வெள்ளி, 19 அக்டோபர், 2012

அதிமுக அமைச்சர்களின் மானம் போன வழக்கு கலைஞருக்கு சம்மன்

கருணாநிதிக்கு கோர்ட் சம்மன்: தன்மான அமைச்சர்கள் குடும்பம் பற்றிய அவதூறு !

Viruvirupu
அவதூறு வழக்கில் தி.மு.க. தலைவர் கருணாநிதி கோர்ட்டுக்கு நேரில் வரவேண்டும் என்று சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. தமிழக அரசு போடும் ஏராளமான அவதூறு வழக்குகளில் இந்த வழக்கு, முதல்வர் ஜெயலலிதாவை ‘அவதூறு’ செய்த வழக்கு அல்ல. அவரது அமைச்சர்களை அவதூறாக பேசிய வழக்கு!
ஜெயலலிதாவின் அமைச்சரவையில், பச்சைமால், சிவபதி, ஆகிய இருவரும், இன்று காலை 8 மணி நிலவரப்படி அமைச்சர்களாக உள்ளார்கள்.
கடந்த 23.8.2012 அன்று முரசொலி பத்திரிகையில் கேள்வி-பதில் பகுதியில் பதிலளித்த கருணாநிதி, தன்மானச் சிங்கங்களான இந்த இரு அமைச்சர்களின், தன்மானத்துக்கு ஊறு விளைவிக்கும் விதத்திலும், வானளாவியுள்ள இவர்களின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் விதத்திலும், பதில் அளித்துள்ளார் என்பது குற்றச்சாட்டு.

தமிழக அரசு சார்பில் வழக்கறிஞர் எம்.எல்.ஜெகன் மனு தாக்கல் செய்த வழக்கில், “தமிழக அமைச்சர்கள் பச்சைமால் மற்றும் என்.ஆர்.சிவபதி ஆகியோர் பதவி பிரமாணம் எடுத்துக்கொண்டாலும், அவர்களுடைய குடும்ப உறுப்பினர்கள் மூலம் பைல்களை கிளீயர் செய்து கொள்கிறார்கள் என்று கருணாநிதி எழுதியது வெளியானது.
இந்த செய்தி கடும் அவதூறாக உள்ளதால், இச்செய்தியை வெளியிட்ட பத்திரிகை ஆசிரியர் முரசொலி செல்வத்தையும், அதை எழுதிய கருணாநிதியையும் அவதூறு சட்டத்தின் கீழ் தண்டிக்க வேண்டும்” என்று குறிப்பிட்டிருந்தார்.
இந்த மனு, நேற்று மாவட்ட முதன்மை செசன்ஸ் நீதிமன்ற நீதிபதி பொன்.கலையரசன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி, கருணாநிதி மற்றும் முரசொலி ஆசிரியர் செல்வம் ஆகியோர் வரும் டிசம்பர் 18-ம் தேதியன்று நேரில் ஆஜராக சம்மன் அனுப்ப உத்தரவிட்டார்.
டிசம்பர் 18-ம் தேதி வரை, பச்சைமால் மற்றும் என்.ஆர்.சிவபதி ஆகிய இருவரும் அமைச்சர்களாக இருந்தால், வழக்கு நிற்கும்.
அதற்கு முன் இந்த தன்மானச் சிங்கங்கள் அமைச்சரவையில் இருந்து கழுத்தைப் பிடித்து வெளியே தள்ளப்பட்டு தரையில் வீழ்ந்தால், “எதற்காக அவர்களது பதவிகள் பறிக்கப்பட்டன” என்று தி.மு.க. வழக்கறிஞர்கள் கோர்ட்டில் கேள்வி கேட்பார்கள்.
அங்குதான் உள்ளது சிக்கல்!
ஏனென்றால், நம்ம அமைச்சரவையில் இருந்து த.மா.சிங்கங்கள் தூக்கியெறியப்படுவதற்கான காரணங்கள் வெளியே சொல்லும் அளவுக்கு கௌரவமானவை அல்ல. தமக்கு பெரிய காம்ப்ளக்ஸ் கட்டினார், சின்ன வீடு வைத்துக் கொண்டார்” என்றெல்லாம் கோர்ட்டில் எப்படி சொல்வது?
இதனால், நம்ம அமைச்சர்கள் இருவருக்கும் பதவி உள்ளவரை, இந்த அவதூறு வழக்குக்கு உயிர் இருக்கும். அல்லது, இந்த வழக்குக்கு உயிர் இருக்கும்வரை அமைச்சர்களின் பதவிக்கு ஆபத்து இல்லை!
பச்சைமால் என்.ஆர்.சிவபதி ஆகிய இருவரும், இப்போது, கருணாநிதியை மனதுக்குள் வாழ்த்திக்கொண்டு இருப்பார்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக