வெள்ளி, 12 அக்டோபர், 2012

குறைந்த சம்பளம் வாங்கிக் கொண்டு கடுமையாக உழையுங்கள்.

காந்தியத்தின் மதிப்பு காலத்தால் அழியாதது. இந்திய இளைஞர்கள் காந்திய மதிப்பீடுகளையும் நவீன தொழில்நுட்பத்தையும் இணைத்து ஒரு முன்னேற்றப் பாதையை வகுக்க வேண்டும். அதை முன்மாதிரியாய் உலகமே பின்பற்றும்”.
இதைச் சொன்னவர் காந்தியத்தின் 21ம் நூற்றாண்டு விற்பனைப் பிரதிநிதிகளான அண்ணா ஹசாரேவோ, தமிழ் அருவி மணியனோ, அப்துல் கலாமோ இல்லை.
பாஜக தலைவர் சுதீந்திர குலகர்னி எழுதிய ‘கைராட்டையின் இசை -  இணைய யுகத்தில் மகாத்மா காந்தியின் அறிக்கை’ என்ற புத்தக வெளியீட்டு விழாவில் ஆண்ட்லியா மாளிகை கட்டிய அண்ணன் அம்பானி முகேஷ்தான் இப்படி பேசினார்.
அம்பானி மற்றும் உலக முதலாளிகள் அனைவரின் இன்பமான கனவுகளில் காந்தியம் இடம் பெறுகிறது என்பதில் யாருக்கும் சந்தேகம் இல்லை.
“உழைக்கும் மக்களே, காந்திய கொள்கைப்படி எங்களது நவீன ஆலைகளில் குறைந்த சம்பளம் வாங்கிக் கொண்டு கடுமையாக உழையுங்கள். சேரிகளில் வாழ்ந்து  கொள்ளுங்கள். ஏதாவது தேவைப்பட்டால் காந்திய கொள்கைப்படி உண்ணாவிரதம் இருங்கள். நான் ஆண்டிலியா மாளிகையில் உட்கார்ந்து கொண்டு காந்தியின் தர்மகர்த்தா கொள்கையை கடைப் பிடிக்கிறேன்”.
இதுதான் அம்பானியின் பேச்சின் உள்கிடக்கை என்று புரிந்து கொள்ள வேண்டும்.

“எனக்குப் புரிந்த வரை காந்தியின் மதிப்பீடுகளில் முதன்மையானது பிரிட்டிஷ் ஆட்சியிலிருந்து விடுதலை பெற்று சுயராஜ்யம் அமைத்தது”
என்று நினைவு கூர்கிறார் முகேஷ் அம்பானி. மக்களின் சுதந்திரப் போராட்டத்தை நீர்த்துப் போகச் செய்து தரகு முதலாளிகளிடம் அதிகாரத்தை மாற்றிக் கொடுத்த காந்தியின் உதவியை முகேஷ் அம்பானியால் மறக்க முடியாதுதான்.
“உண்மையான சுதந்திரம் என்பது 100 கோடி இந்தியர்களையும் பலப்படுத்துவது” என்று சொல்லி விட்டு “நான் ஒரு சிறிய மனிதன்தான். இணையத்தைப் பயன்படுத்தி இந்தியாவின் 100 கோடி மக்களையும் முன்னேற்ற முடியும்” என்று தொடர்ந்து விளக்குகிறார்.
முகேஷ் அந்தக் காலத்தில் அமெரிக்காவுக்கு படிக்கப் போயிருந்த போது அப்பாவிடம்  தொலைபேசியில் பேசுவாராம். இப்போது அமெரிக்காவில் படிக்கும் அவரது மகன் வீடியோ சாட்டில் பேசுகிறானாம்.
அமெரிக்காவிலிருந்து கள்ளத் தொலைபேசி இணைப்பு கொடுத்து அரசுத் துறைக்கு சேர வேண்டிய பல நூறு கோடி ரூபாய்களை ரிலையன்ஸ் ஆட்டையைப் போட உதவிய இணைய தொழில் நுட்பத்தின் சாத்தியங்கள் பற்றி முகேஷ் அம்பானிக்கு எந்த சந்தேகமும் இருக்க முடியாதுதான்.
“காந்தி நமக்கு அளித்த இரண்டாவது மதிப்பீடு உண்மையின் தேடல்” என்று பேசிய அவர் “தொலைபேசி அழைப்பு வரவில்லை என்று என் மகளிடம் பொய் சொன்னால், மிஸ்ட் கால் பட்டியலில் பார்த்து கண்டு பிடித்து விடுகிறாள் இதுதான் தொழில்நுட்பத்தின் சாதனை” என்று அதற்கு விளக்கம் தருகிறார்.
கிருஷ்ணா கோதாவரி படுகையில் இயற்கை வாயு தேடுவதற்கான செலவுக் கணக்கை இரண்டு மடங்காக்கியதை கண்டு பிடிப்பதற்கான தொழில் நுட்பம்தான் இன்னும் நமது அரசியல்வாதிகளிடம் வந்து சேரவில்லை.
“காந்தி சுயசார்பை கற்றுக் கொடுத்தார். இணையம் உங்கள் விருப்பம் போல எதையும் செய்வதை சாத்தியமாக்குகிறது. இணையத்தின் மூலம் வர்த்தகம் செய்யலாம் அல்லது அமெரிக்கக் கல்லூரியான எம்ஐடியின் உயிரியல் பட்டத்துக்கான பாடங்களை படிக்கலாம்”
என்பது மூத்த அம்பானியின் கடைசி அருள் வாக்கு.
21ம் நூற்றாண்டின் காந்தி அண்ணா ஹசாரே கார்ப்பரேட் ஆதரவுடன் ஊழல் எதிர்ப்பு போராட்டம் நடத்துவதும், முகேஷ் அம்பானி காந்தியைப் பற்றி புளங்காகிதம் அடைவதும் எதைச் சொல்லித் தருகின்றன? நியூட்டனின் மூன்றாம் விதியையா அல்லது ஒரு நாணயத்துக்கு இரண்டு பக்கங்கள் உண்டு என்பதையா?
1909க்கும் 1912க்கும் இடையில் அப்போதைய ரத்தன் டாடா மூன்று தவணைகளாக மொத்தம் ரூ 75,000 தென்னாபிரிக்காவில் காந்தி நடத்திய ஒத்துழையாமை இயக்கத்திற்கு நன்கொடை அனுப்பியிருக்கிறார்.
’21ம் நூற்றாண்டின் கார்ப்பரேட் ஏஜென்டு அண்ணா ஹசாரே போலவே காந்தி அந்த கால கார்ப்பரேட்டுகளின் ஏஜென்டாக இருந்திருக்கிறார்’ என்பதன் நன்றி உரைதான் முகேஷ் அம்பானியின் பேச்சு. இனி காந்தியம், அம்பானியம் இரண்டின் அருமை பெருமைகளை இந்து ஞான மரபின் தொடர்ச்சி என்று ஜெயமோகன் எழுதவேண்டியதுதான் பாக்கி!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக