வியாழன், 1 நவம்பர், 2012

Jayalalitha: சாதிக் கலவரம் பரவுகிறது என்ற வாசகத்தை அன்பு கூர்ந்து பயன்படுத்த வேண்டாம்

 Normalcy Returns Ramnad District Says Cm
சென்னை: தென் மாவட்டங்களில் சாதிக் கலவரங்கள் பரவிக் கொண்டு இருக்கிறது போன்ற வாசகங்களை அன்பு கூர்ந்து பயன்படுத்த வேண்டாம் என்று எதிர்க்கட்சியினரைக் கேட்டுக் கொள்வதாக முதல்வர் ஜெயலலிதா கூறியுள்ளார்.
இதுதொடர்பாக முதல்வர் கூறியதாவது:
தேவர் ஜெயந்தி மற்றும் குருபூஜை 28.10.2012 அன்று காலை பசும்பொன்னில் துவக்கப்பட்டு நடந்து வந்தன. 28.10.2012 மற்றும் 29.10.2012 ஆகிய நாட்களில், தேவர் ஜெயந்தி தொடர்பான நிகழ்ச்சிகள் அனைத்தும் அமைதியாக நடந்து முடிந்தன.

30.10.2012 அன்று காலை தேவர் சமாதியில் பூஜைகள் துவக்கப்பட்டு, பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் மரியாதை செலுத்தி வந்தனர். சாலை ஓரங்களில் உள்ள கிராமங்களின் தன்மையைக் கருத்தில் கொண்டு, வாகனங்கள் செல்ல சில வழித்தடங்கள் மாவட்ட நிர்வாகத்தால் அனுமதிக்கப்பட்டிருந்தன. வேறு பாதைகளில் செல்வது தடுக்கப்பட்டிருந்தது.
இருப்பினும், 30.10.2012 அன்று மேலப்பெருங்கரை கிராமத்தைச் சேர்ந்த சிலர், ஒரு வேனில் அனுமதிக்கப்படாத சாலையில் பயணித்து பாம்பு விழுந்தான் என்ற கிராமத்திற்குள் நுழைந்தபோது, அங்கிருந்தவர்கள் தங்கள் ஊருக்குள் நுழைந்ததை எதிர்த்து வண்டியைத் தடுத்துத் தாக்கியதில், வண்டியில் இருந்தவர்கள் தப்பி ஓடினர்.
நரிக்குடியைச் சேர்ந்த வண்டியின் ஓட்டுநர் சிவகுமார் என்பவர் இச்சம்பவத்தில் உயிரிழந்தார். இதுகுறித்து எமனேஸ்வரம் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு, நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதே போன்று, அன்று மதியம் சுமார் 2 மணியளவில், பரமகுடி நகர காவல் நிலையம் பொன்னையாபுரம் வழியாக இரு சக்கர வாகனத்தில் சென்ற இருவரை அப்பகுதியைச் சேர்ந்த சிலர் அனுமதி மறுக்கப்பட்ட தங்கள் பகுதி வழியாக சென்றதற்காக எதிர்ப்பு தெரிவித்து தாக்கியதில், அவ்விரு நபர்களும் உயிரிழந்தனர். இது தொடர்பாக பரமகுடி நகர காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு, 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இச்சம்பவத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, பரமகுடியில் மாலை 5 மணிக்கு கூடியவர்கள் சுமார் 1000 பேரை காவல் துறையினர் கலைந்து செல்லுமாறு அறிவுரை அளித்தும், கலையாமல் இருந்தவர்களை குறைந்தபட்ச பலத்தை உபயோகித்தும் கலைத்தனர்.
30.10.2012 அன்று இரவு, மதுரை மாவட்டம், எஸ்.புளியங்குளம் கிராமத்தை சேர்ந்தவர்கள் பசும்பொன்னில் உள்ள தேவர் சமாதியில் மரியாதை செலுத்திவிட்டு, டாட்டா சுமோ வாகனத்தில் திரும்பி சென்று கொண்டிருந்தனர். அவ்வாகனம் மதுரை அவுனியாபுரம் காவல் நிலையம் சிந்தாமணி சோதனைச் சாவடி அருகே இரவு சுமார் 9.00 மணி அளவில் சென்று கொண்டிருந்தபோது, அடையாளம் தெரியாத நபர்கள் சிலர் அவ்வாகனத்தை நிறுத்தியதன் பேரில், வாகன ஓட்டுனர் வாகனத்தை நிறுத்தியுள்ளார்.
அப்போது, அந்நபர்கள் திடீரென எரியூட்டப்பட்ட பெட்ரோல் நிரப்பிய புட்டிகளை அந்த வாகனத்தினுள் எரிந்துள்ளனர். உடனே வாகனம் தீ பற்றி எரிந்துள்ளது. அவ்வாகனத்தில் பயணம் செய்து வந்த 20 நபர்கள் வாகனத்திலிருந்து இறங்குவதற்குள் தீக்காயம் அடைந்தனர். இச்சம்பவத்தில், வாகனம் முழுமையாக சேதம் அடைந்தது.
தகவலறிந்த காவல் துறையினர், சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, காயமடைந்த 20 நபர்களையும் உடனடியாக மருத்துவமனைகளுக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர். காயமடைந்தவர்கள் மதுரை அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களுள் 11 நபர்கள் 50 சதவிகிதத்திற்கும் மேலாக தீக்காயம் அடைந்துள்ளனர்.
இச்சம்பவம் தொடர்பாக, காவல்துறையினர் அவுனியாபுரம் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இது தொடர்பாக மூன்று நபர்களை பிடித்து காவல் துறையினர் விசாரித்து வருகின்றனர்.
மதுரை சரக காவல் துறை துணைத் தலைவர் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆகியோர் உடனடியாக சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டனர்.
இச்சம்பவங்களையடுத்து அப்பகுதிகளில் உடனடியாக பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டன. பசும்பொன் குரு பூஜை நிகழ்ச்சிகள் அமைதியாக நடந்து முடிந்தன.
மேற்படி சம்பவங்களில் தொடர்புடையவர்கள் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கும்படி காவல் துறையினருக்கு நான் உத்தரவிட்டுள்ளேன்.
கூடுதல் காவல்துறை இயக்குநர் (சட்டம் - ஒழுங்கு) பாதுகாப்பு ஏற்பாடுகளை நேரடியாக கண்காணித்து வருகிறார். அப்பகுதி முழுவதும் அமைதி நிலவுகிறது என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
எனவே இங்கே பேசிய எதிர்க்கட்சி மாமன்ற உறுப்பினர்கள் தென் மாவட்டங்களில் சாதிக் கலவரங்கள் பரவிக் கொண்டு இருக்கிறது போன்ற வாசகங்களை அன்பு கூர்ந்து பயன்படுத்த வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறேன். அந்த மாவட்டங்களில், குறிப்பாக ராமநாதபுரம் மாவட்டத்தில் முழுமையாக அமைதி நிலவுகிறது என்பதை மீண்டும் தெரிவித்துக் கொள்கிறேன் என்று அவர் கூறினார். http://tamil.oneindia.in/

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக