செவ்வாய், 30 அக்டோபர், 2012

திருவண்ணாமல ஆசிரமத்தையும் பறி கொடுக்கிறார் நித்தியானந்தா!

மதுரை ஆதீனத்தை பறி கொடுத்து ஓட வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்ட நித்தியானந்தா, தற்போது தனது திருவண்ணாமலை ஆசிரமத்தையும் இழக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. அந்த ஆசிரமத்தைக் கையகப்படுத்த அரசுத் தரப்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதால் நித்தியானந்தா தரப்பு பீதியடைந்துள்ளது.
நித்தியானந்தா அடிப்படையில் திருவண்ணாமலையில் பிறந்தவர். அங்கிருந்து புறப்பட்டு பல்வேறு ஊர்களுக்கும் போன அவர் கர்நாடக மாநிலம் பிடதியில் ஆசிரமத்தை அமைத்தார். மேலும் திருவண்ணாமலையிலும் ஒரு ஆசிரமத்தை வைத்தார்.
திருவண்ணாமலை கிரிவல பாதையில் 6 ஆண்டுகளுக்கு முன்பு இந்த ஆசிரமம் அமைக்கப்பட்டது. ஆசிரமத்துக்கான இடத்தை உள்ளூரைச் சேர்ந்த ஒருவர் நித்தியானந்தா மீதான பக்தியால் கொடுத்ததாக தெரிகிறது.
இந்த இடம் போக அருகில் உள்ள வனத்துறைக்குச் சொந்தமான இடத்தையும் நித்தியானந்தா குரூப் ஆக்கிரமித்து வைத்துள்ளதாக ஏற்கனவே கூறப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் இந்த மடத்தைக் கைப்பற்ற அரசுத் தரப்பில் நடவடிக்கைகள் முடுக்கி விடப்பட்டுள்ளன.
ஏற்கனவே மதுரை ஆதீனத்தின் இளைய மடாதிபதியாக எப்படியோ முடி சூட்டிக் கொண்ட நித்தியானந்தா அதன் தொடர்ச்சியாக பல்வேறு சிக்கல்களையும், எதிர்ப்புகளையும் சந்தித்தார். சமீபத்தில் இளைய மடாதிபதி பதவியிலிருந்து தூக்கி எறியப்பட்டார். தமிழகத்தை விட்டும் ஓடி விட்டார். கர்நாடகத்திலும் அவருக்கு ஏற்கனவே ஏகப்பட்ட பஞ்சாயத்துகள் உள்ளன. தமிழகத்திலிருந்து ஓடி பிடதி மடத்தில் பதுங்கியிருந்த நித்தியானந்தா தற்போது அங்கிருந்தும் எங்கோ ஓடி விட்டதாக கூறுகிறார்கள்.
மதுரை ஆதீன மடத்தின் இளைய மடாதிபதியாக அவர் இருந்தபோது மதுரை ஆதீனத்தை கையகப்படுத்த அரசு நடவடிக்கை எடுத்தது. இதுதொடர்பாக வழக்கும் தொடர்ந்துள்ளது. இதைத் தொடர்ந்தே நித்தியானந்தா மதுரையிலிருந்து விரட்டப்பட்டார். இந்த நிலையில்தான் தற்போது திருவண்ணாமலை ஆசிரமத்தையும் பறி கொடுக்கப் போகிறார் நித்தியானந்தா.
நித்தியானந்தாவின் ஆசிரமத்தை கையகப்படுத்தும் நடவடிக்கையில் இந்து சமய அறநிலைய துறை இறங்கியுள்ளது. அதற்காக உதவி ஆணையர் எம்.ஜோதி கையெழுத்திட்ட நோட்டீஸ் நித்தியானந்தாவுக்கு அனுப்பப்பட்டுள்ளது.
இதுகுறித்து ஜோதி கூறுகையில், லட்சக்கணக்கான பக்தர்கள் பெளர்ணமி தோறும் கிரிவலம் செல்லும் பாதையை ஒட்டி பொது இடத்தில் நித்தியானந்தா ஆசிரமமும் அதனுள் கோயிலும் கட்டப்பட்டுள்ளது. ஏராளமான சாமி சிலைகளை வைத்து தினசரி வழிபாடு நடக்கிறது. பொதுமக்களும் வந்து செல்கின்றனர். பொதுமக்கள் வழிபடும் கோயில்களை தனி நபர்கள் சொந்த செலவில் உருவாக்கி நிர்வகித்தாலும், அறநிலையத்துறை அதை தனது கட்டுப்பாட்டில் கொண்டு வர சட்டத்தில் இடமுள்ளது. அந்த அடிப்படையில் நித்தியானந்தாவின் ஆசிரமத்தை கையகப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
கிரிவல பாதையில் தனி நபர்கள் மற்றும் டிரஸ்ட்டுகள் நிர்வகித்து வந்த காமாட்சியம்மன் கோயில், காளியம்மன் கோயில், தட்சிணாமூர்த்தி கோயில், பழனியாண்டவர் கோயில், வீர ஆஞ்சநேயர் கோயில், மகா சக்தி மாரியம்மன் கோயில், ராஜராஜேஸ்வரி கோயில் உள்ளிட்ட ஏராளமான கோயில்களை, ஏற்கனவே அறநிலையத்துறை கையகப்படுத்தி தனது நிர்வாகத்தின் கீழ் கொண்டு வந்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக