திங்கள், 15 அக்டோபர், 2012

திருமணம் நிச்சயமான யாழ்ப்பாண பெண் சென்னை விமான நிலையத்தில் தவிப்பு

தமிழகத்திற்குள் நுழைய தடை  இலங்கை யாழ்ப்பாணத்தை சேர்ந்தவர் மோகன பிரியா (25). இலங்கை தமிழரான இவர் பள்ளி ஆசிரி யையாக வேலை பார்த்து வருகிறார். இவருக்கும் லண்டனை சேர்ந்த உறவினர் அந்தோணி க்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டது. அந்தோணியும் இலங்கை தமிழர் ஆவார். லண்டனுக்கு அகதியாக சென்று அங்கேயே குடியுரிமை பெற்று தங்கி விட்டார். அங்குள்ள நிறுவனத்தில் சாப்ட்வேர் என்ஜினீயராக வேலை பார்த்து வருகிறார். அந்தோணி-மோகன பிரியா திருமணம் வருகிற 24-ந் தேதி சென்னையில் நடைபெற இருந்தது.

இருவரின் உறவினர்கள் சென்னை நுங்கம்பாக்கத்தில் வசிக்கிறார்கள். அவர்கள் ஏற்பாட்டின் பேரில் சென்னையில் திருமணத்தை முடித்து விட்டு மீண்டும் அந்தோணி லண்டனுக்கும், மோகன பிரியா இலங்கைக்கும் செல்ல முடிவு செய்திருந்தனர். அதன் பிறகு திருமண சான்றிதழை லண்டனில் காட்டி மோகன பிரியாவுக்கு லண்டன் விசா வாங்கி அங்கேயே குடியேற ஏற்பாடு செய்திருந்தனர். திருமணத்துக்கு இன்னும் 9 நாட்களே உள்ளதால் அந்தோணி 2 நாட்களுக்கு முன்பு சென்னை வந்தார். மணப்பெண் மோகன பிரியாவும், அவரது அக்காள் தர்ம ரத்தினமும் சுற்றுலா விசாவில் இலங்கையில் இருந்து நேற்று சென்னை வந்தனர்.
சென்னை விமான நிலையத்தில் அவர்களது பாஸ் போர்ட்டை குடியுரிமை அதிகாரிகள் சோதனை செய்தனர்.

அப்போது அவர்கள் இருவரும் ஏற்கனவே சுற்றுலா விசாவில் சென்னைக்கு வந்து அதிக நாட்கள் தங்கி இருந்ததும், அதன் காரணமாக கடந்த 2010-ம் ஆண்டு மீண்டும் இலங்கைக்கு திருப்பி அனுப்பப் பட்டவர்கள் என்பதும் தெரியவந்தது. இதனால் அவர்கள் 3 ஆண்டுகளுக்கு சென்னைக்குள் நுழைய தடை உள்ளது. எனவே அவர்களை விமான நிலையத்தை விட்டு வெளியே செல்ல அதிகாரிகள் அனுமதிக்கவில்லை. 24-ந் தேதி திருமணம் நடைபெற உள்ளது.

திருமணம் முடிந்ததும் உடனே இலங்கை புறப்பட்டு சென்று விடுகிறோம் என்று அதிகாரிகளிடம் அவர்கள் கூறினார்கள். ஆனால் அதற்கு சட்டத்தில் இடமில்லை என்று கூறி அதிகாரிகள் மறுத்து விட்டனர். இதனால் மணப்பெண் மோகன பிரியாவும், அவரது அக்காள் தர்ம ரத்தினமும் சென்னை விமான நிலையத்திலேயே தவித்தனர். மணப்பெண் மோகன பிரியா விமான நிலையத்தில் தவிப்பதை அறிந்ததும் மணமகன் அந்தோணி உடனடியாக விமான நிலையம் சென்றார். அந்தோணியும், மோகன பிரியாவும் குடியுரிமை அதிகாரிகளிடம் பேசி கண்ணீர்விட்டு அழுதனர்.

ஒரே ஒரு நாள் அனுமதித்தால் போதும் திருமணத்தை முடித்து விட்டு சென்று விடுகிறோம் என்று கெஞ்சினார்கள். ஆனால் அவர்களின் கெஞ்சலுக்கு அதிகாரிகள் செவி சாய்க்கவில்லை. இதனால் அந்தோணியும், மோகன பிரியாவும் செய்வதறியாது நின்றனர். இந்த காட்சிகளை விமான நிலையத்தில் இருந்த பயணிகள் வேடிக்கை பார்த்தனர். இந்த நிலையில், மோகன பிரியாவையும், அவரது அக்காள் தர்ம ரத்தினத்தையும் இன்று இலங்கைக்கு திருப்பி அனுப்ப அதிகாரிகள் நட வடிக்கை எடுத்து வருகிறார்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக