சனி, 27 அக்டோபர், 2012

மதுரை ஆதீன நித்தி டிஸ்மிஸ்! ஒரு செட்டப் விளையாட்டு

அருணகிரிநாதரின் ‘நித்தி டிஸ்மிஸ்’: எல்லாமே ஒரு செட்டப் விளையாட்டு அல்லவா? அருணகிரிநாதரின் டிஸ்மிஸ் ஆர்டரை எடுத்துக்கொண்டு கோர்ட்டுக்கு போனால், நித்திக்கு 100 சதவீத வெற்றி நிச்சயம். அது அவருக்கும் தெரிந்த நிலையிலும், பதுங்குகிறார்.

Viruvirupu
மதுரை ஆதீனத்தில் இருந்து நித்தி வெளியேற்றப்பட்டது, “சிவபெருமான கனவில் வந்து சொன்னார், ஆளை டிஸ்மிஸ் பண்ணி அனுப்பி விட்டேன்” என்று அருணகிரிநாதர் சொல்வதுபோல சுலபமான விவகாரம் கிடையாது. சட்டப்படி, நித்தியை அவ்வளவு சுலபமாக நீக்கவும் முடியாது.
வயலில் வேலை செய்யும் ஆளை வரப்பில் நின்றுகொண்டு, “போதும், நீ கிளம்புப்பா” என்று சொல்லக்கூடிய அளவில் சுலபமல்ல இது. இது நித்திக்கும் நன்றாகவே தெரியும்.
இளைய ஆதீனமாக அறிவிக்கப்பட்ட ஒருவரை நீக்க வேண்டுமானால், அதற்கென நடைமுறைகள் உள்ளன. நீக்கப்படும் நபருக்கு நோட்டீஸ் அனுப்பி, 15 நாட்கள் அவகாசம் கொடுத்து விளக்கம் கேட்க வேண்டும். அதன்பின், “உங்கள் பதிலில் திருப்தி இல்லை” என்று எழுத்து மூலம் காரணம் கூறித்தான், அவரை நீக்க முடியும்.

“மதுரை ஆதீனம் கோர்ட் வாசல்படி ஏறுவதில்லை” என்று அருணகிரிநாதர், அவ்வப்போது சவுண்டு விட்டாலும், கோர்ட் விவகாரங்களில் நன்றாக அடிபட்ட ஆள் அவர். வக்கீல்களின் சகவாசமும் அதிகமுண்டு. சட்ட ஆலோசகர்களும் உண்டு. அப்படியிருந்தும், இளைய ஆதீனமாக அறிவிக்கப்பட்ட ஒருவரை நீக்குவதற்கான நடைமுறைகள் எதையும் பின்பற்றாமல், “நித்தியானந்தாவை வீட்டுக் கிழித்து அனுப்பி விட்டேன்” என்கிறார் ஹாயாக.
அருணகிரிநாதருக்கே சட்ட விவகாரங்கள் தெரிந்திருந்தால், பள்ளிகொண்டு எழுந்தபின் கோர்ட் படியேறும் நித்திக்கு எவ்வளவு தெரிந்திருக்க வேண்டும்?
அவரும், “யோவ் நீர் டிஸ்மிஸ்” என்று சொல்லப்பட்டவுடன், சொகுசுக் கட்டிலை லாரியில் ஏற்றிக்கொண்டு கிளம்பிவிட்டார். சட்ட நடவடிக்கை ஏதுமில்லை. அருணகிரிநாதரின் டிஸ்மிஸ் ஆர்டரை எடுத்துக்கொண்டு கோர்ட்டுக்கு போனால், நித்திக்கு 100 சதவீத வெற்றி நிச்சயம். அது அவருக்கும் தெரிந்த நிலையிலும், பதுங்குகிறார்.
இந்த விவகாரத்தில், அருணகிரியாரும், நித்தி சுவாமியும், தங்களுக்குள் பேசி வைத்துக்கொண்டு விளையாட்டு காட்டுகிறார்கள் என்ற சாத்தியம், நிச்சயம் உள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக