வியாழன், 13 செப்டம்பர், 2012

Karnataka CM:காவிரியில் தண்ணீர் திறந்து விடுவது இயலாத காரியம்

பெங்களூரு: ""காவிரி நீர் திறந்து விடுவது இயலாத காரியம். தமிழகத்துக்கு எதிராக போராட்டக்காரர்கள் பேசக்கூடாது. அமைதியாக போராட்டம் நடத்த வேண்டும்,'' என, முதல்வர் ஜெகதீஷ் ஷெட்டர் கூறினார்.
லண்டனில் நடந்த பாராஒலிம்பிக்கில் உயரம் தாண்டுதல் போட்டியில் வெள்ளிப்பதக்கம் வென்ற கிரிஷாவுக்கு நடந்த பாராட்டு விழாவில், அவருக்கு, 20 லட்சம் ரூபாய் பரிசு தொகை வழங்கி, அரசு சார்பில் அவருக்கு வேலை வாய்ப்பு அளிக்கப்படும் என, முதல்வர் ஜெகதீஷ் ஷெட்டர் உறுதியளித்தார்.
பின்னர், நிருபர்களிடம் முதல்வர் ஜெகதீஷ் ஷெட்டர் கூறியதாவது;உச்சநீதிமன்ற உத்தரவை எதிர்த்து, கன்னட ரக்ஷன வேதிகே, விவசாயிகள் சங்கம் மாண்டியா, மைசூரு, சாம்ராஜ்நகர், தும்கூர் உட்பட பல்வேறு பகுதிகளில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.கர்நாடகத்தில், வறட்சி நிலவும் நேரத்தில், தமிழகத்துக்கு தண்ணீர் திறந்து விடுவது இயலாத காரியம்.
ஆனால், உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பையும் மதிக்க வேண்டும். கர்நாடக மக்களின் எண்ணத்துக்கு எதிராக, பா.ஜ., அரசு செயல்படாது.வரும், 19ம் தேதி, நடக்கும் காவிரி நதிநீர் ஆணைய கூட்டத்தில், பிரதமர் மன் மோகன் சிங்கிடம், காவிரி நீர் திறந்து விடுவது இயலாத காரியம் என்று எடுத்து கூறுவோம். இங்குள்ள வறட்சி நிலைமையை பிரதமரிடம் எடுத்து கூற உள்ளோம். மாண்டியா, மைசூரு, பெங்களூரு ஆகிய பகுதிகளுக்கு குடிநீர் கொடுப்பதே பெரும் சிரமமாக உள்ளது.

தற்போது போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள், போராட்டத்தை கைவிட வேண்டும். போராட்டக்காரர்களின் எண்ணத்தை அரசு உணர்ந்துள்ளது. போராட்டத்தின் போது, யாரையும் தாக்கி எந்த கருத்தும் கூறக்கூடாது. கர்நாடக அரசியல் கட்சிகள் அனைத்தும் ஒற்றுமையாக உள்ளது. அண்டைய மாநிலத்தினரை தாக்கி பேசக்கூடாது. போராட்டம் அமைதியாக நடத்தப்பட வேண்டும். அரசின் மீது நம்பிக்கை வைத்து போராட்டத்தை கைவிட வேண்டும் என்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக