புதன், 19 டிசம்பர், 2012

முதல்வரின் ஹெலிகாப்டர், 6 விமானங்கள் எரிந்து கருகின! ஹைதராபாத் ஏர்போர்ட் விபத்து!!

Viruvirupu
ஐதராபாத் விமான நிலையத்தில் இன்று அதிகாலை ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் ஆந்திர முதல்வரின் ஹெலிகாப்டர் உட்பட, 6 விமானங்கள், ஒரு ஹெலிகாப்டர் ஆகியவை எரிந்தன. தீ விபத்துக்கு காரணம் நாசவேலையா என விசாரணை நடத்த, ஆந்திர முதல்வர் உத்தரவிட்டுள்ளார். ரூ.200 கோடி அளவுக்கு சேதம் இருக்கும் என தெரிகிறது.
ஆந்திர தலைநகரமான ஐதராபாத்தில் உள்ள பேகம்பேட் விமான நிலையத்தில் பயிற்சி விமானங்கள், அரசு விமானங்கள் மற்றும் ஹெலிகாப்டர்கள் நிறுத்தி வைக்கப்படுவது வழக்கம். நேற்றிரவும் வழமை போலவே அவை அங்கு பார்க் செய்யப்பட்டிருந்தன. இன்று அதிகாலை 2.30 மணியளவில் இந்த விமான நிலையத்தில் திடீரென தீ பிடித்தது.
தீ பிடித்த இடத்தில் விமானங்களுக்கான வெள்ளை பெட்ரோல் பேரல்களும் இருந்தன. இதனால், தீ மளமளவென பரவியது. பயங்கர சத்தத்துடன் பேரல்கள் வெடித்து சிதறின.
மூன்று தடவைகள் பயங்கர வெடிச்சத்தம் கேட்டதால் அப்பகுதி மக்கள் அலறியபடி வீட்டுக்குள் இருந்து வெளியே ஓடிவந்தனர். சம்பவ இடம் அருகே சென்றனர். இதற்கிடையில் தீ விபத்து குறித்து அறிந்த விமானத் துறை அதிகாரிகள் உடனடியாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். 10 தீயணைப்பு வாகனங்கள் விரைந்து வந்தன. சுமார் 4 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.

தீ விபத்தில் 5 பயிற்சி விமானங்கள், அரசு விமானம், ஆந்திர முதல்வரின் ஹெலிகாப்டர் ஆகியவை கருகியதாக கூறப்படுகிறது.
விபத்து குறித்து ஆந்திர முதல்வர் கிரண்குமார் ரெட்டிக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தீ விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்த சி.பி.சி.ஐ.டி.க்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இதில் அரசு விமானங்களும் கருகியதால், ஆந்திர மாநில முதன்மை செயலாளர் தலைமையில் உடனடியாக நேரடி விசாரணை நடத்தவும் உத்தரவிடப்பட்டுள்ளது. விபத்துக்கு நாசவேலை காரணமா என விசாரணைக்கு பிறகுதான் தெரியவரும் என்று விமான நிலைய உயரதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக