வியாழன், 4 அக்டோபர், 2012

சக்ரவியூக் படப்பாடலை எதிர்த்து முதலாளிகள் ஆவேசம்!

“பிர்லாவோ அல்லது டாடாவோ
அம்பானியோ அல்லது பேட்டாவோ
எல்லாரும் அவங்கவங்க லாபத்துக்கு
நாட்டை கூறு போடுறாங்க
நம்மோட ரத்தத்திலதான்
அவங்க எஞ்சின் தட தடன்னு ஓடுது!” ஏ எம் துராஸ் என்பவர் எழுதிய இந்த பாடல் வரிகள் பிரகாஷ் ஜா இயக்கத்தில் விரைவில் வெளியாகவிருக்கும் சக்ரவியூஹ் என்ற இந்தி திரைப்படத்தில் இடம் பெற்றுள்ளன.
‘டாடா, பிர்லா போன்ற வணிக நிறுவனங்கள் தமது லாபத்துக்காக நாட்டை சுரண்டுகின்றன’ என்ற பொருள்படும் இந்த வரிகள் இந்திய முதலாளிகளின் ஏகோபித்த எதிர்ப்பை சந்தித்திருக்கின்றன. ஆதித்ய பிர்லா குழுமத்தின் சட்டத் துறை தலைவர் அசோக் குப்தா, “சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் இதைப் பற்றி முறையிடுவோம்” என்று சொல்லியிருக்கிறார்.
மத்திய திரைப்பட தணிக்கை வாரியம் “இந்தப் பாடலில் பயன்படுத்தப்பட்டுள்ள பெயர்கள் எந்த நபரையும் அல்லது பிராண்டையும் குறை சொல்லவில்லை” என்ற விளக்கத்தை சேர்க்கும்படி பிரகாஷ் ஜாவுக்கு உத்தரவு பிறப்பித்திருக்கிறது. “நக்சலைட்டுகள் பிரச்சனை குறித்த இந்த படத்தில் தொடர்புள்ள காட்சியில் இந்த பாடல் இடம் பெறுகிறது. எந்த ஒரு தனிநபருக்கோ பிராண்டுக்கோ தீங்கு விளைவிக்கும் நோக்கத்துடன் அந்த பாடல் எழுதப்படவில்லை. இந்த விளக்கத்துடன் பாடல் படத்தில் இடம் பெறும்’” என்று ஏற்கனவே சரணடைந்து விட்டிருக்கிறார் பிரகாஷ் ஜா.

‘பசு மாடு பாலைக் கொடுக்குது, மொதலாளி வேலை கொடுக்குறான்’ என்று பொழுது விடிந்தால் முதலாளிகளுக்கு துதி பாடும் செய்திகளையும், அவர்கள் சொல்லும் விலையில் பொருட்களை வாங்க வலியுறுத்தும் விளம்பரங்களையும், கார்ப்பரேட் நலன்களை தூக்கிப் பிடிக்கும் விவாதங்களையும் மக்கள் தாங்கிக் கொள்கிறார்கள். ஆனால், ஒரு திரைப்படத்தில் ஒரு பாடல் வரியை முதலாளிகளால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை.
இத்தனைக்கும் இந்தப்படத்தின் டிரைலரை பார்த்தால் இது  நக்சலைட்டுகள் குறித்த தெலுங்கு மசாலாப் படம் போன்றுதான் எடுக்கப்பட்டுள்ளது. புரட்சியை ஆதரிக்கும் படமெல்லாம் இல்லை. எனினும் முதலாளிகளால் இந்தப்பாடல் வரிகளை பொறுத்துக் கொள்ள முடியவில்லை.
ஆண்டுக்கு ரூ 25,000 கோடிக்கும் அதிகமான தொகையை ஊடகங்களுக்கு  முதலாளிகள் விளம்பரக் கட்டணமாக  கொடுக்கின்றனர். இதில் தொலைக்காட்சிகளுக்கு 44.8 சதவீதமும், அச்சு ஊடகங்களுக்கு 42.2 சதவீதமும், இணைய தளங்களுக்கு 3.8 சதவீதமும் செலவழிக்கப்படுகிறது.
‘கார்ப்பரேட்டுகளின் நலன்களுக்கு உறுதுணையாக நிற்க வேண்டும்’ என்ற எழுதாத சட்டத்தின் கீழ் எகனாமிக் டைம்ஸ், பிஸினஸ் லைன் போன்ற வணிக நாளிதழ்களில் ஆரம்பித்து அனைத்து பத்திரிகைகளும் விளம்பர வருமானத்திற்காக போட்டி போடுகின்றன.  தொலைக்காட்சிகள் தமது விளம்பர வருமானத்தை பெருக்கிக் கொள்ள கார்ப்பரேட்டுகளுக்கு ஜால்ரா அடிக்கின்றன.
  • கார்ப்பரேட்டுகளின் சமூகப் பணிகளை வியந்தோதும் விளம்பரங்கள்,
  • நிகழ்ச்சியின் ஊடாகவே அவர்களது பொருட்களை விற்க முயற்சிக்கும் வசனங்கள்
  • கார்ப்பரேட்டுகளின் பங்களிப்பை தூக்கிப் பிடிக்கும் விவாதங்கள்
எதிலும் எந்த தணிக்கை வாரியமும் தலையிடுவதில்லை. அத்தகைய நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாகும் போது தொடர்புடைய சுரண்டல்கள், மக்கள் போராட்டங்கள் பற்றிய விளக்கங்கள் சேர்க்கப்படுவதில்லை.
இத்தகைய பணபலத்தால் நடத்தப்படும் பிரச்சாரத்தால்தான் உலகிலேயே மதிக்கப்படும் பிராண்டுகளில் டாடா என்ற பெயர் 50வது இடத்தை பிடிக்க முடிகிறது. 2011-ம் ஆண்டு இந்தியாவிலேயே அதிகம் நம்பப்படும் பிராண்டுகள் வரிசையில் இரண்டாவது இடமும் டாடாவுக்கு கிடைத்திருக்கிறது. முதல் இடத்தில் இருப்பது செல்போன் நிறுவனம் நோக்கியா.
நோக்கியாவின் 100 மில்லியன் வெறிக்கு தனது உயிரை பறி கொடுத்த அம்பிகா போன்ற தொழிலாளர்களிடமும், டாடாவின் லாப வேட்டையை எதிர்த்து போராடிய சிங்கூர் மக்களிடமும் சர்வே எடுத்திருந்தால் உலகிலேயே வெறுக்கப்படும் பெயர்கள் வரிசையில் நோக்கியாவும் டாடாவும் முதல் இரண்டு இடங்களை பிடித்திருப்பார்கள் .
சமீபத்தில் 2G அலைக்கற்றை ஒதுக்கீடு ஊழல், நிலக்கரி வயல் ஒதுக்கீடு ஊழல் இவற்றின் மூலம் யோக்கியன் இமேஜ் பல்லிளித்து நிற்கும் கார்ப்பரேட்டுகளுக்கு, பிராண்ட் ஆலோசகராக பணி புரியும் சுஹேல் சேத், “கார்ப்பரேட்டுகளின் புகழை இப்படி களங்கப்படுத்துவது சரியில்லை” என்று  வக்காலத்து வாங்குவதோடு “டாடாக்களும் பிர்லாக்களும் செய்துள்ள சமூக பணிகளின் அளவை பிரகாஷ் ஜாவால் புரிந்து கொள்ளக் கூட முடியாது” என்று ஒரு சவாலையும் விட்டிருக்கிறார்.
உழைக்கும் மக்களுக்கு கொடுக்கும் ஊதியத்துக்கும், மக்களிடம் பொருட்களை விற்று வாங்கும் விலைக்கும் இடையேயான வேறுபாடுதான் முதலாளிகளின் லாபம்.
  • அதில் ஒரு பகுதி அவர்களின் புகழ்பாடும் விளம்பரங்கள் மூலமாக ஊடகங்களுக்கு போய்ச் சேருகிறது. (மக்கள் யாரும் விளம்பரங்கள் வேண்டும் என்று கேட்கவில்லை).
  • இன்னொரு பகுதி கார்ப்பரேட்டுகளுக்கு சாதகமான சட்டங்கள் இயற்றப்பட அரசியல் கட்சிகளுக்கு நன்கொடையாக வழங்கப்படுகிறது.
  • மற்றொரு பகுதி நிர்வாகமும் நீதித் துறையும் ஆதரவாக நடந்து கொள்ள செலவழிக்கப்படுகிறது.
  • இதற்கும் மேல் மிஞ்சும் பெரும்பகுதியை தமது லாபமாக ஒதுக்கிக் கொண்டு நாட்டையே ஆட்டிப் படைக்கிறார்கள் முதலாளிகள்.
இந்த லாபத்தில் சேரும் பணத்தைக் கொண்டு புதிய தொழில் முயற்சிகள் தொடங்கவோ,  முகேஷ் அம்பானி போல ஆன்டிலியா மாளிகை ஆடம்பரத்துக்கு செலவழிக்கவோ, டாடா போல அறக்கட்டளைகளுக்கு ஒதுக்கவோ முதலாளிகளுக்கு முழு சுதந்திரம் இருக்கிறது. அதற்கெல்லாம் மனம் இல்லை என்றால் பணத்தை மொத்தமாக சுருட்டிக் கொண்டு வெளிநாட்டில் செட்டில் ஆகி விடலாம். எதைச் செய்தாலும் தமது ஆதிக்கத்தை மேலும் வலுப்படுத்தும் நோக்கத்துடன் செயல்படுவதற்கு முதலாளிகளுக்கு முழு உரிமை இருக்கிறது.
ஆனால், ‘லாபத்தின் 100 சதவீதமும் மக்களுக்கும் நாட்டுக்கும் சொந்தமானதை சுரண்டி சம்பாதிக்கப்பட்டது’ என்பதை மறைத்து விட்டு டாடாவின் அறக்கட்டைளைகளுக்கு வழிபாட்டு பூக்களையும், அம்பானியின் தொழில் முனைவுக்கு புகழ் மாலைகளையும் வாரி இறைக்கின்றன ஊடகங்கள்.
இந்த போற்றி பாடல்களுக்கு மத்தியில் அவர்களைப் பற்றிய உண்மையை அம்பலப்படுத்தும் முனகல் எங்காவது ஒரு மூலையில் கேட்டாலும் வரிந்து கட்டிக் கொண்டு வந்து விடுகின்றனர் முதலாளிகள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக