புதன், 10 அக்டோபர், 2012

ராதிகாவின் சீரியல் கொடுமைகள்? பேசாமல் கரண்டு போயிருக்கலாம்

Tamil Serials Inject Terror Among Kids கணவன் கழுத்தில் கத்தி வைத்து மிரட்டிய ராதிகா: பயந்து விழித்த குழந்தை

இரவு நேரத்தில் தொலைக்காட்சியை பார்க்கவே இப்பொழுது பயமாகத்தான் இருக்கிறது. கணவனை கொலை செய்ய துடிக்கும் மனைவி. குழந்தையை மீட்க கணவனின் கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டும் மனைவி என குடும்ப உறவுகளை கேள்விக்குறியாக்கும் நிகழ்வுகளாகவே சீரியலில் ஒளிபரப்பாகின்றன.
ராதிகாவின் செல்லமே சீரியல் கேட்கவே வேண்டாம். இரவு நேரத்தில் அதை பார்த்துவிட்டு படுத்தால் ரத்தக் கொதிப்பு அதிகமாகி மாரடைப்பு ஏற்பட்டாலும் ஆச்சரியப்படத்தேவையில்லை என்கின்றனர் தொலைக்காட்சி விமர்ச்சகர்கள்.

சினிமாவில் நடித்து பின்னர் சீரியல் மூலம் சின்னத்திரைக்கு நுழைந்த ராதிகா ‘சித்தி' தொடங்கி செல்லமே வரை கடந்த 12 ஆண்டுகளாக சீரியல் தயாரித்து நடித்துக்கொண்டிருக்கிறார்.
சித்தி, அண்ணாமலை, செல்வி, அரசி, செல்லமே என அனைத்து சீரியல்களும் ராதிகாவை முன்னிலைப்படுத்தி தயாரிக்கப்பட்டவைதான். இவை தவிர ராதிகாவின் ராடான் நிறுவனம், இளவரசி, சிவசங்கரி உள்ளிட்ட தொடர்களையும் தயாரித்து வருகிறது. இதுவும் பிரபல தொலைக்காட்சியின் ப்ரைம் டைமில்தான் ஒளிபரப்பாகிறது.
ராதிகா நடிக்கும் தொடர்கள் மட்டுமல்லாது தயாரிக்கும் தொடர்களிலும் கூட இரண்டு மனைவிகளின் கதையாக இருக்கிறது என்பதுதான் அனைவரின் குற்றச்சாட்டாக இருக்கிறது. அதுவும் தற்போது ஆயிரமாவது எபிசோடினை நெருங்கிவரும் செல்லமே தொடர்தான் உலகத்தில் உள்ள தமிழ் மக்களை எல்லாம் கடுப்பேற்றிக் கொண்டிருக்கிறது.
தொடக்கத்தில் என்னவோ குடும்ப ஒற்றுமை குறித்தும், அண்ணன் - தங்கை பாசம் பற்றியும் பேசினாலும் போகப் போக ராதிகாவின் கணவன் இரண்டாவதாக திருமணம் செய்து கொள்வதில் வந்து நிற்கிறது. முதலில் வில்லி இருந்த இந்த தொடரில் இப்பொழுது மனைவிக்கு எதிராக கணவனே வில்லத்தனம் செய்கிறார்.
திங்கட்கிழமையன்று ஒளிபரப்பான எபிசோடில் மிகப்பெரிய கொடுமை அரங்கேறியது. நீண்ட நாட்களுக்கு பிறந்த குழந்தையை யார் வைத்துக்கொள்வது என்பதில்தான் இப்பொழுது கணவன் மனைவிக்கு இடையே போட்டி. இதில் இரண்டாவதாக திருமணம் செய்து கொண்ட பெண் வேறு இப்பொழுது கர்ப்பமாக இருக்கிறார். இருந்தாலும் முதல்மனைவிக்கு பிறந்த குழந்தையை எப்படியாவது கைப்பற்றிவிட வேண்டும் என்ற எண்ணத்தில் ராதிகாவின் வீட்டிற்கு வந்த கணவன் குழந்தை தூக்கிக் கொண்டு வெளியேறுகிறான்.
"இந்த குழந்தை எனக்குத்தான் பொறந்துச்சான்னு டிஎன்ஏ டெஸ்ட் எடுக்கணும்" என்று வசனம் பேசியதுதான் உலகமகா கொடுமை. அதைக் கேட்டு கொதித்துப் போன ராதிகா கணவனின் கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டுகிறார்.
இதைப் பார்த்து கணவன் மட்டுமல்ல அவரது தங்கையும், இரண்டாவது மனைவியும், ஏன் அந்த குழந்தையும் கூட அதிர்ச்சியில் உறைந்து விடுகின்றனர். உடனே ஓடிவந்த இரண்டாவது மனைவி விஜயலட்சுமி ராதிகாவின் காலில் விழுந்து கதறி அழுகிறார். எனக்காக இல்ல என் வயிற்றில் அவரோ குழந்தை இருக்கு அது அப்பா இல்லாம வளரக்கூடாது என்று கேட்கவே பரிதாபப்பட்டு கத்தியை கீழே போடுகிறார் ராதிகா.
இரவு நேரத்தில் இதைப்பார்த்த நமக்குத்தான் ரத்தக் கொதிப்பு அதிகமாகி தூக்கமாத்திரையை தேடவேண்டிய நிலை ஏற்பட்டது. இந்த கொடுமையை பார்ப்பதற்கு பேசாமல் கரண்டு போயிருக்கலாம் என்று பக்கத்து வீட்டுக்காரர்கள் அடித்த கமெண்ட்தான் அந்த நேரத்தில் சிரிப்பை வரவழைத்து ஆறுதல் ஏற்படுத்தியது. வின் சீரியல் கொடுமைகள்
ஒரு எபிசோடு பார்த்த நமக்கே இப்படி என்றால் 750 மேற்பட்ட எபிசோடுகளை பார்த்த இல்லத்தரசிகளின் நிலையை நினைத்தால்தான் பாவமாக இருக்கிறது. ராதிகா இனியாவது இருதார கதையை தொடாமல் இருப்பாரா? அதற்கு தொடரை ஒளிபரப்பும் தொலைக்காட்சி நிறுவனத்தினர் தடை விதிப்பார்களா? அந்த ‘சன்'னுக்குத்தான் வெளிச்சம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக