திங்கள், 26 நவம்பர், 2012

Laurie Baker பேக்கர் வீடு -ஒரு மறுதரப்பு

வாழ்க்கை படைப்பூக்கமும் புதுமைநாட்டமும் கொண்டவர்களாலேயே முன்னெடுக்கப்படுகிறது 
பெருமதிப்புக்குரியஜெயமோகன்,
‘ஜெயஸ்ரீயின் வீடு’ பதிவைக் கண்டேன். லாரி பேக்கர் கொள்கைகள் பற்றி உங்கள் வலைப்பக்கத்துக்கு வெளியே எதுவும் படித்ததில்லை. ஆனால் இந்த வீட்டைப் பார்க்கும்போது சில அடிப்படைக் கோளாறுகள் தென்பட்டன. வீட்டு சன்னல்களின் அளவைப் பாருங்கள், வேலூர் போல் வறுத்தெடுக்கும் ஊரில் கருங்கல் சுவர் நல்லதுதான், அதற்காகக் காற்றே புக முடியாத அளவுக்கு சிறிய சன்னல்கள் claustrophobicஆக தோன்றவில்லையா உங்களுக்கு? உள் அறையில் விட்டத்தைத் தொட்டு நிற்கும் சன்னல்களைப் பார்த்தால் சிறைக்குள் சென்றது போன்ற பிரமை!

தேவையில்லாத வெப்பத்தைக் குறைக்கும், வீட்டுக்குள் இயற்கையான வெளிச்சத்தை அள்ளிக்கொண்டுவரும் விசாலமான சன்னல்கள்;
மட்கும் கழிவுகளை உரமாக்கும், மழை நீரை அறுவடை செய்யும், சூரிய ஒளியைக் கொண்டு மின்சாரம் தயாரிக்கும் அமைப்புகள்;
இவை எல்லாம் நவீன கட்டிடங்களில்தான் சாத்தியம். என்னுடைய கனவு வீட்டில் இவற்றுக்கு தான் முன்னுரிமை, கற்கள் சீனாவிலிருந்து வந்தாலும் பரவாயில்லை!
பணிவன்புடன்,
லக்ஷ்மணன்

அன்புள்ள லட்சுமணன்,
உங்கள் கடிதம் ஒரு சராசரி தமிழகக் குடும்பத்தலைவர் வீடுபற்றிக் கொண்டிருக்கும் நம்பிக்கைகள் சந்தேகங்கள் சார்ந்தவை. அவற்றைப் பரிசீலிக்க நீங்கள் முயலவுமில்லை
ஒன்று, ஜெயஸ்ரீயின்வீடு போதுமான அளவுக்கு சன்னல்கள் கொண்டது, போதுமான அளவுக்கு ஒளியும் காற்றும் உள்ளே உலவக்கூடியது. அவற்றைக் கணக்கில்கொண்டே அது அமைக்கப்பட்டுள்ளது.
பொதுவாக இந்த சன்னல்களைப்பற்றி நம்மிடையே இன்று ஒரு பெரிய மாயக்கருத்து உண்டு- அதை நானும் கொண்டிருந்தேன், என் வீட்டைக்கட்டும்போது.
இன்று நம்மில் பலர் சன்னல்களே இல்லாமல் வீட்டைக் கட்டிக்கொள்கிறோம். காரணம் பொதுவான சுவர்களைக்கொண்டு அடுத்தடுத்துக் கட்டப்படும் வீடுகளே இங்கே அதிகம். முன்னாலும் பின்னாலும் உள்ள திறப்புகள் மட்டுமே சாத்தியம்.
அந்த வீடுகளுக்குப் பழகிய நம்மிடம் கட்டிட வரைவாளர்கள் நிறைய சன்னல்கள் வைப்பதுபற்றிப் பேசும்போது நாம் உடனே ஆகா, சன்னல்கள் எவ்வளவு வேண்டுமானாலும் வையுங்கள் என்கிறோம். ஆனால் நம் நகரங்களில் வீடுகள் ஒன்றோடொன்று இடைவெளியில்லாமல் ஒட்டிச்செறிந்திருக்கும். சன்னலுக்கு அப்பால் மூன்றடி தொலைவில் பக்கத்துவீட்டின் சுவர் இருந்தால் சன்னல்கள் இருந்தாலும் இல்லாவிட்டாலும் சமம்தான் என உணர்வதில்லை.
நம்முடைய பெரும்பாலான வீடுகளில் ஜன்னல்களைத் திறக்கவே முடிவதில்லை. ஜன்னல்களுக்கு வெளியே ஒரு திறந்த இடம், மரங்களோ செடிகளோ இல்லாவிட்டாலும் பரவாயில்லை, நமக்கு அபூர்வமாகவே அமைகிறது. இந்நிலையில் இப்படி சுவரெல்லாம் ஜன்னலாக வைத்துக்கட்டுவது ஒரு வகை மூடநம்பிக்கைதான்
ஜெயஸ்ரீயின் வீடு அரைஏக்கர் சுற்றளவில் தோட்டம் சூழ அமைக்கப்பட்டது. அதற்கு இருக்கும் ஒவ்வொரு சன்னலும் பயனுள்ளது. ஒளியையும் காற்றையும் அளிப்பது.அதற்குத் தேவையான சன்னல்கள் அதற்கு உள்ளன.

நமக்கு வீட்டு மாதிரிகளைக் காட்டும்போது புகைப்படங்களில் எல்லா சன்னல்களையும் விரியத்திறந்துபோட்டு , ஆனால் காமிராவில் ஃபில்டர் போட்டு, அழகாக எடுக்கப்பட்ட புகைப்படங்களையே காட்டுகிறார்கள். கட்டிடங்களைப்பற்றிய படங்களிலும் எப்போதும் நாம் பார்ப்பது இந்தவகைப் படங்களை. சன்னல்களைப்பற்றிய நம் பாமர ஈடுபாடு இப்படி உருவானதே.
நாம் செல்லும் பெரும்பாலான இல்லங்களில் சன்னல்கள் நிறைய இருந்தாலும் அவற்றைத் திறப்பதே இல்லை. என் வீடு முழுக்க ஃப்ரெஞ்சு சன்னல்கள். அவற்றில் கால்வாசி சன்னல்களையே திறக்கிறேன். பல சன்னல்களை வருடக்கணக்காகத் திறந்ததில்லை. அவற்றை ஏன் வைத்தேன் என நான் ஆச்சரியப்பட்டதுண்டு
நான் செல்லும் வீடுகளில் எல்லாம் இதை கவனிப்பேன். ஏன் எவருமே சன்னல்களைத் திறப்பதில்லை? பின்பு நான் ஒரு புகழ்பெற்ற கட்டிடவரைவாளருடன் பத்மநாபபுரம் அரண்மனைக்குச் சென்றபோது இதைப்பற்றி விவாதித்தேன்.ஏன் நம்முடைய மூதாதையர் அத்தனை பெரிய, திறந்த சன்னல்களை அமைக்கவில்லை?
பிரெஞ்சு சன்னல்கள் ஐரோப்பிய-அமெரிக்க சூழலுக்காக உருவாக்கப்பட்டவை. அங்குள்ள தட்பவெப்ப நிலை குளிரானது, வானம் வருடத்தில் பெரும்பகுதி நாட்களுக்கு இருண்டிருக்கும். ஆகவே வெளியே இருந்து வரும் ஒளியை முடிந்தவரை உள்ளே விடும்படி வீடுகள் அமைக்கப்பட்டன. பெரிய கண்ணாடிச்சன்னல்களுக்கான அவசியம் அப்படி உருவானதே.
அதேபோல அங்குள்ள கோடைகாலம் காற்றே இல்லாதது. அசைவற்றது. அதற்குக் காற்றை முழுக்க உள்ளே சுழலச்செய்யும் சன்னல்கள் தேவை.

இந்தியச் சூழலில் நமக்கு வருடம் முழுக்க வெளியே ஒளி மிக அதிகமாகப் பொழிகிறது. ஒளியை மிதமாக அமைப்பதே நம் வீட்டுச்சூழலுக்கு இதமானது. மொத்தமாகத் திறந்து வைத்தால் வீடு கண்கூசும்படி இருக்கும். இதனால்தான் பெரும்பாலான சன்னல்களை நாம் மூடிவைக்கிறோம். நமக்கான ஒளியை அமைத்துக்கொள்கிறோம். அதாவது வெளி ஒளியைவிட குறைவாகவே நம் வீட்டுக்குள் ஒளி இருக்கவேண்டும்
வெப்பக்கதிர்வீச்சு என்று ஒன்று உண்டு. ஐரோப்பிய மாதிரிகளைக்கொண்டு நமக்கு வீட்டை வரைந்தளிக்கும் ‘நிபுணர்கள்’ அதைப்பற்றி யோசிப்பதே இல்லை.திறந்த பெரிய சன்னல்கள் நீங்கள் சொல்வதுபோல இயற்கையான குளுமையை அள்ளித்தராது. நேரடியாக வெயிலை நோக்கித் திறந்திருக்கும் சன்னல் வெளியே பொழியும் வெப்பத்தையே உள்ளே கதிர்களாக்கி அனுப்பும். உள்ளே இருக்க முடியாது.
ஆகவேதான் பழங்கால வீடுகளில் சுற்றிலும் பெரிய திண்ணைகள் , தாழ்வாரங்கள் அமைக்கப்பட்டிருக்கின்றன. சன்னல்கள் அந்தத் திண்ணையை அல்லது தாழ்வாரத்தை நோக்கியே திறக்கும். நான் வீடு கட்டியபிறகு மூன்றுபக்கமும் அப்படி திண்ணைகளை உருவாக்கியபிறகே சன்னல்களைக் கொஞ்சமேனும் திறக்க முடிந்தது. மாடியில் கூரைக்கொட்டகை போட்டு வெப்பவீச்சைத் தடுக்கவேண்டியிருக்கிறது. இவ்வளவுக்கும் எங்கள் ஊர் மரம் சூழ்ந்தது.
அதாவது கொள்கை அடிப்படையில் இப்படிச் சொல்லலாம். ஐரோப்பிய பாணி வீடுகள் வெளியே உள்ள ஒளி, வெப்பம் இரண்டையும் அதிகபட்சம் உள்ளே கொண்டுவர முயல்பவை. நம்முடைய வீடுகள் வெளியே உள்ள ஒளி, வெப்பம் இரண்டையும் குறைத்து நமக்குத்தேவையான அளவுக்குக் கொண்டுவரக்கூடியவை. முற்றிலும் வேறுபட்ட இரு கொள்கைகள் இவை.
பெரும்பாலும் செங்கற்சாளரங்களை அமைத்த லாரிபேக்கர் பல இடங்களில் மலைமேலிருக்கும் கட்டிடங்களில் கண்ணாடிச்சன்னல்களை அமைத்திருக்கிறார்.எந்த சன்னல் வேண்டும் எப்படிப்பட்ட சன்னல் வேண்டும் என்பதெல்லாமே அச்சூழலைக் கருத்தில்கொண்டு உருவாக்கப்படவேண்டியவை. இப்படித்தான் என எவரும் சொல்லிவிட முடியாது.
சமீபத்தில் நமீபியா சென்றபோது அங்குள்ள மரபான வீடுகள் இந்த சுய அடையாளம் கொண்டிருப்பதைப் பார்த்தேன். வெளியே ஒளியும் வெப்பமும் கொட்டிக்கொண்டிருக்க உள்ளே அவை மிதமாக்கப்பட்டிருந்தன. எப்போதுமே ஒரு கூடாரம் வழியாகவே வீட்டுக்குள் நுழையவேண்டியிருந்தது. அந்தக்கூடாரத்தின் தேவை நம் பழைய வீடுகளின் தாழ்வாரங்களை நினைத்தபோதுதான் புரிந்தது
ஜெயஸ்ரீயின் வீட்டின் மிக முக்கியமான அம்சமாக நான் நினைத்தது மிகப்பெரிய திண்ணை. நம் வழக்கமான குடும்பஸ்தர்கள் அது ஒரு வீண் என்றே சொல்லியிருப்பார்கள். ஆனால் உள்ளே வெப்பக்கதிர்களைக் கட்டுப்படுத்தி மிதமான ஒளியைக் கொண்டுசேர்ப்பதில் அது பெரும்பங்கு வகிக்கிறது
லாரி பேக்கர் பாணி வீட்டில் ஏன் சூரியமின்சாரத் தகடுகள் அமைக்க முடியாது? ஏன் நீர்சேமிப்பு செய்யமுடியாது? ஏன் கழிவுச்சுழற்சி செய்யமுடியாது? அந்தமுடிவுகளுக்கு எப்படி வந்தீர்கள்? லாரி பேக்கர் பாணி வீடு கட்டுபவர்கள்தான் இந்த முறைகளை இங்கே புழக்கத்துக்கே கொண்டுவந்தார்கள், தெரியுமா?
ஆக, உங்களுக்கு ஒரு புதியபாணி மீது ஓர் ஒவ்வாமை. அதற்கான நியாயங்களை உடனே உண்டு பண்ணிக்கொள்கிறீர்கள். உங்களிடம் சொல்ல லாரிபேக்கரிடமும் ஒரு வரிகூட இருக்காதென்றே நினைக்கிறேன்
வாழ்க்கை படைப்பூக்கமும் புதுமைநாட்டமும் கொண்டவர்களாலேயே முன்னெடுக்கப்படுகிறது
ஜெ
லாரி பேக்கர் இணையதளம் http://www.jeyamohan.in/?p=31897

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக