புதன், 7 நவம்பர், 2012

வெளியேறுகிறார் நாஞ்சில் சம்பத்,, வெறும் பேச்சாளராகவே வைகோ வைத்திருக்கிறார்’

எப்போது க்ளைமாக்ஸ்?  வைகோ - சம்பத் மோதல் பின்னணி

 வைகோ மற்றவருக்காக கூலிப்படை தலைவன் போல் தான் செயல் பட்டார் அதனால் தான் முன்னுக்கு வரவில்லை இவரோடு வேறு யாரும் நீண்டு நீடிக்கவில்லை.  மா பொ சி திண்டிவனம் ராமமூர்த்தி சுப்ரமனியசாமி வைகோ இவர்கள் அனைவருக்கும் பேச்சில் இருக்கும் திறமை செயலில் இருக்காது இவர்கள் பெயரை கேட்டவுடன் சிரிப்பு வரும்
 ம.தி.மு.க. மேல்மட்டத்தில், 'நாஞ்சில் சம்பத், அவராக விலகட்டும் என்று வைகோ நினைக்கிறார். வைகோ நம்மை நீக்கட்டும் என்று சம்பத் நினைக்கிறார். எது நடந்தாலும் இருவருக்குமான பிரிவு இனி தடுக்கவோ... தவிர்க்கவோ முடியாதது’ என்று பல சம்பவங்களை விவரிக்கிறார்கள். 
மேடை நாகரிகம்
''நாஞ்சில் சம்பத் பலரையும் ஈர்க்கக்கூடிய அளவில் பேசக்கூடிய வல்லமை உள்ளவர். ஆனால், பொதுச்செயலாளர் வைகோ பேச ஆரம்பித்ததும் இவர் மேடையைவிட்டுக் கீழே இறங்கி... உடனே புறப்பட்டு விடுவார். இதுபோன்று, பல மேடைகளில், பல்வேறு முறை நடந்துள்ளது.
பொடா சிறைவாசம் முடிந்து வைகோ வெளியே வந்து முதல்கூட்டம் அண்ணா நகரில் நடந்தது. அதில் கலந்துகொண்ட சம்பத் ஐந்து நிமிடங்கள் மட்டும் பேசிவிட்டு, உடனே கீழே இறங்கிப் போய்விட்டார். வைகோ பேச ஆரம்பித்த நேரத்தில் அவர் வெளியூருக்குப் புறப்பட்டு விட்டார். அதேபோல, 45 நாட்கள் நடைப்பயணம் வந்த வைகோ, சீரணி அரங்கத்தில் அதை முடித்து வைக்கும் பிரமாண்டமான பொதுக்கூட்டத்துக்கு ஏற்பாடு செய்திருந்தார். அதிலும் பேசிய சம்பத், வைகோ பேசிய நேரத்தில் இல்லை. வெளியேறுவதைக்கூட மறைவாக இல்லாமல்... பகிரங்கமாகச் செய்தார்,
கீழே வந்து நான்கைந்து பேரை அழைத்துக்கொண்டு வெளியேறியதை முன் வரிசையில் இருந்த அனைவரும் பார்த்தனர்'' என் கிறார்கள் ம.தி.மு.க-வின் முக்கிய நிர்வாகிகள்.
இதுபோன்று, முக்கியமான ஏழெட்டு சம்பவங் களில் வைகோ பேசிய நேரத்தில், சம்பத் வெளி யேறியதை சில முன்னணித் தலைவர்கள் வைகோவிடம் சொல்லி வருத்தப்பட்டனர். வைகோவும் சம்பத்திடம் நேரடியாகவே விசாரித்துள்ளார். ''நீங்க என் பேச்சை இருந்து கேட்கணும்னு நான் எதிர்பார்க்கலை. ஆனால், பகிரங்கமாக நீங்கள் வெளியேறுவது பலரின் கண்களை உறுத்துகின்றன. இது உங்களுடைய எதிர்காலத்துக்கும் நல்லது இல்லை'' என்று வைகோ சொல்லி இருக்கிறார். நான்கைந்து ஆண்டுகளுக்கு முன் நடந்த இந்த நிகழ்வுதான் இருவர் மீதான மன வருத்தத்துக்கு முதல் காரணம் என்கிறார்கள்.
ஆபாசக் கிண்டல்கள்
நாஞ்சில் சம்பத், மேடையில் பேசுவதையும் பத்திரிகைகளுக்குப் பேட்டி கொடுப்பதையும் டி.வி-க்களில் எது சொன்னாலும் வைகோ அதைக் கண்டுகொள்வது இல்லையாம். ஆனால், பேச்சில் சில நேரங்களில் ஆபாச அர்ச்சனைகள் வெளிப்பட்டால் மட்டும் சம்பத்தை அழைத்து வருத்தப்படுவாராம். கனிமொழியை வர்ணிக்கும் வார்த்தைகளையும், விஜயா தாயன்பனை கிழவி என்று கிண்டல் செய்ததையும் கேள்விப்பட்ட வைகோ, ஒரு முறை அவரை அழைத்துப் பேசினாராம். 'பொது வாழ்க்கையில் இருக்கும் பெண்களை ஆபாசமாக விமர்சனம் செய்யக்கூடாது. அரசியல் ரீதியாக எந்தக்குறையையும் சொல்லலாம். இப்படிப் பேசுவதால் உங்களுடைய தரமும் குறைந்து விடும். கட்சிக்கும் கெட்ட பெயர் ஏற்படும்’ என்று சொன்னாராம். இது, சம்பத்துக்குக் கோபத்தை ஏற்படுத்தியதாகச் சொல்கிறார்கள்.
ஆதரவாளருக்கு ஆதரவு
கொங்கு மண்டலத்தில் மூத்த ம.தி.மு.க. பிரமுக ராக இருப்பவர் ஆர்.டி.மாரியப்பன். இவருக்கு எதிராக உடுமலைப்பேட்டை ராஜசேகரன் என்பவர் செயல்பட்டு வந்துள்ளார். இவரைப் பற்றி ம.தி.மு.க-வினர் பல்வேறு புகார்களைச் சொல்கிறார்கள். இந்த ராஜசேகரன், நாஞ்சில் சம்பத் ஆதரவு பெற்றவர் என்று சொல்லப்படுகிறது. ஆர்.டி.மாரியப்பனுக்கும் ராஜசேகரனுக்கும் சமா தானம் செய்து வைக்க பலரும் முயற்சித்து எதுவும் நடக்கவில்லை. இந்தநிலையில், ராஜசேகரன் மீதான குற்றச்சாட்டுக்கள் விசாரிக்கப்பட்டு, அவரை கட்சியில் இருந்து நீக்கும் நடவடிக்கையை வைகோ எடுத்தாராம். இது, சம்பத்துக்கு ஆத்திரத்தை உருவாக்கியதாக சம்பத்துக்கு நெருக்கமான வட் டாரங்களே ஒப்புக்கொள்கிறது.
சென்னை நாரத கான சபாவில் 'வீரவேங்கை வேலுநாச்சியார்’ நாடகத்தை வைகோ முன்னின்று நடத்தினார். அந்த நாடகம் தொடங்குவதற்கு முன், வைகோவுக்கு அருகில் வந்து உட்கார்ந்த சம்பத், 'ராஜசேகரனை எதுக்காகக் கட்சியைவிட்டு நீக்கணும்? இந்தக் கட்சியில ஜனநாயகமே இல்லையா?’ என்று சத்தம் போட்டுக் கேட்டாராம். உடனே அருகில் இருந்த நிர்வாகிகள், 'இங்கே வந்தா அதைக் கேட்பாங்க? சத்தத்தைக் குறைங்க. அப்புறம் பேசிக்கலாம்’ என்று சமாதானம் செய்திருக்கிறார்கள். வெளிப்படையாக நடந்த மோதல் இது.
சீமான் - விஜயலட்சுமி
இன்று ம.தி.மு.க-வும், 'நாம் தமிழர்’ கட்சியும் எலியும் பூனையுமாக சண்டை போடுவதற்கு நாஞ்சில் சம்பத்தான் காரணம் என்ற வருத்தம் கட்சியின் முன்னணியினர் பலருக்கும் இருக்கிறது. திராவிட இயக்கங்கள் குறித்து சீமான் விமர்சனம் வைக்க, அதற்கு நாஞ்சில் சம்பத் பதிலடி கொடுத்தார். அப்போது போகிறபோக்கில், 'சீமானுக்காவது விஜயலட்சுமி இருக்கார். நமக்கு யார் இருக்கா?’ என்று கேட்டார் சம்பத். இது, சீமான் காதுக்குப் போனது. ' வைகோ சொல்லித்தான் சம்பத் இப்படி பேசுகிறார்’ என்று சீமான் சொல்ல ஆரம்பித்தார். இதைத்தொடர்ந்து, 'சீமான் பற்றி நாம் எதுவும் பேச வேண்டாம்’ என்று வைகோ சொன்னதாகவும், மீறி அவர் தொடர்ந்து பேசியதாகவும் கூறப்படுகிறது.
தடுத்த சக்தி
பேச்சாளர்களுக்குள் முட்டல் மோதல் பாலிட்டிக்ஸ் செய்ய சம்பத் முயற்சித்ததாகவும் கூறப்படுகிறது. காஞ்சிபுரம் மாநாட்டில் நாஞ்சில் சம்பத் பெயருக்கு இணையாக அழகுசுந்தரம் பெயரை வைகோ போட்டிருந்தாராம். அப்போது செந்திலதிபனிடம் பேசிய சம்பத், 'அழகுசுந்தரத்துக்கு இணையாக உங்கள் பெயரை வைகோ ஏன் போடலே?’ என்று கேலியாகக் கேட்டாராம். இப்படி பல்வேறு சம்பவங்களை அடுக்குகிறார்கள்.
சமீபத்தில், திருவள்ளூரில் சம்பத் தலைமையில் ஒரு பட்டிமன்றம் நடந்துள்ளது. அதற்கு வருவதாக ஒப்புக்கொண்ட ஒரு பேச்சாளரால் வர முடியவில்லை. 'சம்பத் கூட்டத்தில் கலந்து கொள்ளக்கூடாது என்று உங்களைத் தடுத்த சக்தி எது?’ என்று கேட்டாராம் சம்பத். 'உண்மை யிலேயே உடம்புக்கு சரியில்லை. ஆனால், வைகோ சொல்லித்தான் நான் போகலைன்னு அவரே எல்லோரிடமும் கதை கட்டிவிட்டார்’ என்று அந்தப் பேச்சாளர் புலம்பியது தனிக் கதை.
சம்பத்துக்கு முக்கியத்துவம்
'வெறும் பேச்சாளராகவே சம்பத்தை வைகோ வைத்திருக்கிறார்’ என்று அவருக்கு நெருக்கமான நண்பர்கள் மத்தியில் புலம்பல் இருக்கவே செய்கிறது. 'வைகோ நினைத்திருந்தால் அவரை துணைப் பொதுச்செயலாளர் ஆக்கி இருக்கலாம்’ என்பதும் அவர்களது வருத்தம். ''வைகோவுடன் கலந்துகொள்ளும் மேடைகளில் கறுப்புத்துண்டு அணிந்து சம்பத் காட்சி அளிப்பது இல்லை. அத்தனை அடக்கமாக இருப்பார். ஆனால் தலைமைக் கழக நிர்வாகியாக மேடையில் அவரை உட்கார வைக்க வைகோவுக்குத்தான் விருப்பம் இல்லை'' என்றும் சொல்கிறார்கள்.
''சம்பத் அந்த வாய்ப்புகளை அடையும் பக்குவத்தைப் பெறவில்லை. ஒரு துணைப் பொதுச்செயலாளராக பொறுப்புக்கு வருபவர், அனைத்து நிர்வாகிகளையும் அன்போடு அரவணைத்துச் செல்பவராக இருக்க வேண்டும். எல்லோரையும் அவன், இவன் என்றும் வா, போ என்றும் அழைப்பவர் எப்படித் தலை வராக முடியும்? அவர் யாரையும் மதிப்பது இல்லை என்பதால் பல நிர்வாகிகள், 'என்னை மதிக்கவில்லை, உன்னை மதிக்கவில்லை’ என்று வைகோவிடம் புகார் சொல்லி இருக்கிறார்கள்'' என்கிறார்கள். மேலும் அவர்கள், ''பொடாவில் உள்ளே இருந்தபோது வைகோ தனது 76 பக்க உரையை சம்பத்தை விட்டுத்தான் வாசிக்கச் சொன்னார். மாவீரர் நாளுக்காக வெளி நாடுகளில் பேசுவதற்கு மூன்று நான்கு முறை ஏற்பாடு செய்து கொடுத்திருக்கிறார் வைகோ. நாடாளுமன்றத் தேர்தல், சட்டமன்றத் தேர்தல் நேரங்களில் ஏதாவது ஒரு தொகுதியைக் கொடுத்து போட்டியிடுங்கள் என்று வைகோ சொல்லத் தவறியதே இல்லை. ஆனால், சம்பத்தான் தேர்தலில் போட்டியிடவில்லை. அவரது வீட்டு சுற்றுச்சுவரை அரசியல் உள்நோக்கத்தோடு இடித்தபோது, 16 லட்சம் ரூபாய் வசூலித்துக் கொடுத்தார் வைகோ. அவரை அவமரியாதை செய்யும் வகையில் வைகோ நடந்து கொண்டதே இல்லை. ஆனால், அவர்தான் வைகோவை சந்திப்பது இல்லை. பேசுவதும் இல்லை. இறுக்கமாகவே இருந்தார்'' என்றும் சொல்கிறார்கள்.
டி.வி. ஏற்படுத்திய சிக்கல்
ம.தி.மு.க பற்றிய செய்திகள், வைகோவின் பேச்சுக்கள், மாநாடுகளை முக்கியத்துவம் கொடுத்து இமயம் டி.வி வெளியிடுகிறது. அதன் உரிமையாளர் ஜெபராஜுக்கும் நாஞ்சில் சம்பத்துக்கும் ஆக வில்லை. கட்சியின் பொதுக்குழுவிலேயே, 'எவனெவனோ டி.வி. நடத்த வந்துட்டான். நம்ம கட்சிக்கு ஒரு டி.வி. தேவை. கோடிக்கணக்கில் பணம் கொடுக்க இரண்டு பேர் சிவகாசியில் தயாராக இருக்கிறார்கள். அதற்கு வைகோ ஏற்பாடு செய்ய வேண்டும்’ என்று பேச... கூட்டத்தில் இருந்த ஜெபராஜ் நெளிய ஆரம்பித்தார்.
அதன்பிறகு, தாயகத்துக்கு சம்பத்தை அழைத்து வைகோ பேசி இருக்கிறார். பணம் கொடுக்கத் தயாராக இருக்கும் இரண்டு பேர் யார் என்று கேட்டிருக்கிறார். 'நீங்க சொல்ற ரெண்டு பேரும் தேர்தல் செலவுக்காக 5,000 கூட தராதவங்க. இவங் களை நம்பியா டி.வி. ஆரம்பிக்கச் சொல்றீங்க. கட்சி தோற்ற நேரத்தில் ஒருத்தர் நமக்கு ஆதரவா வந்திருக்கார். அவரை நாம் காயப்படுத்திவிடக் கூடாது’ என்று வைகோ சொல்ல... கோபத்தில் வெளியேறினாராம் சம்பத்.
ஆம்... கோபத்தில் வெளியேறப் போகிறார் சம்பத் என்றே சொல்கிறார்கள்!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக