சனி, 3 நவம்பர், 2012

நித்தி மிரட்டியதால் போலீஸில் புகார் அளிக்கவில்லை நிலமோசடி வழக்கு

சேலம் மாவட்டம், சீரகாப்பாடி பகுதியைச் சேர்ந்தவர் கி.குணசேகரன். இவர் மாவட்ட எஸ்.பி. அஸ்வின் எம்.கோட்னீஸிடம் அளித்த மனு விவரம்:
2005-ஆம் ஆண்டில் சென்னகிருஷ்ணன், சக்தி, செல்வம் ஆகியோர் மூலம் நித்யானந்தாவிடம் அறிமுகமானேன். அவரது செயலர் சதானந்தா உள்ளிட்டோர் சீரகாப்பாடி பகுதியில் நித்யானந்தா ஆசிரமம் அமைக்க விரும்புவதாகவும், எனவே, கடத்தூர் முக்கோணம்பாளையம் பகுதியில் உள்ள எனது நிலத்தை தானமாக கொடுக்குமாறு கேட்டனர். மேலும், நித்யானந்தரும் இதுகுறித்து என்னிடம் தொலைபேசியில் பேசினார். இதையடுத்து, 50 சென்ட் நிலத்தைத் தானமாகக் கொடுக்க ஒப்புக் கொண்டேன்.2006-ஆம் ஆண்டு பத்திரப் பதிவு அலுலகத்துக்கு சென்ற என்னிடமும், எனது மனைவி, சகோதரி ஆகியோரிடமும் அவர்கள் ஆங்கிலத்தில் ஏற்கெனவே தயார் செய்து வைத்திருந்த பத்திரத்தில் கையெழுத்து வாங்கிக் கொண்டனர். ஆனால், நிலத்துக்கான பணம் குறித்து அவர்கள் பேசவில்லை.
2010ஆம் ஆண்டு அக்.12ஆம் தேதி நித்யானந்தருக்கு கொடுத்த நிலத்தின் அருகிலிருந்த எனது நிலத்தை விற்பனைச் செய்ய முயன்ற போது, நித்யானந்தரின் ஆதரவாளர்கள் தடுத்து, நிலம் முழுவதும் தங்களுடையது எனக் கூறி பத்திரத்தைக் காட்டினர்.அப்போதுதான் நான் ஏமாற்றப்பட்டதை அறிந்தேன். மேலும், நித்யானந்தர் உள்பட அவரது ஆதரவாளர்கள் என்னை மிரட்டியதால் போலீஸில் புகார் அளிக்கவில்லை.இந்த நிலையில், கடந்த மாதம் 23ஆம் தேதி என்னைத் தொடர்பு கொண்ட சிலர் இந்தச் சம்பவம் தொடர்பாக காவல் நிலையத்தில் புகார் அளிக்க வேண்டாம் எனவும், நிலத்தையோ, அதற்கான பணத்தையோ கொடுத்து விடுவதாகவும், இதை நித்யானந்தர் சொல்லச் சொன்னதாகக் கூறினர். ஆனால், உறுதி அளித்தபடி அவர்கள் எதையும் செய்யவில்லை. எனது நிலத்தை மீட்டுத் தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக