வெள்ளி, 2 நவம்பர், 2012

இனி சத்துணவில் பிரியாணி, புலவு, முட்டை மசாலா வழங்க முதல்வர் உத்தரவு

 Tn School Children Get Briyani Pulao
சென்னை: பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்படும் சத்துணவில் இனி விதவிதமான உணவு வகைகள் வழங்க முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.
இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது,
முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர். அறிமுகப்படுத்திய சத்துணவு திட்டத்தில் கடந்த 30 ஆண்டுகளாக ஒரே மாதிரியான உணவு வழங்கப்பட்டு வருகிறது என்பதை அறிந்து காலத்திற்கு ஏற்பவும், குழந்தைகளின் விருப்பத்திற்கு ஏற்பவும், உணவு முறையில் மாற்றம் கொண்டுவர நடவடிக்கை எடுக்குமாறு அரசு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தி இருந்தேன். புதிய வகை உணவு முறையினை அறிமுகப்படுத்துவது குறித்து புகழ் பெற்ற சமையற் கலைஞர்கள் மற்றும் ஊட்டச்சத்து நிபுணர்களுடன் கலந்தாலோசிக்கப்பட்டது.

இந்தக் கலந்தாலோசனைக்குப் பிறகு சென்னை, சைதாப்பேட்டையில் உள்ள பள்ளியிலும்; திருச்சி மாவட்டம், ஸ்ரீரங்கம் தொகுதிக்குட்பட்ட அந்தநல்லூர் ஊராட்சி ஒன்றியப் பள்ளியிலும் சோதனை முறையில் கொண்டைக்கடலை புலவு சாதம் மற்றும் மிளகுத்தூள் கலந்த முட்டை தயாரித்து பள்ளிக் குழந்தைகளுக்கு வழங்கப்பட்டது. இதனை பள்ளிக் குழந்தைகள் விரும்பி உண்பது கண்டறியப்பட்டது. இது மட்டுமல்லாமல் 13 வகையான கலவை சாதங்கள் மற்றும் 4 வகையான முட்டை மசாலாக்களை சமையல் நிபுணர்கள் தயாரித்து செயல் விளக்கம் செய்து காண்பித்தனர். மேற்கூறிய சோதனை முறையின் அடிப்படையில் புதிய உணவு வகைகளை சத்துணவுத் திட்டத்தில் படிப்படியாக அறிமுகம் செய்ய அரசு முடிவெடுத்துள்ளது.
இதன்படி மாதத்தின் முதல் மற்றும் மூன்றாம் வாரங்களில் திங்கட்கிழமையன்று காய்கறி பிரியாணி மற்றும் மிளகுத்தூள் முட்டையும்; செவ்வாய்க் கிழமையன்று கொண்டைக்கடலை புலவு மற்றும் தக்காளி முட்டை மசாலாவும்; புதன்கிழமையன்று தக்காளி சாதம் மற்றும் மிளகுத்தூள் முட்டையும்; வியாழக்கிழமையன்று சாதம், சாம்பார் மற்றும் வேகவைத்த முட்டையும்; வெள்ளிக்கிழமை அன்று கருவேப்பிலை சாதம் அல்லது கீரை சாதம், முட்டை மசாலா மற்றும் மிளகாய் பொடியில் வறுத்த உருளைக்கிழங்கு ஆகியவை வழங்கப்படும்.
மாதத்தின் இரண்டாம் மற்றும் நான்காம் வாரங்களில், திங்கட்கிழமை அன்று சாம்பார் சாதம் மற்றும் வெங்காயம், தக்காளி முட்டை மசாலாவும்; செவ்வாய்க்கிழமை அன்று மீல் மேக்கர், காய்கறி கலவை சாதம், மற்றும் மிளகுத்தூள் முட்டையும்; புதன்கிழமை அன்று புளியோதரை மற்றும் தக்காளி முட்டை மசாலாவும்; வியாழக்கிழமை அன்று எலுமிச்சை சாதம், தக்காளி முட்டை மசாலா மற்றும் சுண்டலும்; வெள்ளிக்கிழமை அன்று சாதம், சாம்பார், வேகவைத்த முட்டை மற்றும் உருளைக்கிழங்கு பொரியலும் வழங்கப்படும்.
இதே போன்று, அங்கன்வாடி மையங்களுக்கு வருகை தரும் குழந்தைகளின் சிறப்பம்சம் மற்றும் செரிமான திறன் ஆகியவற்றினைக் கருத்தில் கொண்டு அவர்களுக்கும் புதிய உணவு வகைகள் அறிமுகம் செய்யப்படும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.
இதன்படி, திங்கட்கிழமை அன்று தக்காளி சாதம், வேகவைத்த முட்டையும்; செவ்வாய்க்கிழமை அன்று கலவை சாதம் மற்றும் சுண்டலும்; புதன்கிழமை அன்று காய்கறி புலவு சாதம் மற்றும் வேகவைத்த முட்டையும்; வியாழக்கிழமை அன்று எலுமிச்சை சாதம் மற்றும் வேகவைத்த முட்டையும்; வெள்ளிக் கிழமை அன்று பருப்பு சாதம், வேகவைத்த உருளைக்கிழங்கும்; சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் கலவை சாதமும் வழங்கப்படும்.
மேற்கூறப்பட்ட புதிய உணவு வகைத் திட்டம், ஒவ்வொரு மாவட்டத்திலும் முதலில் ஒரு வட்டாரத்தில் மட்டும் முன்னோடித் திட்டமாக அறிமுகப்படுத்தப்பட்டு; அந்த வட்டாரத்தில் இந்தப் புதிய உணவு முறை திட்டத்தின் செயல்பாடு குறித்து அறிந்த பிறகு, மற்ற வட்டாரங்களுக்கு விரிவுபடுத்தப்படும். அரசின் இந்த நடவடிக்கை கல்வி பயிலும் குழந்தைகளின் எண்ணிக்கையையும்; அவர்களின் ஊட்டச்சத்து நிலையையும் மேம்படுத்த வழிவகுக்கும் என்று தமிழக முதல்வர் ஜெயலலிதா கூறியுள்ளார்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நர்சுகளுக்கு இலவச லேப்டாப்:
கிராம சுகாதார செவிலியர்களுக்கு இலவச மடிக்கணினி வழங்கப்படும் என்று முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.
இது குறித்து தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை விதி 110ன் கீழ் அவர் ஆற்றிய உரையில் கூறியிருப்பதாவது,
மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத் துறையின் முக்கியமான திட்டங்களை முன்னின்று நிறைவேற்றுவதில் முக்கியப் பங்கினை வகிப்பவர்கள் கிராம சுகாதார செவிலியர்கள். டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு நிதியுதவி திட்டத்தின் கீழ் கர்ப்பிணி பெண்கள், குழந்தைகள் மற்றும் பிரசவித்த தாய்மார்கள் ஆகியோர் பற்றிய விவரங்களை கணினி மூலம் தினந்தோறும் பதிவு செய்வதற்கு வசதியாக, கிராம சுகாதார செவிலியர்களுக்கு விலையில்ல மடிக்கணினி வழங்கப்படும்.
அரசு மருத்துவமனைகள், மாவட்ட தலைமை மருத்துவமனைகள், வட்ட மருத்துவமனைகள், மருத்துவ அலுவலகங்கள், ஆரம்ப சுகாதார நிலையங்கள் ஆகியவற்றில் சுற்றுப்புறத்தை சுத்தம் செய்தல்; சுகாதாரத்தை பேணுதல்; மருத்துவமனை வளாகத்தை பராமரித்தல்; பாதுகாத்தல் போன்ற பணிகளை மேற்கொள்ள ஏதுவாக பல்நோக்கு மருத்துவமனை பணியாளர் என்ற பெயரில் பணியாளர்கள் நியமிக்கப்பட உள்ளனர்.
இது மட்டுமல்லாமல், மருத்துவமனை கட்டடங்களை பராமரிக்கும் பணிகளை 15 கோடி ரூபாய் செலவில் மேற்கொள்ளவும்; மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் 10 கோடி ரூபாய் செலவில் புதிய மரச் சாமான்கள் வாங்கவும்; மருத்துவமனைகளில் தொய்வின்றி சேவை மேற்கொள்ளும் பொருட்டு தேவையான உபகரணங்கள் மற்றும் மருந்துகள் வாங்க கூடுதலாக 20 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யவும் அரசு முடிவெடுத்துள்ளது.
மேலும் மருத்துவமனைகளில் உயிர் காக்கும் சிறப்பு மருந்துகள் வாங்க கூடுதலாக 10 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. முதல்வரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் ஒரு நோயாளிக்கு ஆண்டு ஒன்றுக்கு ஒரு லட்சம் ரூபாய் வரை சிகிச்சை மேற்கொள்ள அனுமதிக்கப்படுகிறது. குறிப்பிட்ட 77 நோய்களுக்கு ஒரு லட்சத்து ஐம்பதாயிரம் ரூபாய் வரை சிகிச்சை மேற்கொள்ள அனுமதிக்கப்படுகிறது. சிகிச்சை சம்பந்தப்பட்ட பரிசோதனைகளும் காப்பீட்டுக்காக வரையறுக்கப்பட்ட தொகையில் அடங்கும். இதுவரை இந்தத் திட்டத்தின் கீழ், 1,64,365 பயனாளிகளுக்கு 384 கோடி ரூபாய் காப்பீட்டு நிறுவனத்தால் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
இருப்பினும் கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை, சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை, ஸ்டெம் செல் மாற்று சிகிச்சை உள்ளிட்ட சில சிகிச்சை முறைகளுக்கு ஒரு லட்சத்து 50 ஆயிரம் ரூபாய்க்கு மேலாக செலவு ஆகிறது என்பதால் இந்த கூடுதல் செலவினத்தை, நோயாளிகளே ஏற்கும் நிலைமை உள்ளது. இத்தகைய ஏழை, எளிய நோயாளிகளின் நிலையை கருத்தில் கொண்டு அனுமதிக்கப்பட்ட ஒரு லட்சத்து 50 ஆயிரம் ரூபாய்க்கு மேலாக ஏற்படும் கூடுதல் செலவினத்தையும் அரசே ஏற்கும் வகையில் ஒரு சிறப்பு தொகுப்பு நிதி ஒன்று உருவாக்கப்படும். இந்த சிறப்பு தொகுப்பு நிதிக்கு முதற்கட்டமாக 10 கோடி ரூபாய் நிதி வழங்கப்படும் என்பதையும்; இனிவரும் காலங்களில் அரசு மருத்துவமனைகளில் கிடைக்கும் காப்பீட்டு தொகையிலிருந்து இந்த சிறப்பு தொகுப்பு நிதிக்காக ஆண்டொன்றிற்கு 20 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்படும் என்று அவர் அறிவித்துள்ளார்.http://tamil.oneindia.in/

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக