சனி, 20 அக்டோபர், 2012

பிராமணாள் கஃபே ஹோட்டல் பெயரை நீக்கும் போராட்டம்: 150 பேர் கைது

ஸ்ரீரங்கத்தில் கிருஷ்ண அய்யர் என்பவர் பிராமணாள் கஃபே என்ற ஹோட்டலை நடத்தி வருகிறார். இதற்கு திராவிடர் கழகத்தைச் சேர்ந்தவர்கள் பலத்த எதிர்ப்பை தெரிவித்து போராட்டங்கள் நடத்தினர் என 2012 அக்டோபர் 12ம் தேதி நக்கீரன் இதழில் செய்தி வெளியானது.
இந்த நிலையில் பெரியார் காலத்தில் அவரால் போராடி மூடப்பட்ட பிராமணாள் கஃபே தமிழக முதல் அமைச்சர் ஜெயலலிதா தொகுதியான ஸ்ரீரங்கத்தில் திடீரென்று முளைத்திருப்பது திராவிடர் கழகத்தில் உள்ளவர்களிடையே கொதிப்பை ஏற்படுத்தியிருக்கிறது என்றும், இதனால் அந்த ஹோட்டல் பெயரை அழிக்கும் போராட்டம் தந்தை பெரியார் திராவிடர் கழகம் சார்பில் நடைபெறும் என்றும், அந்த இயக்கத்தின் தலைவர் ஆனூர் ஜெகதீசன் அறிவித்திருந்தார். இதன்படி இன்று (20.10.2012) காலை 10 மணிக்கு ஸ்ரீரங்கம் ராஜகோபுரம் முன்பி-ருந்து ஊர்வலகமாக புறப்பட்டனர் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர். இதில் போலீசாருக்கும், ஊர்வலத்தில் வந்தவர்களுக்கும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதையடுத்து 150 பேர் கைது செய்யப்பட்டனர். இந்த போராட்டம் தொடர்ந்து நடைபெறும் என்றும், பிராமணாள் கஃபே பெயரை நீக்காமல் விடமாட்டோம் என்றும் கோவை ராமகிருஷ்ணன் கைது செய்யப்படும் முன் செய்தியாளர்களிடம் கூறினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக