வெள்ளி, 19 அக்டோபர், 2012

திமுகவினர் பெயர்கள் வாக்காளர் பட்டியலில் இருக்கிறதா?

 Check Your Names Voters List Karunanidhi Asks Dmk Cadre உங்க பெயர் 'வோட்டர் லிஸ்ட்'டில் இருக்கா... 'செக்' பண்ணுங்க.. திமுகவினருக்கு கருணாநிதி உத்தரவு!

சென்னை: திமுகவினர் உடனடியாக தங்களது பெயர்கள் வாக்காளர் பட்டியலில் இருக்கிறதா என்பதை பார்த்து உறுதிப்படுத்திக் கொள்ளுமாறு கட்சித் தலைவர் கருணாநிதி அறிவுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள கேள்வி பதில் பாணி அறிக்கை:
கேள்வி: வாக்காளர் பட்டியலில் இதுவரை இடம் பெற்றிருந்த சென்னை மாவட்ட திமுக செயலாளரும், சட்டப்பேரவை உறுப்பினருமான ஜெ.அன்பழகன் பெயரை வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கியிருப்பதாக செய்தி வந்துள்ளதே?
பதில்: ஒரு சட்டப்பேரவை உறுப்பினரின் பெயரே நீக்கப்பட்டுள்ளது. அவர் அடுத்த முறை தேர்தலில் நிற்க இயலாமல் செய்யவேண்டுமென்ற உள்நோக்கத்தோடு அவரது பெயரை நீக்கியிருக்கிறார்களோ என்ற சந்தேகம் ஏற்படுகிறது. இதுபோல கழகத்தின் சார்பில் போட்டியிடக்கூடுமென்று அவர்களே யூகித்து, அவர்களின் பெயர்களையெல்லாம் வாக்காளர் பட்டியலில் இருந்து அகற்றிடுவதற்கான முயற்சி நடைபெற்றிருக்கிறதோ என்ற கேள்வியும் எழுகிறது.

எனவே கழகத்தின் முன்னோடிகள் அனைவரும் கவனமாகவும், உடனடியாகவும் வாக்காளர் பட்டியலில் கழகத்தினரின் பெயர்கள் எல்லாம் இடம் பெற்றிருக்கிறதா என்பதை பார்த்திட வேண்டும்.
கேள்வி: முதல்வர் ஜெயலலிதா அவருடைய ஆட்சியில் மணல் கொள்ளையை தடுத்து விட்டாரா?
பதில்: திருவள்ளூர் மாவட்டம், மேல்மாளிகைப்பட்டு கிராமத்தில் உள்ள ஆரணி ஆற்றில் 16-10-2012 இரவு சுமார் 50 லாரிகள் மற்றும் 3 பொக்லைன் இயந்திரத்தில் மணல் அள்ளப்படுவதாக கிராம மக்களுக்கு தெரியவந்தது. உடனடியாக அதிமுக மாவட்ட கவுன்சிலர் சந்திரன் என்பவர் பத்து பேருடன் அங்கே சென்றபோது, வடமதுரை ஊராட்சி மன்ற தலைவர் கோதண்டன் உட்பட பத்து பேர் கொண்ட கும்பல் அவர்களை அரிவாளால் வெட்டியிருக்கிறது. அவர்களை கைது செய்ய வேண்டுமென்று கிராம மக்கள் மறியல் நடத்திய பின் போலீசார் ஆறு பேர்களை கைது செய்துள்ளனர்.
கேள்வி: சென்னையில் காவல் நிலையத்திலேயே பெண் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஒருவர் தாக்கப்பட்டிருக்கிறாரே?
பதில்: சென்னை அண்ணாசதுக்கம் காவல் நிலையத்தில், கடற்கரையில் கட்டிப்புரண்ட காதல் ஜோடியை அழைத்து வந்து விசாரணை செய்து கொண்டிருந்த போது, 4 பேர் கொண்ட கும்பல் ஒன்று காவல் நிலையத்திற்குள் புகுந்து, பெண் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஜெரீனாவை முகத்தில் குத்தி தாக்கி விட்டு, காதல் ஜோடியையும் அழைத்துக்கொண்டு போய்விட்டார்களாம். காவல் துறை எவ்வாறு இயங்குகின்றது என்பதற்கு இதைவிட வேறு சான்றுகள் வேண்டுமா?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக