ஞாயிறு, 9 செப்டம்பர், 2012

Twitter இணைய தளத்துக்கு தமிழ்நாடு உள்பட 8 மாநிலங்களில் தடை?

Viruvirupu
சமீபத்தில் வதந்திகள் பரப்பப்பட்டதை அடுத்து, கர்நாடகா, தமிழ்நாடு உள்பட 8 மாநிலங்களில் ட்விட்டர் சமூக இணையதளத்திற்கு தடை விதிக்க மத்திய அரசு பரிசீலித்து வருவதாக தெரிய வருகிறது. வட கிழக்கு மாநில மக்கள் இடையே கடந்த மாதம் வதந்தியை கிளப்பும் வகையில் தகவல்களை வெளியிட்டதாக கூறி இந்த நடவடிக்கையை எடுக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
ஆரம்பத்தில் ஃபேஸ்புக், ட்விட்டர் ஆகிய இரு சமூக இணையத்தளங்கள் மூலமாகவும் வதந்தி பரவுவதாக கூறப்பட்டிருந்தது. ஆனால், தற்போது ட்விட்டர் தளத்தை மட்டும் 8 மாநிலங்களில் தடைசெய்வது என முடிவாகியுள்ளது என்று தெரியவருகிறது.

வட கிழக்கு மாநிலத்தவர் மீது தாக்குதல் நடத்தப்படுவதாக பரவிய வதந்தியை தொடர்ந்து பெங்களூரு, சென்னை உள்ளிட்ட நகரங்களில் இருந்து ஆயிரக்கணக்கான வடகிழக்கு மாநிலத்தவர் கடந்த மாதம் தங்கள் சொந்த ஊருக்கு திரும்பினர். கர்நாடகா, தமிழ்நாடு, அஸ்ஸாம், மகாராஷ்டிரா, உத்தரப்பிரதேசம் உள்பட 8 மாநிலங்களில் இந்த வதந்தி கிளப்பப்பட்டதாக மத்திய அரசு அடையாளம் கண்டுள்ளது.
இதனையடுத்து இந்த மாநிலங்களில் ட்விட்டர் இணையதளத்தை எப்படி முடக்குவது பற்றி தொழில்நுட்ப வல்லுனர்களிடம், மத்திய மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை ஆலோசனை கேட்டுள்ளது. உள்துறை அமைச்சகத்தின் அறிவுரைப்படி இத்துறை இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
வட கிழக்கு மாநிலத்தவர் இடையே வதந்தியை கிளப்பியதாக இதுவரை 310 இணையதளங்களை மத்திய அரசு முடக்கியுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக