வெள்ளி, 23 நவம்பர், 2012

திமுக முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் மரணம்


 Veerapandi Arumugam Passed Away
சென்னை: உடல் நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதி்க்கப்பட்டிருந்த திமுக முன்னாள் அமைச்சரும் திமுகவின் முக்கியத் தலைவர்களில் ஒருவருமான வீரபாண்டி ஆறுமுகம் இன்று காலை 11 மணிக்கு மரணம் அடைந்தார். அவருக்கு வயது 75.
சேலம் மாவட்ட திமுக செயலாளரும், முன்னாள் அமைச்சருமான வீரபாண்டி ஆறுமுகம் கடந்த சில நாட்களாக உடல் நலக்குறைவால் அவதிப்பட்டார். அவர் சென்னையில் உள்ள ராமச்சந்திரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் இன்று காலை 11 மணிக்கு அவர் சிகிச்சை பலனின்றி உயிர் இழந்தார்.
கடந்த 1937ம் ஆண்டு ஜனவரி மாதம் 26ம் தேதி சேலம் மாவட்டம் பூலாவாரியில் பிறந்தவர் வீரபாண்டி ஆறுமுகம். அவர் கடந்த 1957ம் ஆண்டு திமுகவில் சேர்ந்தார். 1958ம் ஆண்டு முதல் 1970ம் ஆண்டு வரை பூலாவாரி ஊராட்சி தலைவராக இருந்தார். அதன் பிறகு அவர் 1970-76ல் பஞ்சாய்தது யூனியன் தலைவராக இருந்தார். பின்னர் 1973ம் ஆண்டு முதல் 1976ம் ஆண்டு வரை சேலம் மத்திய கூட்டுறவு வங்கி தலைவராக இருந்தார்.

1962 முதல் 2011 வரை 6 முறை எம்.எல்.ஏவாக சட்டசபைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். 1978 முதல் 84 வரை மேல்சபை உறுப்பினராகவும் இருந்தார். 4 முறை அமைச்சராகவும் பதவி வகித்துள்ளார்.
சேலம் திமுக வட்டாரத்தில் பெரிய சக்தியாக இருந்த அவர் 1989ம் ஆண்டு முதல் 1990ம் ஆண்டு வரை நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சராக இருந்தார். பிறகு 1990-91, 96-2001, 2006-2011 ஆகிய காலகட்டகங்களில் வேளாண் அமைச்சராக இருந்தார். கடந்த 2011ம் ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலில் சங்ககிரியில் அதிமுக வேட்பாளர் விஜயலக்ஷ்மியிடம் தோற்றார்.
அதிமுக ஆட்சிக்கு வந்தது முதல் பல்வேறு நில அபகரிப்பு வழக்குகளில் தொடர்ந்து கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இவர் மீது குண்டர் சட்டமும் பாய்ந்தது. அதை நீதிமன்றம் ரத்து செய்தது. வழக்குகளில் இருந்து ஜாமீனில் வெளியே வந்த அவர் உடல் நலம் பாதிக்கப்பட்டது. இதையடுத்து தொடர்ந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந் நிலையில் இன்று அவர் உயிரிழந்தார்.
அவரது மரணத்தையடுத்து 3 நாட்கள் துக்கம் அனுசரிக்க திமுக முடிவு செய்துள்ளது. இந்த 3 நாட்களும் கட்சி கொடியை அரைக்கம்பத்தில் பறக்கவிடவும், கட்சி நிகழ்ச்சிகள் அனைத்தையும் ரத்து செய்யுமாறும் திமுக தலைமைக் கழகம் உத்தரவிட்டுள்ளது.
இதே தினத்தில் தான் திமுக மூத்த தலைவரான முரசொலி மாறனும் உயிரிழந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக