வெள்ளி, 19 அக்டோபர், 2012

அமெரிக்கா : நிறுவனங்கள் மிரட்டி வாக்களிக்குமாறு ஊழியர்களை விரட்டுகின்றன

மிட் ராம்னி
டுத்த மாதம் நடக்கவிருக்கும் அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசுக் கட்சிக்கு வாக்களிக்கா விட்டால் கடும் பின் விளைவுகளைச் சந்திக்க வேண்டியிருக்கும்’ என்று தனது ஊழியர்களுக்கு எச்சரிக்கை விடுத்திருக்கிறது அமெரிக்காவின் இரண்டாவது பெரிய தனியார் நிறுவனமான கோஹ் இண்டஸ்ட்ரீஸ். எண்ணைய் சுத்திகரிப்புத் துறையில் ஈடுபட்டுள்ள இந்த நிறுவனம் டேவிட் கோஹ், சார்லஸ் கோஹ் சகோதரர்களின்  கட்டுப்பாட்டில் உள்ளது.

2009ம் ஆண்டு அமெரிக்க அதிபரான பராக் ஒபாமாவின் நான்காண்டு ஆட்சிக்காலம் முடிந்த பிறகு, 2013ல் அடுத்த அமெரிக்க அதிபராக பதவி ஏற்பவரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் அடுத்த மாதம் நடக்கவிருக்கிறது. இதனை ஒட்டி பிரச்சாரங்கள், விவாதங்கள் என அமெரிக்க தேர்தல் திருவிழா களை கட்டியுள்ளது. ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த இப்போதைய அதிபர் ஒபாமாவுக்கும், குடியரசுக் கட்சி வேட்பாளரான $250 மில்லியனுக்கு (ரூ 1200 கோடி) அதிபதி மிட் ரோம்னி என்பவருக்கும் தான் முக்கிய போட்டி.
‘மிட் ரோம்னிக்கும் மற்ற வலது சாரி வேட்பாளர்களுக்கும் வாக்களிக்கும்படி வற்புறுத்தி’ கோஹ் இண்டஸ்ட்ரீஸ் தனது கிளை நிறுவனமான ஜார்ஜியா பசிபிக்கில் பணி புரியும் 45,000 ஊழியர்களுக்கு மின்னஞசல் அனுப்பியிருக்கிறது. ‘மிட் ரோம்னிக்கு ஓட்டுப் போடவில்லையென்றால் 50,000க்கும் அதிகமான நமது ஊழியர்கள் பெட்ரோல் விலை உயர்வு, கட்டுக்கடங்கா விலைவாசி ஏற்றம் போன்ற கடும் பின்விளைவுகளை சந்திக்க நேரிடும்’ என மிரட்டியுள்ளது அந்த மின்னஞ்சல்.
சில நாட்களுக்கு முன் மிட்ரோம்னி ஒஹையோ மாநிலத்தில் உள்ள பில்ஸ்வெலி எனும் ஊருக்கு பிரச்சாரம் செய்ய் வந்த போது செஞ்சுரி மைனைச் சேர்ந்த நூற்றுகணக்கான சுரங்கத் தொழிலாளர்கள் அவரது பிரச்சாரக் கூட்டத்தில் பங்கெடுத்தனார். ஆனால் பின்னர், ‘அந்த பிரச்சாரக் கூட்டத்திற்குப் போகவில்லை என்றால் தங்கள் வேலை பறிக்கப்படும்’ என்று நிறுவனம் பய முறுத்தியதாலே சென்றதாக பலர் ஒப்புகொண்டனர்.  நிறுவனமே தொழிலாளர்களை பயமுறுத்தி அனுப்பி விட்டு அந்த நாளுக்கான சம்பளமும் கொடுக்காமல் ரோம்னிக்காக ஆள் திரட்டியிருக்கிறது.
அந்தச் சுரங்க நிறுவனத்தின் தாய் நிறுவனமான முர்ரே எனர்ஜி, ‘அந்தக் கூட்டத்துக்குப் போகுமாறு மேலாளர்கள் தொழிலாளர்களைக் கட்டாயப் படுத்தியதை’ ஒப்புக் கொண்டுள்ளது.  முர்ரே எனர்ஜியின்  தலைமை நிர்வாக அலுவலர் பாப் முர்ரே கடந்த இரண்டு ஆண்டுகளில் மிட்ரோம்னிக்கு ஆதரவாக குடியரசுக் கட்சிக்கு $900,000 (சுமார் ரூ 5 கோடி) நிதி  கொடுத்திருக்கிறார். ‘போட்ட காசுக்கு ரோம்னி வெற்றி பெற்று அதிபரானால்தான் ஏதாவது சம்பாதிக்க முடியும்’ என்று முர்ரே சிந்தித்ததில் தவறில்லைதான்.
சென்ற வாரம் டைம்ஷேர் பெருநிறுவன முதலாளி டேவிட் சீகல் நவம்பரில் ஒபாமா மீண்டும் வெற்றி பெற்றால் ஊழியர்களை நீக்கவிருப்பதாக மிரட்டி மின்னஞ்சல் அனுப்பியிருக்கிறார். ஏஎஸ்ஜி சாப்ட்வேர் சொல்யூஷன்ஸ் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அலுவலர் ஆர்தர் ஆலன், ‘ஒபாமா வெற்றி பெற்று வேலை போனால் அவர்களேதான் பொறுப்பு’ என்று நிறுவன ஊழியர்களுக்கு மின்னஞ்சல் அனுப்பியிருக்கிறார்.
‘எந்தக் கட்சி ஜெயித்தால் என்ன, முதலாளிகளின் நலன்களுக்காகத்தான் வேலை செய்ய போகிறார்கள்’ என்று வால்ஸ்ட்ரீட் ஆக்கிரமிப்பாளர்கள் உண்மையை பிரச்சாரம் செய்து கொண்டிருக்கும் வேளையில் முதலாளிகள் வேறு விதமாக சிந்திக்கிறார்கள். ‘யார் அதிபரானலும் நமக்கு நல்லது தான் ஆனால், ஒபாமாவை விட மிட்ரோம்னி வந்தால் நமக்குக் கூடுதல் நன்மை இருக்கும்’ என அவர்கள் ஆதரவு மிட் ரோம்னியின் பக்கம் சாய்ந்திருக்கிறது. நேருவை சோஷ்லிஸ்ட் என்றும், தா பான்டியனை கம்யுனிஸ்ட் என்றும் நம் நாட்டில் சிலர் அழைப்பது போல ஒபாமாவை இவர்கள் கம்யூனிஸ்ட் என்றும் சோஷலிஸ்ட் என்றும் கருதுகிறார்கள்.
நாம் இந்தியாவில் தேர்தல் பாதை திருடர் பாதை என்றால் நடுத்தர வர்க்க கனவான்கள் ‘இப்போதைய தேர்தல் ஜனநாயகம்தான் சிறந்தது’ என்பார்கள். இந்தியாவில் நடக்கும் தேர்தல் சீரழிவுகளைப் பார்த்து, ‘சே அமெரிக்காவில் இது போல் இல்லை’ என்று மனம் வெதும்புவார்கள்.
அமெரிக்கா தூக்கிப் பிடிக்கும் இந்த புழுத்துப் போன ஜனநாயகமும் அதன் மூலம் அமைக்கப்படும் அரசுகளும் முதலாளிகளுக்கானவைதான் என்றால் நம்பமாட்டார்கள். மக்களை வெறும் பார்வையாளர்களாக வைத்திருக்கும் இந்த ஜனநாயக அரசமைப்பு முதலாளிகளுக்காக முதலாளிகளால் ஏற்படுத்தப்படும் ஒரு முதலாளித்துவ கைப்பொம்மை. அமெரிக்காவானாலும் சரி இந்தியாவானாலும் சரி இதுதான் நிலைமை என்பதை புரிந்து கொள்ள வேண்டும். பீகாரில் வாக்குச்சாவடி கைப்பற்றப்படுவதைப் போலத்தான் அமெரிக்காவில் பெரும் நிறுவனங்கள் மிரட்டி வாக்களிக்குமாறு ஊழியர்களை விரட்டுகின்றன. போலி ஜனநாயகம் இங்கு மட்டுமில்லை அது அமெரிக்காவிற்கும் சொந்தம்தான்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக