சனி, 20 அக்டோபர், 2012

பெரியார்,அம்பேத்கர் அண்ணா. யார் இவங்கல்லாம்? எங்கம்மா பக்கத்துல

அரசு திட்டங்கள் சரியாக நடக்கிறதா?' என  மதிப்பிட  சேலத்திற்கு அக் 18ஆம் தேதி  சட்டமன்ற மதிப்பீட்டு குழுவினர் வந்தனர். இக்குழுவை தி.மு.க, கம்யூனிஸ்ட்டுகள், தே.மு.தி.க உட்பட்ட கட்சிகள் புறக்கணிக்க பவானி எம்.எல்.ஏ பி.ஜி. நாராயணன் தலைமையில் தேனி தங்க தமிழ்செல்வன், காமராஜ், தன்சிங், நீலகண்டன் ஆகிய அ.தி.மு.க வினர் மட்டும் பங்கேற்ற ஆளும்கட்சி மதிப்பீட்டு குழுவாக ஒவ்வொரு இடங்களாக பார்வையிட்டனர். சேலம் சங்கர் நகரில் உள்ள ஆதி திராவிடர் மகளிர் விடுதியில் ஆய்வு செய்த போது ஒவ்வொரு அறையாக உள்ளே நுழைய உள் அறையின் சுவரில் மாட்டப்பட்டிருந்த படங்களை கண்டதும் எரிச்சலடைந்தனர்....
'யார் இவங்கல்லாம் எங்கம்மா பக்கத்துல இவங்கல்லாம் இருக்க கூடாது' என்றார் தங்க தமிழ்செல்வன்.
அவர் இருக்க கூடாது என சொன்ன படங்கள் தந்தை பெரியார், அண்ணல் அம்பேத்கர்,
அறிஞர் அண்ணா.


'எங்க புரட்சி தலைவி அம்மா தமிழ் இனத்திற்காக பாடுபட்டு கொண்டு இருக்குற பெரிய தலைவி அவங்க படத்தை சின்னதா வச்சுட்டு இவங்க படத்தை எல்லாம் பெருசா வச்சு அவமானபடுத்துறீங்களா?! அதும் திமுக கட்சிக்காரங்க கொடுத்த படத்தை வச்சா நாங்க சும்மா விடுவமா' என ஏகத்துக்கும் கொந்தளித்த குழுவினர் 'அதெல்லாம் தூக்கி கெடாசுங்க' என கூட வந்தவர்களை அதட்ட மளமளவென மேலே ஏறி அண்ணாவை பிடித்து இழுத்தனர். சுவற்றில் இருந்து வர மறுத்த அண்ணல் அம்பேத்கரை வெடுக்கென புடுங்க ஆணியோடு வெளியே வந்தது அண்ணலின் படம்.
ஜெ அருகே இருந்த தந்தை பெரியாரின் படத்தையும் இதே போல பிடுங்கி தூக்கி கெடாசி தங்கள் அம்மாவை சோலோ ஆக்கினர்... எங்க அம்மாவையே சிறுமைபடுதுறியா எப்படி பார்க்கணுமோ பார்த்துக்குறோம்' என விடுதி பொறுப்பாளரை மிரட்டியபடியே கிளம்பியது அ.தி.மு.க குழு.
இத்தனையையும் வேடிக்கை மட்டுமே பார்க்க முடிந்தது மாவட்ட முதல் குடிமகனான மாவட்ட ஆட்சியர் மகரபூசனத்தால்.
'முன் அறையிலேயே முதல்வர் அம்மா படம் வச்சுருக்கோம் அது இல்லாம உள்ளேயும் இங்க வச்சுருக்கோம் இது  ஆதி திராவிடர் விடுதி அதனால் விடுதி மாணவியருக்கு முன்மாதிரியாக இருக்க வேண்டும் என்று ஒடுக்கப்பட்ட மக்கள்  விடுதலைக்காக அயராது உழைத்த தலைவர்கள் படத்தை வைத்தோம் அது தி.மு.கவை சேர்ந்தவர்கள் போன ஆட்சியிலேயே கொடுத்த படம்... தி.மு.க வினர் பெயர் அந்த படத்தின் கீழே அச்சிடப்பட்டு இருந்தது. அது பிடிக்கவில்லை என்றால் அங்கு ஏதாவது பேப்பர் ஒட்டி மறைத்து இருக்கலாம் அதைவிட்டு குண்டர்கள் போல செயல்பட்டு தேசிய தலைவர்களையே அப்புறப்படுத்தி அவமானப்படுத்தலாமா?'என்றனர் அங்கிருந்த சில மாணவிகள்.
அண்ணல், தந்தை, அறிஞர் கொள்கைகளோடு எங்கள் அம்மாவிற்கு எந்த தொடர்பும் இல்லை என சொல்வதாக தான் அமைந்தது இந்த செயல்...
செய்தி: இளங்கோவன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக