செவ்வாய், 9 அக்டோபர், 2012

கிரிக்கெட்டில் அம்பயர்களின் 'மேட்ச் பிக்சிங் ஒப்புதல் வாக்குமூலம் வீடியோ

டெல்லி: லஞ்சம் பெற்றுக் கொண்டு யாருக்கு வேண்டுமானாலும் சாதகமாக தீர்ப்பளிக்க கிரிக்கெட் நடுவர்கள் ஒப்புக் கொண்ட காட்சிகளை இண்டியா டி.வி. தொலைக்காட்சி திங்கள்கிழமை ஒளிபரப்பி பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
"ஆப்பரேஷன் வேல்ர்டு கப்" என்ற பெயரிலான இந்த காட்சியில் வங்கேதசம், பாகிஸ்தான் மற்றும் இலங்கையைச் சேர்ந்த 6 நடுவர்கள் பணம் பெற்றுக் கொள்ள சம்மதித்தது பதிவாகியுள்ளது. நடந்து முடிந்த டி20 உலகக் கோப்பை போட்டிகளிலும், இலங்கை பிரீமியர் லீக் ஆட்டங்களிலும் முடிவுகளை மாற்றி அறிவிக்க இவர்கள் ஒப்புதல் தெரிவித்திருக்கின்றனர்.
இந்த முறைகேட்டில், பாகிஸ்தானைச் சேர்ந்த நதீம் மற்றும் அனீஸ் சித்திக், வங்கதேசத்தைச் சேர்ந்த நாதிர் ஷா, இலங்கையைச் சேர்ந்த காமினி திசநாயக, வின்ஸ்டன் மற்றும் சகாரா கல்லேக் ஆகிய 6 நடுவர்கள் ஈடுபட்டுள்ளதாக அந்தத் தொலைக்காட்சி ஒளிபரப்பில் தெரியவந்திருக்கிறது.
ஆனால் ஷா மற்றும் ஷரஃபுதுல்லா ஆகிய நடுவர்கள் மட்டும் இந்த முறைகேட்டுக்கு ஒப்புதல் தெரிவிக்கவில்லை. இவர்களிருவரும் ஐசிசி நடுவர்கள் பட்டியலில் இடம் பெற்றுள்ளனர். வங்கதேச பிரீமியர் லீக் ஆட்டங்களில் "மேட்ச் பிக்சிங்'குக்கு பாகிஸ்தான் வீரர் நஸீர் ஜம்ஷெட் ஒப்புக் கொண்டதாகவும் ஷா தெரிவித்துள்ளார்.
செப்டம்பர் 17-ந் தேதி நடைபெற்ற 20 ஓவர் உலகக் கோப்பை போட்டியின் பயிற்சி ஆட்டத்தில் ஆடுகளத்தின் தன்மை, டாஸ், அணி வீரர்கள் விவரம் உள்ளிட்ட தகவல்களை வெறும் ரூ. 50 ஆயிரத்துக்கு வெளியிடுவதாக இலங்கை நடுவர் கல்லேக் ஒப்புக் கொண்டது விடியோவில் பதிவாகியுள்ளது. குறிப்பாக இலங்கை கிரிக்கெட் வாரியத்தில் உள்ள அதிகாரிகளுக்கு மதுபானம் வாங்கித் தந்தால் முடிவுகளை எப்படி வேண்டுமானாலும் வெளியிடுவர் என்று திசநாயக உறுதியளித்ததும் ஒளிபரப்பானது.
பாகிஸ்தானைச் சேர்ந்த மற்றொரு நடுவர் சித்திக், "பணம் அளித்தால் பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் இந்தியாவுக்குச் சாதகமாக செயல்படுவதாகவும், பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தை தான் சமாளித்துக் கொள்வதாகவும்' கூறியது வெளியாகியுள்ளது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக