திங்கள், 17 செப்டம்பர், 2012

Rajsthan Andhra Maharashtra மாநில முதல்வர்கள் பதவி அதிரடி மாற்றம்

புதுடில்லி:அடுத்த ஆண்டு, ராஜஸ்தானிலும், 2014ல், ஆந்திரா மற்றும் மகாராஷ்டிராவிலும், சட்டசபைத் தேர்தல் நடைபெறவுள்ளது. அத்துடன், அப்போது, லோக்சபா தேர்தலும் நடக்க உள்ளதால், தங்கள் கட்சியைச் சேர்ந்த செயல்படாத முதல்வர்களுக்கு, கல்தா கொடுக்க, காங்., மேலிடம் முடிவு செய்துள்ளது.மகாராஷ்டிர முதல்வர் பிருத்விராஜ் சவான், ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட், ஆந்திர முதல்வர் கிரண் குமார் ரெட்டி ஆகியோர், கல்தா பட்டியலில் இடம் பெற்றுள்ளதாக, தகவல் வெளியாகியுள்ளது.
இன்னும் ஒன்றரை ஆண்டுகளில், லோக்சபா தேர்தலும், அதனுடன் சேர்த்து ஆந்திரா மற்றும் மகாராஷ்டிராவில், சட்டசபைத் தேர்தலும் நடக்கவுள்ளதை அடுத்து, ஆட்சியை தக்க வைத்து கொள்வதற்காக, காங்., மேலிடம் தீவிர நடவடிக்கைகளில் இறங்கியுள்ளது. கட்சியிலும், ஆட்சியிலும், அதிரடி மாற்றங்களை செயல்படுத்த முடிவு செய்துள்ளது.முதல் கட்டமாக, மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றங்கள் இருக்கும் என, நம்பப்படுகிறது.
மூத்த தலைவர்கள் சிலர், அமைச்சர் பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டு, கட்சிப் பணிக்கு அனுப்பப்பட உள்ளனர். அமைச்சரவை மாற்றம் முடிந்ததும், அடுத்த கட்டமாக, காங்கிரஸ் கட்சி ஆட்சி நடக்கும் மாநிலங்களின் பக்கம், கவனத்தை திருப்பவும், காங்., மேலிடம் முடிவு செய்துள்ளது.

இதுகுறித்து, காங்., வட்டாரங்கள் கூறியதாவது:

காங்., ஆட்சி நடக்கும் மாநிலங்களில், வளர்ச்சித் திட்டங்கள், "ஜெட்' வேகத்தில் நடக்க வேண்டும் என்றும், தேர்தலை சந்திக்கும்போது, மக்களின் அதிருப்தியை சந்திக்காத வகையில், மாநில அரசுகளின் செயல்பாடுகள் இருக்க வேண்டும் என்றும், காங்., தலைவர் சோனியா கருதுகிறார். குறிப்பாக, வளர்ச்சித் திட்டங்களை முழு வேகத்தில் செயல்படுத்தும், சுறுசுறுப்பான தலைவர்கள், முதல்வர்களாக இருக்க வேண்டும் என்பது, அவரின் விருப்பம்.இதையடுத்து, செயல்படாத, மந்தமான முதல்வர்களை ஓரம்கட்டி விட்டு, அவர்களுக்குப் பதிலாக, சுறுசுறுப்பான முதல்வர்களை நியமிக்க, முடிவு செய்யப்பட்டுள்ளது. தற்போதைய நிலவரப்படி, காங்., மேலிடத்தின், "ஹிட் லிஸ்ட்'டில், மூன்று முதல்வர்கள் உள்ளனர். மகாராஷ்டிர முதல்வர் பிருத்விராஜ் சவான், ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட், ஆந்திர முதல்வர் கிரண் குமார் ரெட்டி ஆகிய, மும்மூர்த்திகள் இடம் பெற்றுள்ளனர்.ஆந்திராவில், சட்டசபைத் தேர்தல், 2014ல் நடக்கவுள்ளது. அங்கு முதல்வராக உள்ள கிரண் குமார் ரெட்டி, மந்தமாக செயல்படுவதாக, காங்., மேலிடத்துக்கு, ஏற்கனவே புகார்கள் குவிந்துள்ளன.
சமீபத்தில் நடந்த இடைத்தேர்தல்களில், ஜெகன்மோகன் ரெட்டியின் கட்சியிடம், காங்கிரஸ், மண்ணைக் கவ்வியதால், கிரண் குமார் ரெட்டி மீது கட்சி மேலிடம், கடும் அதிருப்தியில் உள்ளது.ஆளுங்கட்சியாக இருந்தும், இடைத்தேர்தல்களில் கோட்டை விட்ட, கிரண் குமார் ரெட்டியை, முதல்வர் பதவியில் இருந்து அப்புறப்படுத்த வேண்டும் என, கட்சிக்குள்ளேயே, எதிர்ப்பு குரல்கள் எழுந்துள்ளன. இதனால், இவருக்கு பதிலாக, மத்திய அமைச்சர் ஜெய்பால் ரெட்டிக்கு, முதல்வர் பதவி கிடைக்க வாய்ப்பு உள்ளது.

மகாராஷ்டிராவிலும், 2014ல், சட்டசபைத் தேர்தல் நடக்கவுள்ளது. வளர்ச்சித் திட்டங்களை நிறைவேற்றுவதில், முதல்வர் பிருத்விராஜ் சவான், தீவிரம் காட்டாமல் இருப்பதாக, காங்., மேலிடம் கருதுகிறது. இப்படி செயல்பட்டால், அடுத்த சட்டசபைத் தேர்தலில், ஒரு தொகுதியில் கூட வெற்றி பெற முடியாது என, கட்சியின் மூத்த தலைவர்கள் முடிவுக்கு வந்து விட்டனர். இது தொடர்பாக, ஏற்கனவே ஒரு முறை, கட்சி மேலிடத்தின் எச்சரிக்கைக்கு ஆளாகியும், பிருத்விராஜ் சவானின் போக்கில் மாற்றம் எதுவும் நிகழவில்லை. எனவே, இவருக்குப் பதிலாக, நாராயண் ரானே, முதல்வராக்கப்படலாம் என, தெரிகிறது. சோனியாவை, சமீபத்தில் நாராயண் ரானே, சந்தித்து பேசியது, இந்த தகவலை உறுதிப் படுத்தும் வகையில் உள்ளது.

ராஜஸ்தானை பொறுத்தவரை, அசோக் கெலாட், கோஷ்டி அரசியலில் சிக்கி தவிக்கிறார். சமீபத்தில் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தால், மாநிலத்தில் உள்ள சிறுபான்மை மக்கள், கெலாட் மீது கோபத்தில் உள்ளனர். அடுத்தாண்டு சட்டசபைத் தேர்தல் நடக்கவுள்ள நிலையில், சிறுபான்மை மக்களின் அதிருப்தியுடன் தேர்தலை சந்திப்பது, விஷப் பரீட்சையில் முடியும் என, கட்சி மேலிடம் கருதுகிறது. எனவே, அசோக் கெலாட்டுக்கும், கல்தா கொடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.இவர்கள், முதல்வர் பதவியில் இருந்து நீக்கப்பட்டால், அவர்களுக்கு கட்சியின் பொதுச் செயலர் பதவியோ, மத்திய அமைச்சர் பதவியோ, தரப்படலாம்.இவ்வாறு காங்., வட்டாரங்கள் தெரிவித்தன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக