வெள்ளி, 5 அக்டோபர், 2012

கோவை, மதுரை, நெல்லை ஐ.டி., பூங்காக்களில் எதிர்பார்த்த முதலீடு வரவில்லை

கோவை, மதுரை, நெல்லை உள்ளிட்ட நகரங்களில், வெறிச்சோடிக் கிடக்கும், ஐ.டி., பூங்காக்களில், அரசு எதிர்பார்த்த முதலீடு வரவில்லை; ஐ.டி., பூங்காக்களின் வாடகையை கணிசமாகக் குறைத்து, நிறுவனங்களை ஈர்க்க, அரசு முடிவு செய்துள்ளது. கோவை, மதுரை, திருச்சி, நெல்லை, ஓசூர், சேலம், வேலூர் ஆகிய நகரங்களில், ஐ.டி., நிறுனங்கள், குடியிருப்புகள், சமூக அடிப்படை வசதிகள் உள்ளிட்டவை கொண்ட தகவல் தொழில்நுட்ப பூங்காக்கள் (ஐ.டி., பார்க்), அரசால் அமைக்கப்பட்டுள்ளன. அரசின், "எல்காட்' மற்றும் தனியார் பங்களிப்புடன் நிறைவேற்றிய, இத்திட்டம், 2007-08ம் ஆண்டில் துவங்கப்பட்டது. கோவை, மதுரை, நெல்லை, சேலம், திருச்சி நகரங்களில், பூங்காவின் கட்டுமானப் பணிகள் முடிந்து, இரண்டாண்டுகளுக்கு மேலாகிறது.
ஓசூரில், கட்டுமானப் பணிகள் நடந்து வருகின்றன. ஐ.டி., பூங்காக்கள் அமைக்க, 300 கோடி ரூபாய், அரசால் செலவிடப்பட்டுள்ளது. ஒவ்வொரு, ஐ.டி., பூங்காவும், 10 லட்சம் முதல், 20 லட்சம் சதுர அடி கொண்டவைகளாக உள்ளன. இதில், திருச்சி ஐ.டி., பூங்காவில், 30 சதவீத இடமும், கோவையில், 60 சதவீத இடத்தையும், தனியார் நிறுவனங்கள் வாடகைக்கு எடுத்துள்ளன. மதுரை, நெல்லை பூங்காக்களுக்கு, இதுவரை யாரும் வரவில்லை. தனியார் ஐ.டி., பூங்காக்களின் வாடகையை விட, அரசு பூங்காக்களின் வாடகை அதிகமாக இருப்பதே, காலியாக இருப்பதற்கு காரணம் என, ஐ.டி., நிறுவனங்கள் தரப்பில் கூறப்படுகிறது. கோவை ஐ.டி., பூங்காவில், சதுர அடிக்கு, 23 முதல், 40 ரூபாயும், திருச்சியில், 28 ரூபாயும் வாடகையாக நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. இந்த நகரங்களில், தனியார் கட்டடங்களின் வாடகை, சதுரடிக்கு, 15 முதல், 20 ரூபாயாகத்தான் உள்ளது. கூடுதல் செலவு: மேலும், கடுமையான மின்வெட்டு இருப்பதால், ஜெனரேட்டர்களை இயக்குவதால், கூடுதல் செலவு ஏற்படுகிறது. இந்நிலையில், கட்டட வாடகையும் அதிகமாக இருந்தால், நிறுவனத்தின் ஒட்டுமொத்த செலவு கூடுதலாகிறது. இது, நஷ்டத்துக்கே வழிவகுக்கும் என்பதால், ஐ.டி., நிறுவன நிர்வாகிகள் ஆர்வம் காட்டவில்லை.
இது குறித்து ஐ.டி., நிறுவன நிர்வாகி ஒருவர் கூறியதாவது:
இரண்டாம் தர நகரங்களில், ஐ.டி., பூங்காக்களை அமைப்பதே, உற்பத்திச் செலவை குறைப்பதற்காகத் தான். செலவு அதிகரித்தால், நிறுவனத்தை நடத்துவது கடினம். இவ்வாறு அவர் கூறினார். ஐ.டி., நிறுவனங்கள் மூலம், 6,000 கோடி ரூபாய்க்கும் மேல், முதலீடு அதிகரித்து வேலைவாய்ப்பு கிடைக்கும் என்ற அரசு எதிர்பார்ப்பு பலன் தரவில்லை. இந்நிலையில், அரசு ஐ.டி., பூங்காக்களின் வாடகையைக் குறைக்க, எல்காட் அதிகாரிகள், ஐ.டி., நிறுவன நிர்வாகிகள் கொண்ட குழுவை அரசு அமைத்துள்ளது. இக்குழு, அரசு பூங்காக்களின் வாடகையை கணிசமாகக் குறைக்க பரிந்துரைக்கவுள்ளது. இம்மாத இறுதிக்குள், வாடகை குறைப்பு அறிவிப்பு வெளியாகும் என, எல்காட் வட்டாரங்கள் தெரிவித்தன.
- நமது சிறப்பு நிருபர் -

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக