சனி, 6 அக்டோபர், 2012

மதுரையில் 37 கிலோ நகை கொள்ளை

மதுரை: மதுரையில் "முத்தூட் பின்கார்ப் பைனான்ஸ்' நிறுவனத்தின் ஊழியர்களை கடத்தி, அங்கு இருந்து 37 கிலோ நகைகளை கொள்ளையடித்தனர். மதுரை ஆரப்பாளையம் கிராஸ்ரோட்டில் "முத்தூட் பின்கார்ப் பைனான்ஸ்' நிறுவனம் உள்ளது. இதன் மேலாளர் பாலசுப்பிரமணியன், 34, தென்றல் நகரை சேர்ந்தவர். உதவி மேலாளர் சதீஷ்குமார், 27, மஞ்சனக்காரத் தெருவை சேர்ந்தவர். நேற்று முன்தினம், பணிகளை முடித்த பின், மாலையில் இருவரும் நிறுவனத்தை பூட்டிவிட்டு, டூவீலர்களில் வீடு திரும்பினர். ஆரப்பாளையம் தண்ணீர் தொட்டி பகுதியில் பாலசுப்பிரமணியன் வரும் போது இருவர் வழிமறித்தனர். டூவீலர் சாவியை பறித்தும், அவர்கள் வந்த வெள்ளை நிற ஆம்னி வேனில் பாலசுப்பிரமணியனை கடத்தி, நிறுவனத்தின் சாவியை கேட்டனர். "தன்னிடம் நிறுவனத்தின் ஒரு பகுதி சாவி மட்டுமே உள்ளது. மற்றொன்று உதவி மேலாளர் சதீஷ்குமாரிடம் இருக்கிறது' என, தெரிவித்தார். 
வேனில் இருந்த நபர்கள், பாலசுப்பிரமணியனின் கை, கண், வாயை, பார்சல்கள் ஒட்டும் பிளாஸ்டரால் ஒட்டினர். பாலசுப்பிரமணியனிடம் இருந்து சதீஷ்குமாரின் மொபைல் போன் எண்ணை பெற்ற நபர்களில் ஒருவர், பெண் குரலில், "காரைக்குடியில் இருந்து வருகிறோம். நகை அடகு வைப்பது தொடர்பாக பேசவேண்டும். மாட்டுத்தாவணி பஸ் ஸ்டாண்ட் வாருங்கள்,' என்றார். இதை நம்பிய சதீஷ்குமார் மாட்டுத்தாவணிக்கு சென்றார்.
அதன் பின், சதீஷ்குமார் தொடர்பு கொண்ட போது, அந்த நபர்களின் மொபைல் போன் "சுவிட் ஆப்' ஆக இருந்தது. சிறிது நேரத்தில் மீண்டும், அந்த நபர் பெண் குரலில், அப்பகுதி அருகில் உள்ள "லேடீஸ் ஹாஸ்டல்' பக்கம் வருமாறு கூறினார்.

அங்கு சதீஷ்குமார் சென்ற போது, டூவீலர் சாவியை பறித்து, சதீஷ்குமாரையும் வேனில் ஏற்றினர். அவரிடம் நிறுவனத்தின் சாவியை கேட்டனர். சாவியை வீட்டில் வைத்துவிட்டு வந்ததாக கூறவும், கை, கண்களை "பிளாஸ்டரால்' ஒட்டிவிட்டனர்.

சதீஷ்குமாரின் தந்தையிடம் போனில் பேசவைத்து, தான் அனுப்பும் நபரிடம் சாவியை கொடுக்குமாறு கூற வைத்தனர். அதன்படி சாவியை பெற்றுக் கொண்ட இக்கும்பல், நேற்று முன்தினம் இரவு 9.30 மணிக்கு நிறுவனத்தில் புகுந்தனர். இருவரின் உதவியுடன் நிறுவனத்தில் உள்ள "அலாரம்' இணைப்புகளை துண்டித்து, 37 கிலோ நகைகளை அள்ளிச்சென்றனர். நேற்று மாலை 4.30 மணிக்கு, பாலசுப்பிரமணியனையும், சதீஷ்குமாரையும் மர்ம நபர்கள் கூடல்புதூர் பகுதியில் வேனிலிருந்து இறக்கிவிட்டு சென்றனர். இருவரும் கொடுத்த புகாரின்படி, போலீஸ் கமிஷனர் சஞ்சய்மாத்தூர், துணை கமிஷனர் ஜெயலட்சுமி சம்பவ இடங்களை பார்வையிட்டனர். இவர்களை இறக்கிவிட்ட இடத்தில் கைகளை ஒட்டிய "பிளாஸ்டர்' கள் கிடந்தன.

இவர்கள் சொல்வது உண்மைதானா அல்லது நாடகமா என்றும் விசாரணை நடக்கிறது. இந்த கொள்ளையில் வேன் டிரைவர் உட்பட நான்கு பேர் ஈடுபட்டுள்ளனர். இதே போல, மதுரையில் தொடர்ந்து பலவகைகளில் நூதன கொள்ளைகள் நடந்து வருகின்றன.

முத்தூட் நிறுவனம் சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கை: திருடு போனதாக கூறப்படும் அனைத்து நகைகளும் இன்சூரன்ஸ் செய்யப்பட்டுள்ளது. வாடிக்கையாளர்கள் பயப்பட தேவையில்லை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக