சனி, 6 அக்டோபர், 2012

ஜெயலலிதா, ஜெயகுமார் பதவியை பறித்த பின்னணி இதோ! மலையாள ஜோசியன்

 ஜெயலலிதா, ஜெயகுமார் பதவியை பறித்த பின்னணி இதோ! மலையாள ஜோசியரின் “അടുത്ത മുഖ്യമായ മന്ത്രി”!!
Viruvirupu
தமிழக சட்டசபை சபாநாயகர் பதவியில் இருந்து டி.ஜெயக்குமார் இன்று திடீரென ராஜினாமா செய்த காரணம் என்ன? அ.தி.மு.க. வி.ஐ.பி. ஒருவர் மிரட்சியுடன் கூறியது, “எல்லாம் கேரள ஜோதிடம் செய்த வேலைதான். இப்படித்தான் நடக்கும் என்று எனக்கு ஏற்கனவே தெரியும். அவர் (ஜெயக்குமார்) எம்.எல்.ஏ.-வாக இருப்பதால் கட்சியில் இருந்து நீக்கப்படுவதில் இருந்து தப்பித்தார்”
என்ன விவகாரம் என்று விசாரித்தபோது, அவர் கூறியது கதை போல இருந்தாலும், சுவாரசியமாக உள்ளது.
சொத்துக் குவிப்பு வழக்கு கொஞ்சம் ஆட்டம் காட்டிக் கொண்டிருந்த நாட்களில், ஜெயலலிதா ஒருவேளை முதல்வர் பதவியில் இருந்து இறங்க வேண்டி வரலாம் என்பதாக ஒரு நிலைமை இருந்தது. (அதனால்தான் பின்னர், சசிகலா கார்டனில் சேர்த்துக் கொள்ளப்பட்டார்) அப்போது தொடங்கிய கதை இது.
இதில் ஜெயக்குமார் எப்படி சிக்கினார்?

அ.தி.மு.க. வி.ஐ.பி.கள் பற்றி கட்சிக்கு உள்ளேயே சுவாரசியமாக காமென்ட்ஸ் கேட்க முடியும். “இவர் இந்த வாரத்துடன் காலி. அவருடைய ஆட்டம் இன்னும் ஒரு மாதம்தான்” என்றெல்லாம், பெயர் குறிப்பிட்டே சொல்வார்கள். ஆனால், ஜெயக்குமார்? இவரது வீழ்ச்சி யாருமே எதிர்பார்க்காத ஒன்று.
ஜெயலலிதாவின் ஒவ்வொரு அமைச்சரவையிலும் தவறாமல் இடம்பிடிக்கும் அளவுக்கு செல்வாக்கு படைத்த ஜெயக்குமார் தூக்கி எறியப்பட வேண்டுமென்றால், மகா வில்லங்கமான ‘எதிலோ’ சிக்கியிருக்க வேண்டும்.
செப்டம்பர் 18-ம் தேதி ஜெயக்குமாரின் 52-வது பிறந்தநாள். இந்த விழா கொண்டாட்டம்தான் அவருடைய பதவிக்கு உலை வைத்தது என்பது பொதுப்படையாக வெளியே அடிபடும் பேச்சு.
“அம்மாவைத் தவிர வேறு யாரும் பிறந்தநாள் கொண்டாட முடியாது” என்பது அ.தி.மு.க-வின் எழுதப்படாத விதி. அதை மீறி ஜெயக்குமார் பிறந்தநாள் கொண்டாடியதும், ஆள் கவிழ்ந்ததற்கு ஒரு காரணமாக இருக்கலாம் என்பதே பலமான ஊகம்.
பிறந்தநாள் விழாவில் ‘அடுத்த முதல்வர்’ என்று கோஷம் போட்ட விவகாரமும் அவருடைய பதவிக்கே வேட்டு வைத்துவிட்டது” என்று சில குரல்கள் கட்சிக்கு உள்ளேயே உள்ளன.
இப்போது ஜெயக்குமார் தரப்பு, “ஐயோ.. நாங்க சும்ம்ம்மா.. வீட்டில் ஹேப்பி பர்த்டே பாடிவிட்டு கேக் சாப்பிட்டோம்” என்கிறார்கள். சாப்பிட்டது, ரொம்ம எக்ஸ்பென்சிவ் கேக் ஆகிவிட்டது. எவ்வளவு எக்ஸ்பென்சிவ் என்றால், அண்ணனின் சபாநாயகர் பதவியின் விலை.
சரி. நிஜமாகவே அண்ணன் பிறந்தநாள் கொண்டாடித்தான் காலியானாரா?
நாம் விசாரித்தவரை, அதுவும் ஒரு காரணம்தான். ஆனால், அதைவிட பெரிய காரணம், அண்ணனுக்கு ஏற்பட்ட முதலமைச்சர் நாற்காலி மீதான ஆசை!
சென்னை பகுதியைச் சேர்ந்த அ.தி.மு.க. பெண் பிரமுகர் ஒருவரே அண்ணனுக்கு நாற்காலி ஆசையை வளர்த்து விட்டவர் என்கிறார்கள் விபரம் அறிந்தவர்கள்.
“அடுத்த முதல்வர் நீங்கதான் என்று பெண் பிரமுகர் சொல்லும்போதெல்லாம், அண்ணன் மீசையை தடவியபடி சிரிப்பார்” என்று அப்படியே போட்டுக் கொடுத்தவர், அண்ணனோடு எப்போதும் நிழலாக நடமாடும் ஒருவர்தான்.
அண்ணன் கவிழ்ந்த கதை விபரங்கள் தற்போது முழுமையாக கிடைத்துள்ளன.
இந்த விவகாரம் தொடங்கியது எப்போதென்றால், அம்மாவின் சொத்துக் குவிப்பு வழக்கு கழுத்தை இறுக்குவதாக மிரட்டிய நாட்களில்!
அப்போது, கார்டனுக்கு அழைக்கப்பட்ட மலையாள ஜோஷ்யர் ஒருவரிடம் 5 பேருடைய ஜாதகங்கள் கொடுக்கப்பட்டன. அம்மாவின் கேஸ் இறுகி, பதவியில் இருந்து இறங்கும் நிலை ஏற்பட்டால், இவர்களில் யாராவது ஒருவரை நிழல் முதல்வராக்க அம்மா விரும்புகிறார் என்று சொல்லப்பட்டு, 5 பேரின் ஜாதகங்களையும் அலசி கொண்டுவருமாறு அசைன்மென்ட் கொடுக்கப்பட்டதாம்.
அந்த நாட்களில் கார்டன் பாதுகாப்பு அதிகாரியாக இருந்த ஒருவர் மூலமாக இந்த விபரம், சென்னை அ.தி.மு.க. பெண் பிரமுகருக்கு போய் சேர்ந்தது. 5 ஜாதகங்களில் ஒன்று, ஜெயக்குமாரின் ஜாதகம் என்ற பிளாஷிங் டீடெயிலுடன்!
குறிப்பிட்ட பெண் பிரமுகர் லோக்கல் அரசியலில் ஆகா, ஓகோ நிலையில் இருக்கவில்லை. அவர் செல்வாக்கு பெற வேண்டுமென்றால், சென்னை நகரையே கட்சி மட்டத்தில் கையில் வைத்திருந்த ஜெயக்குமார் மனது வைத்தால்தான் முடியும்.
அப்படியான நிலையில், கார்டன் பாதுகாப்பு அதிகாரி மூலம் கிடைத்த தகவலை கச்சிதமாக பயன்படுத்திக் கொண்டார் அ.தி.மு.க. பெண் பிரமுகர்.
“முக்கிய விஷயம் ஒன்று தொடர்பாக அண்ணனுடன் தனியே பேசவேண்டும்” என்று அனுமதி பெற்ற பெண் பிரமுகர், கார்டன் ஜாதக விஷயத்தை காதில் போட்டு, அண்ணனை கிறுகிறுக்க வைத்திருக்கிறார். அதன்பின், பெண் பிரமுகருக்கு கட்சியில் ஏறுமுகம்தான். செல்வாக்கும் ஏற்பட்டது. சிறியதாக ஒரு பதவியும் கிட்டியது. அண்ணனின் உள்வட்ட ஆலோசகர்களில் ஒருவராகி விட்டார்.
இவர்கள் என்ன செய்தார்கள் என்றால், கார்டனின் நம்பிக்கைக்குரிய கேரள ஜோசியருடன் நேரே லிங்க் ஆக விரும்பினார்கள். அதாவது, 5 ஜாதகங்களில், ஜெயக்குமாரின் ஜாதகம்தான் அதி விசேஷம் என்று சொல்ல வைக்க முடியுமா என்று ட்ரை பண்ணினார்கள்.
அதற்காக இவர்கள் பிடித்த நபர், ஜோசியரின் கேரள உறவினர் ஒருவர். சாலக்குடிக்கு அருகே பிஸ்கெட் தொழிற்சாலை ஒன்று வைத்திருக்கிறார். அத்துடன், ரியல் எஸ்டேட் பிசினெஸூம் செய்பவர். சென்னை பெண் பிரமுகர் நேரில் சென்று இவரை சந்தித்து டீல் பண்ணியிருக்கிறார்.
ஆனால், ஏதோ காரணங்களுக்காக கார்டனின் நம்பிக்கைக்குரிய ஜோசியர் இவர்களுடன் பேசவே மறுத்துவிட்டார் என்று தெரிகிறது.
இதற்கிடையே மற்றொரு டெவலப்மென்டாக, நாலைந்து தடவை சாலக்குடி சென்றதில், மற்றொரு ஜோசியரின் தொடர்பு, பெண் பிரமுகருக்கு கிடைத்தது. அவரோ, “ஜாதகத்துக்கு உரிய நபரையும் அழைத்து வாருங்கள்” என்றார்.
இதையடுத்து, அண்ணன், பெண் பிரமுகர், மற்றும் சிலர் கேரள விஜயத்தை மேற்கொண்டனர். அங்கே தடபுடல் வரவேற்பு கொடுக்கப்பட்டது. அதன்பின் கோவில் அருகேயுள்ள கல்யாண மண்டபம் ஒன்றில் வைத்து பிரசன்னம் பார்க்கும் காரியம் நடந்தது. அண்ணனின் ஜாதகப்படி ‘முக்ய மந்த்ரி’ யோகம் உள்ளதாக அந்த ஜோசியர் உறுதி செய்தார்.
இதன் பின்னரே, அண்ணனின் உள்வட்டத்தில், அவர் அடுத்த முதல்வர் என்றே நினைக்க தொடங்கினர். பிறந்தநாள் கொண்டாட்டமும், அடுத்த முதல்வர் என்ற தோரணையிலேயே நடந்தது.
அண்ணனுடன் ஒன்றாக இருந்துவந்த ஒருவர் (சாலக்குடி சென்றவர்களில் இவரும் ஒருவர்) இந்த விபரங்களை சென்னையைச் சேர்ந்த மற்றொரு அ.தி.மு.க. வி.ஐ.பி.க்கு இந்த விபரங்களை போட்டுக் கொடுத்தார்.
அந்த வி.ஐ.பி. கடந்த தேர்தலில் வெற்றிக்கனியை கோட்டை விட்டது, அண்ணனின் கைங்கார்யம் என்பதால், அண்ணனுக்கும், வி.ஐ.பி.க்கும் ஆகாது.
அண்ணனின் முதல்வர் ஆசை கார்டன்வரை போய் சேர, அந்த வி.ஐ.பி. ஏற்பாடு செய்தார். கூடவே, அண்ணனின் பிறந்தநாள் கொண்டாட்ட போட்டோக்களும் இலவச இணைப்பாக போய் சேர்ந்தன. கார்டன் கொந்தளித்தது.
விளைவு, அண்ணன் சபாநாயகர் பதவி காலி.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக