திங்கள், 17 செப்டம்பர், 2012

மேல் ஜாதிக்காரர்களைக் கண்டால், சாமீ! கும்பிடுகிறேன் என்று சொல்வது

விழுப்புரம்,தந்தை பெரியார் வழிவந்த எனக்கு யாரும் தன்மானத்தைப் பற்றி செல்லிக் கொடுக்க வேண்டாம்; நான் மானமிகு சுய மரியாதைக்காரன் என்றார் தி.மு.க. தலைவர் கலைஞர்.
விழுப்புரத்தில் நேற்று (15.9.2012) நடை பெற்றமுப்பெரும்விழாவில் கலைஞர் அவர்கள் உரையாற்றுகையில் குறிப்பிட்டதாவது:
தன்மானம் என்றால் என்ன?
பெங்களூருவிலே இருந்து வருமா?
கருணாநிதிக்குத் தன்மானம்இல்லை என்று தன்மானம் உள்ள ஒரு அம்மையார் பேசியதாக பத்திரிகைகளிலே பார்த்தேன். தன்மானம் என்றால் என்ன, அதை அளந்து கொடுப்பார்களா? நிறுத்துக் கொடுப்பார்களா? அது கடையில் கிடைக்குமா? அதை தெருவிலே விற்பார்களா? பெங்களூருவிலே இருந்து வருமா? என்றெல்லாம் விவரம் தெரியாமல் தன்மானத்தைப் பற்றிப் பேசக்கூடாது.
தன்மானம் சாதாரண விஷயமல்ல. என்னுடைய இயக்க உணர்வு, பெரியாரிடத்திலே பற்று, அண்ணாவிடத்திலே அன்பு இவைகளெல்லாம் எனக்கு ஏற்பட்டதற்குக் காரணமே, எனக்கு ஏற்பட்ட உணர்வுகள் என்னைப் போன்ற அந்தக் காலத்திலே இளைஞர்களிடத்திலே பரப்பி, வளர்த் ததற்குக் காரணமே தன்மானம்தான் (பலத்தகை தட்டல்). எனக்குத் தெரியும், நான்இசை மரபிலே உள்ள குடும்பத்திலே பிறந்தவன்.
இசை மரபிலே பிறந்தவன் - பிற பெரிய ஜாதிக்காரர்களுக்கு, சொல்லப்போனால் நம்முடைய பேராசிரியர் முதலியார் என்றால், அந்த முதலியாரில் அவர் பெரியவர் என்றால் நான் போட்டு இருக்கின்ற துண்டை எடுத்து இடுப்பிலே கட்டிக்கொள்ள வேண்டும்.
அதெல்லாம் பேராசிரியருடைய தாத்தா விற்கு தாத்தாவுடைய காலம். இந்தக் காலத்தில் பேராசிரியர் அப்படிப்பட்டவர். அல்ல. சுய மரியாதைச்சுடராக, சமத்துவக் குன்றாக விளங்கக் கூடியவர்.
ஆனால் அந்தக் காலத்திலே மேல்ஜாதி, பெரிய ஜாதி, பணக்கார ஜாதி என்று இருந்த சில சமுதாய ஊழல்கள், நான் பிறந்த சமுதாயத்திலே எவ்வளவோ இடர்ப்பாடுகள் உள்ளாகியிருக்கிறது. நான் இன்றைக்கு சொற்பொழிவாளராக உங்கள் முன்னால் உட்கார்ந்து இருக்கிறேன். தலைவராக உங்களால் மதிக்கப்படுகிறேன். தொண்டனாக உங்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்கிறேன். இயக்கத்திற்காக தியாகம் செய்தவனாக, தியாகியாக உங்களால் போற்றப்படுகிறேன்.
ஆனால் நான் பிறந்த சமுதாயத்திலே எவ்வளவுதான் இசையை கற்றவர்களாக இருந்தாலும், சங்கீத வல்லுநர்களாக இருந்தாலும் அவர்கள் எப்படி மதிக்கப்பட்டார் கள்? எப்படி இழித்துரைக்கப்பட்டார்கள் என்றால், உங்களுக்குத் தெரியும் ராஜரத்தினம் பிள்ளை, குழிக்கரை பிச்சையப்பா பிள்ளை, திருவெண்காடு சுப்பிரமணியபிள்ளை என்று இந்த மகாவித்வான் களை  எல்லாம் நீங்கள் அறிவீர்கள். இன்றளவும் உங்கள் தாத்தா, பட்டனார், அப்பா, அம்மா இவர்களைத் தெரிந்து வைத்திருப்பார்கள். அவர்க ளெல்லாம் எவ்வளவு பெரிய வித்வான்களாக இருந்தாலும், மேல் ஜாதிக்காரர்களைக் கண்டால், சாமீ! கும்பிடுகிறேன் என்று சொல்வது மாத்திர மல்ல, தான் விலை கொடுத்து வாங்கி தோளிலே போட்டிருக்கின்ற துண்டை எடுத்து இடுப்பிலே கட்டிக்கொள்ள வேண்டும்.
என்னைப் பொறுத்தவரையிலே நான், திருவாரூர் பள்ளியிலே படித்து என்னுடைய கிராமத்திற்கு வரும்போதெல்லாம் என்னுடைய சட்டைக்கு மேலே ஒரு துண்டு இருக்கும். ஊர்ப் பெரியவர்கள் என்னப்பா, அக்ரகாரத்திலே ராமகிருஷ்ணன் அய்யர் வருகிறார், நீ துண்டை தோளில் போட்டுக்கொண்டு இருக்கிறாய்? என்று சொல்லி, அந்தத் துண்டைப் பிடுங்கி இடுப்பிலே கட்டிக்கொள் என்பார்கள். இதை ஒரு நாள் பார்த்தேன். இசைப் பயிற்சிக்கு முழுக்குப் போட்டேன். வீட்டிலே கேட்டார்கள்.
ஏனப்பா இசைப் பயிற்சியை விட்டு விட்டாய் என்று. இசைப் பயிற்சிக்குப் போனால் என்னுடைய தன்மானம் போகிறது, சுயமரியாதை போகிறது, மனிதனுக்கு மனிதன் நான் வாங்கிய துண்டை, நான் விலை கொடுத்து வாங்கிய துண்டை போட்டுக் கொள்ளக்கூடாதா எனக்கு இந்த ஊரிலே உரிமை இல்லை என்றால், எதற்காக இந்த இசைப் பயிற்சி என்று சொல்லி, அன்றைக்கு இசைக் கருவிகளை தூக்கி எறிந்தவன்தான். அன்றைக்கு திருக்குவளை யிலிருந்து திருவாரூர் பள்ளிக்கூடத்திற்குச் சென்றவன்தான், அதற்குப் பிறகு நான் எந்த வித்வானையும் பார்த்து பரிச்சயம் செய்து கொள்ள வில்லை.
அதற்குப் பிறகு நான் பார்த்த வித்வான்க ளெல்லாம் பேராசிரியர், நாவலர் நெடுஞ்செழியன் போன்ற இந்த வித்வான்கள்தான் எனக்குத் தெரியுமே தவிர, இவர்களையெல்லாம் விட மகா வித்வான் அறிஞர் அண்ணா அவர்களைத் தெரியுமே தவிர, நான் இடுப்பிலே கட்டிக்கொள்ள வேண்டியவன் என்ற சுயமரியாதை அற்ற தன்மைக்கு, அந்த இளம் வயதிலேயே என்னுடைய தலைவணங்க மறுத்த காரணத்தால்தான் இன்றளவும் தன்மான இயக்கத் தொண்டனாக நான் இருக்கின்றேன்.
மிசா சிறையிலே மானத்தோடு விளையாடியவன் என் மகன் ஸ்டாலின்
என்னை நிருபர்கள் கேட்டார்கள், உங்களு டைய உரிமைப் பற்றி, உங்களுடைய தன்மைப் பற்றி நீங்கள் என்ன கருதுகிறீர்கள்? ஒரே வரியில் சொல்லுங்கள் என்று சொன்னார்கள். நான் சொன்னேன், ஒரே வரியிலே கேட்கிறீர்களா? நான் மானமுள்ள சுயமரியாதைக்காரன் என்று குறிப் பிட்டேன் (பலத்த கைதட்டல்). அந்த மானத்திற்கு ஏன் அவ்வளவு முக்கியத்துவம் கொடுத்தேன் என்றால், மானம் என் மகன் கேட்ட தாலாட்டு, மரணம் அவன் ஆடிய விளையாட்டு. உண்மை தானே! என் மகன் ஸ்டாலின், மானம் என்ற தாலாட்டைக் கேட்டவன் அல்லவா (கைதட்டல்).
மிசா சிறையிலே மானத்தோடு விளையாடியவன் அல்லவா? தம்பி சீத்தாபதிக்குத் தெரியுமே! சிட்டிபாபு புத்தகமாகவே எழுதியிருக்கிறாரே! துரைமுருகனைப் போன்றவர்கள், ரகுமான்கானைப் போன்றவர்கள் இன்றைய தினம் கழகத்தினுடைய காவலர்களாக, பேச்சாளர்களாக இருக்கிறார்கள் என்றால், அவர்களெல்லாம் அடிபடாதவர்களா? சிறைச் சாலைக்கு உள்ளாகாதவர்களா? கல் வீச்சுக்களை சந்திக்காதவர்களா? அவர்களுடைய வீடு புகுந்து போலீசார் அடிக்கிறார்கள் என்ற நிலையெல்லாம் ஏற்பட்டது இல்லையா? என்னை அடித்து இழுத்துக் கொண்டு சிறைச்சாலைக்குப் போனார்களே, நான் தன்மானத்தைப் பற்றி கவலைப்படாமல், அய்யா என்னை விட்டுவிடுங்கள், இனிமேல் நான் எதுவும்செய்ய மாட்டேன்.
இனி நான் அ.தி.மு.கவுக்கு விரோதமாகப் பேசமாட்டேன் என்று சொன்னால், எனக்கு அன்றைக்கு அந்த அடியும் கிடையாது, உதையும்கிடையாது. இன்ன மும் என்னுடைய கையை தூக்க முடியாமல் இருக்கின்ற அந்த வலியும்கிடையாது. முதுகில் அறுவை சிகிச்சை நடைபெற்ற இடத்தில் வலி ஏற்பட்டு நடக்க முடியாமல் மூன்று சக்கர வண்டியில் வந்து கொண்டிருக்கின்றேனே, இந்த நிலையும் கிடையாது.
நான் அன்றைக்கே இவற்றையெல்லாம்விட்டு விடுகிறேன் என்று சொல்லியிருந்தால், அதற்கு என்ன பொருள்? சுருக்கமாகச் சொன்னால், என்னுடைய தன்மானத்தை விட்டு விடுகிறேன் என்று அர்த்தம்.
தன்மானத்தை நான் விலை கூற மாட்டேன். விலை கூறுகின்ற வழி யில் நான் நடக்கவும் மாட்டேன் என்று உறுதியாக இருந்த காரணத்தால்தான் இன்றைக்கு அம்மையார் ஜெயலலிதா, கருணா நிதிக்கு தன்மானம் இல்லை என்று சொல்கிற அளவுக்கு நான் வரவில்லை. அவர்களும் வரவில்லை. தமிழ்நாடு வந்துவிட்டது.
இராவணன் பரம்பரை!
ஒரு மனிதனைப் பார்த்து தன்மானம் இல்லாத வன் என்று சொன்னால், அதை பொறுத்துக் கொண்டு போவதற்கு என்ன காரணம்? இங்கே என்னுடைய மகன் இந்த கட்சியினுடைய இளைஞர் அணியின் செயலாளர், ஆகா, இப்படி தந்தையைப் பார்த்து தன்மானம் இல்லாதவர் என்று சொல்லி விட்டார்களே என்று ஆத்திரப்பட்டடால், அது இன்னும் கொஞ்சம்மென்மையாக பேராசிரியர் அவர்களால் இங்கே சுட்டிக்காட்டப்பட்டது, பேசிய அத்தனை பேரும் அந்த சொல், தன்மானம் இல்லாதவர் கருணாநிதி என்று ஆட்சியில் இருப்ப வர்கள் சொன்ன அந்த சொல், எத்தனை பேரைக் குத்திக் குடைந்திருக்கிறது என்பது எனக்குத் தெரியும். இருந்தாலும் நாம் பொறு மையாக இருக்க வேண்டும். இருந்தாலும் பதி லுக்குப் பதில் சொல்லத் தேவையில்லை.
தன் மானத்தைப்பற்றிப் பேசுகின்றவர்கள், தங்களுடைய உருவத்தைக் கண்ணாடியிலே பார்த்துக்கொள்ள வேண்டும். கண்ணாடி கிடைக்காவிட்டால், ஒரு குளத்தில் தண் ணீர் நிழலிலே முகத்தைப் பார்த்துக் கொள்ளட்டும். குளத்திற்கும் சென்று பார்க்க முடியாவிட்டால், வீட்டிலே ஒரு நீர் தொட்டியை கட்டியாவது அங்கே தலைகுனிந்து பார்த்துக் கொள்ளட்டும்.
யார் தன்மானம் உள்ளவர்? யார் தன்மானம் இல்லாதவர்கள் என்பதை பார்த்துக் கொள்ளட்டும். அவர்களே பார்த்துக் கொண்டால் தான், நாம் கருணநிதியைப் பற்றி சொன்னது தவறு. நம்முடைய முகத்தைப் பார்க்காமல், அவருடைய முகத்தைப் பார்த்துச் சொன்னது தப்பு என்று அப்போதாவது அவர்களுக்குப் புரியும்.
இராவணன் பரம்பரையிலே வந்த தமிழர்களே நான் உங்களைக் கேட்கிறேன், சேரன் செங்குட்டுவன் சந்ததியிலே வந்த தமிழர்களே நான் உங்களைப் பார்த்துக் கேட்கிறேன். தந்தை பெரியாரால் உணர்ச்சியூட்டப்பட்ட தமிழர்களே நான் உங் களைப் பார்த்துக் கேட்கிறேன்.
அண்ணன் தளபதி அழகிரிசாமியால் உணர்ச்சியூட்டப்பட்ட நண்பர் களே உங்களைப் பார்த்துக்கேட்கிறேன், தந்தை பெரியாரால் அவர்களுடைய தளபதிகளால் எழுச்சி யூட்டப்பட்ட சுயமரியாதை இயக்கத் தமிழர்களே உங்களைப் பார்த்துக்கேட்கிறேன். நான் தன்மானம் இல்லாதவனாம். இருக்கலாம். தன்மானம் இல்லாத காரணத்தால்தான் இதுவரையிலே தாங்கிக்கொண் டிருக்கிறேன். எனக்காக அல்ல. இந்த நாடு அமளிக் காடாக ஆகிவிடக்கூடாது என்பதற்காக பலத்த கைதட்டல், உணர்ச்சிமிகு ஆரவாரம்.)
-இவ்வாறு தி.மு.க. தலைவர் கலைஞர் அவர்கள் உரையாற்றினார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக