வெள்ளி, 2 நவம்பர், 2012

அம்பானி சொல்றார், மன்மோகன் செய்யிறார்!

வினவு"
காங்கிரசுக் கட்சி அம்பானி முதலான தரகு முதலாளிகளுக்கு விசுவாசமாய் இருக்கும் வரை ரெட்டியின் விசுவாசம் இறுதியில் என்னவாகும் என்பதற்கு இந்த மாற்றம் ஒரு சான்று."அம்பானி சொல்றார், மன்மோகன் செய்யிறார்!"ன்னாட்டு நிறுவனங்களுக்கு அடியாள் வேலை பார்க்கும் காங்கிரசு கூட்டணி அரசின் நிர்வாகத்தை உறுதிப் படுத்த அமைச்சரவை மாற்றங்களை செய்திருக்கிறார் பிரதமர் மன்மோகன் சிங். மாற்றங்களில் குறிப்பிடத்தக்கது பெட்ரோலிய அமைச்சராக இருந்த ஜெய்பால் ரெட்டியை ‘முக்கியத்துவம் இல்லை’ என்று சொல்லப்படும் அறிவியல் தொழில்நுட்ப அமைச்சகத்துக்கு மாற்றியிருப்பது. ‘ரிலையன்ஸ் நிறுவனத்தின் பிரதிநிதியாக’ பெட்ரோலிய அமைச்சர் பொறுப்பு வகித்த கார்ப்பரேட் தரகர் முரளி தியோராவிடமிருந்து 2011 ஜனவரியில் பெட்ரோலிய அமைச்சகத்தின் பொறுப்பைப் பெற்றார் ஜெய்பால் ரெட்டி. அதற்கு முன்பு பெட்ரோலியத் துறை அமைச்சராக இருந்த மணி சங்கர் அய்யர் ‘ஈரானிலிருந்து குழாய் அமைத்து வாயு கொண்டு வரும் திட்டத்தை முடுக்கி விட்டதால்’ 2006ம் ஆண்டு முரளி தியோரா அமைச்சராக்கப்பட்டார்.

கிருஷ்ணா கோதாவரி படுகையில் இருக்கும் நாட்டின் இயற்கை வளமான எரிவாயுவை வெளியில் எடுப்பதற்கான குத்தகை ரிலையன்சுக்கு கொடுக்கப்பட்டிருக்கிறது.  ஆகும் செலவின் அடிப்படையில் விலை நிர்ணயித்து அரசுத் துறை நிறுவனங்கள் எடுக்கப்படும் வாயுவை வாங்கிக் கொள்கின்றன.
முரளி தியோரா அமைச்சராக இருந்த போது ரிலையன்ஸ் விருப்பப்படி இயற்கை வாயுவின் விலையை ஒரு mmBtuக்கு $4.2 என்று அமைச்சர்கள் குழு நிர்ணயித்திருந்தது. இந்த விலை உற்பத்திச் செலவை விட இரண்டு மடங்கு அதிகம். இந்தியாவில் எடுக்கப்படும் இயற்கை வாயுக்கு பன்னாட்டு விலையுடன் ஒப்பிட்டு விலை நிர்ணயிக்கும் அயோக்கியத் தனத்தைத்தான் அமைச்சர்கள் குழு செய்திருந்தது.
ஜெய்பால் ரெட்டி அமைச்சரான பிறகு,  பன்னாட்டுச் சந்தையில் ஏற்பட்டுள்ள விலை ஏற்றத்துக்கு ஈடாக உள்நாட்டில் தான் குத்தகைக்கு வைத்திருக்கும் இயற்கை வாயு உற்பத்திக்கும் விலை நிர்ணயிக்கும்படி ரிலையன்ஸ் வலியுறுத்தியது.  விலையை அலகுக்கு $4.2லிருந்து $14.2 ஆக $10 உயர்த்தும்படி கேட்டிருந்தது.  அதன் மூலம் ரிலையன்ஸின் லாபம் 2 ஆண்டுகளில் ரூ 22,000 கோடி அதிகரித்திருக்கும். முகேஷ் அம்பானி இன்னும் பல ஆன்ட்லியா மாளிகைகளை கட்ட முடிந்திருக்கலாம்.  கூடவே பெட்ரோலிய பொருட்களுக்கு நேரடி விலையேற்றம் அல்லது மான்யத் தொகை மூலம் வரிச்சுமை அதிகரிப்பு அல்லது இரண்டும் நடந்திருக்கும்.
’2014 வரை விலை மாற்றம் கிடையாது’ என்ற அமைச்சர்கள் குழுவின் முந்தைய முடிவின் படி விலை ஏற்றத்துக்கு அனுமதி மறுத்தது ஜெய்பால் ரெட்டியின் தலைமையிலான பெட்ரோலிய அமைச்சகம். மேலும், கிருஷ்ணா கோதாவரி டி6 பகுதியில் ரிலையன்ஸ் செய்ததாக சொன்ன  $1.46 பில்லியன் செலவையும் அமைச்சர் நிராகரித்திருக்கிறார்.
‘கேட்ட விலை கிடைப்பது வரை பொருளை பதுக்கி வைத்திருப்பேன்’ என்று சொல்லும் கிரிமினல்களைப் போல இயற்கை வாயு உற்பத்தியை குறைத்திருக்கிறது ரிலையன்ஸ்.  மார்ச் 2010ல் ஒரு நாளைக்கு 53-54 மில்லியன் கனமீட்டராக இருந்த இயற்கை வாயு உற்பத்தியை ஒரு நாளைக்கு 27.5 மில்லியன் கனமீட்டராக குறைத்தது ரிலையன்ஸ். 2011-12ல் 72 மில்லியன் கனமீட்டராக இருந்திருக்க வேண்டிய சராசரி உற்பத்தி நாளைக்கு 42 மில்லியன் கனமீட்டராக குறைந்திருக்கிறது. இதன் மூலம் மத்திய அரசுக்கு ரூ 20,000 கோடி நேரடி இழப்பு ஏற்பட்டிருக்கிறது. 2012-13ல் 80 மில்லியன் கன மீட்டருக்கு பதிலாக 25 மில்லியன் கன மீட்டர்தான் உற்பத்தி செய்ய முடியும் என்றும் முரண்டு பிடிக்கிறது ரிலையன்ஸ். இதன் மூலம் அரசுக்கு ரூ 45,000 கோடி இழப்பு ஏற்படும்.
ஒவ்வொரு மில்லியன் கனமீட்டர் உற்பத்தி இழப்பும் 210 மெகாவாட் மின் உற்பத்தியை பாதிக்கிறது. 2011-12ல் சுமார் 6,000 மெகாவாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டிருக்கிறது, 2012-13ல் 11,500 மெகாவாட் மின்சார உற்பத்தி இழப்பு ஏற்படும். ரூ 30,000 கோடி வங்கிக் கடன்களுடன் கட்டப்பட்ட 20,000 மெகாவாட் உற்பத்தி திறன் கொண்ட மின் நிலையங்கள் எரிபொருள் இல்லாமல் சும்மா இருக்கின்றன.
கிருஷ்ணா கோதாவரி உற்பத்திக் குறைவைத் தொடர்ந்து வெளிநாடுகளிலிருந்து அதிக விலையில் உரம் இறக்குமதி ஆகிக் கொண்டிருக்கிறது.
இயற்கை வாயு உற்பத்தி அளவு குறைந்திருப்பதை கண்டித்த ஜெய்பால் ரெட்டி ரிலையன்சின் உற்பத்தி நடவடிக்கைகளை ஆய்வு செய்து தணிக்கை அறிக்கை சமர்ப்பிக்கும்படி சிஏஜியிடம் கேட்டிருக்கிறார்.
அமைச்சர்கள் குழுவில் விலையை அதிகரிப்பதற்கு கடும் அழுத்தம்  தரப்பட்டிருக்கிறது. அது தொடர்பான கோரிக்கையை ஆய்வு செய்த மத்திய அரசின் தலைமை வழக்கறிஞர், ’2014 வரை விலை மாற்றக் கூடாது என்ற விதி செல்லுபடியாகும்’ என்று கருத்து தெரிவித்திருக்கிறார். இருந்தும் விலையை உயர்த்தும்படி பிரதமர் அலுவலகம் பெட்ரோலிய அமைச்சகத்தை தொடர்ந்து வலியுறுத்தி வந்திருக்கிறது.
விலை ஏற்ற மறுப்பது, உற்பத்திக் குறைவை ஆய்வு செய்ய உத்தரவிட்டிருப்பது இவற்றால் ரிலையன்சின் முகேஷ் அம்பானிக்கு கோபம் வந்து விட ஜெய்பால் ரெட்டி அமைச்சரவை பொறுப்பிலிருந்து மாற்றப்பட்டிருக்கிறார்.
ஜெய்பால் ரெட்டியை மாற்றிய விவகாரத்தை, மாலை நேர செய்தித் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் விவாதத்துக்கு ஏற்ப, பாரதீய ஜனதா கட்சி செல்லமாகக் கண்டிக்கிறது. முகேஷ் அம்பானியின் தம்பி அனில் அம்பானிக்கு புரோக்கர் வேலை பார்க்கும் சமாஜ்வாதி கட்சியும் அதைப் பற்றிக் கேள்வி கேட்கிறது.  ‘பெட்ரோலியத் துறையில் விரைவாக முடிவுகள் எடுக்கப் போவதாக’ புதிய அமைச்சர் வீரப்ப மொய்லி தனது விசுவாசத்தை உடனடியாக உறுதி செய்திருக்கிறார்.
தான் ஒரு விசுவாசமான கட்சி உறுப்பினர் என்றும் உண்மையான அமைச்சர் என்றும் ஜெய்பால் ரெட்டி சொல்லியிருக்கிறார். காங்கிரசுக் கட்சி அம்பானி முதலான தரகு முதலாளிகளுக்கு விசுவாசமாய் இருக்கும் வரை ரெட்டியின் விசுவாசம் இறுதியில் என்னவாகும் என்பதற்கு இந்த மாற்றம் ஒரு சான்று.
ஜெய்பால் ரெட்டியின் வெளியேற்றம் ரிலையன்சின் லாபத்தை அதிகரிக்கும் என்ற நம்பிக்கையில் பங்குச் சந்தையில் அதன் பங்குகளின் விலை 2 சதவீதம் அதிகரித்திருக்கிறது.  இனிமேல், ரிலையன்சுக்கு கேட்ட விலை கிடைத்து விடும், இயற்கை வாயு உற்பத்தி மீண்டும் அதிகரிக்கலாம்.  இந்தச் சுமையை கூடுதல் கேஸ் விலையாகவும், பெட்ரோல் விலையாகவும் சுமப்பதற்கு நாட்டு மக்கள் தயாராகிக் கொள்ள வேண்டும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக