக்க ஏகாதிபத்தியத்தை சாகும் வரை எதிர்த்துப் போராடிய சே குவேரா, மதவாதிகளின் பிடியிலிருந்து துருக்கியை விடுவித்த கமால்பாஷா, வெள்ளை நிறவெறியை எதிர்த்து தன் இளமையைச் சிறையில் கழித்த நெல்சன் மண்டேலா, காலனிய எதிர்ப்பில் இந்திய இளைஞர்களிடம் புது இரத்தம் பாய்ச்சிய பகத்சிங், கீழத்தஞ்சையின் கூலி விவசாயிகளைப் போராட அணிதிரட்டிய சீனிவாசராவ் மற்றும் அம்பேத்கர், பெரியார் போன்ற தலைவர்களையெல்லாம் அந்தந்த நாட்டு, மத, இன மக்கள் கொண்டாடுகிறார்கள்.
மனிதகுலம் எதிர்காலத்தில் பொதுவுடைமைச் சமூகமாக மாறுவதற்கு வழிகண்ட மார்க்ஸ், ஏங்கெல்ஸ், லெனின், ஸ்டாலின், மாவோ ஆகியோரை அன்போடு மார்க்சியப் பேராசான்கள் என்று கம்யூனிஸ்டுகள் கொண்டாடுகின்றனர்.  இப்படி வரலாறு நெடுகிலும் இன, தேசிய, மத, ஜனநாயக, புரட்சிகரத் தலைவர்களை மனிதகுலம் உருவாக்கியிருக்கிறது.
இனால் இந்துமத வெறியர்கள் கட்டளையிட்டு தேசிய நாயகனாய்ப் போற்றச் சொல்லும் இராமனிடம் என்ன இருக்கிறது? முதலில் இராமாயணம் ஒரு வரலாற்று உண்மையல்ல.  ஒரு வேளை இராமனின் கதை உண்மையென்றே வைத்துக் கொண்டாலும், அவன் செய்த ஆபூர்வச் செயல்கள் என்ன? தந்தையின் வாக்கைக் காப்பாற்ற, சித்தியின் பேச்சைக் கேட்டு காட்டுக்குப் போனான்; திரும்பி வரும் வரை தம்பியை ஆளச் செய்தான்; தொலைந்து போன மனைவியை மீட்க மாபெரும் போரை நடத்தினான்; மீண்டும் அயோத்தியை ஆண்டான்.  இருப்பினும் பல்வேறு இராமாயணங்கள், இராம பக்தர்கள், உபன்யாசகர்கள், ஆர்.எஸ்.எஸ். கும்பல் ஆகிய அனைவருமே புகழ்ந்துரைக்கும் இராமனின் மாபெரும் பெருமை என்னவென்றால், அவன் ஏகபத்தினி விரதன் என்பதுதான்.  போகட்டும், அதையும் உண்மையென்றே ஏற்போம்.  ஒரு பெண்டாட்டியுடன் வாழ்ந்தான் என்ற ‘அரிய’ சாதனைக்காக ஒருவனை தேசிய நாயகனாக ஆக்க வேண்டும் என்றால் அந்த மதம் அல்லது நாட்டின் யோக்கியதையை என்னவென்பது?
ஆகையினால் இராமனைப் பற்றிப் புகழ்ந்துரைக்கப்படும் தேசிய – அவதாரக் கதைகளை எதிர்த்து முறியடிப்பது என்பது பார்ப்பன இந்து மதத்தின் சமூக அமைப்பை எதிர்த்துப் போராடும் விடுதலைப் போராட்டமே அன்றி வெறும் நாத்திகப் பிரச்சாரமல்ல.  இராமன் நாயகனல்ல; தேசிய வில்லன்!
- தொடரும்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக