சனி, 1 செப்டம்பர், 2012

இந்தியா வல்லரசாகிவிடும் என்பது சாத்தியமில்லை: பாலகுருசாமி பேச்சு

கோவை: ""இந்தியா பொருளாதாரத்தில், வளர்ச்சி அடைந்த நாடாக இருப்பதை விட, மக்கள் மகிழ்ச்சியாக வாழும் நாடாக இருக்க வேண்டும்'' என, தமிழக திட்ட குழு உறுப்பினர் பாலகுருசாமி பேசினார்.
கோவை, எஸ்.என்.ஆர்., கலை அறிவியல் கல்லூரி வெள்ளி விழா, கல்லூரி அரங்கில் நடந்தது.
இதில், சிறப்பு விருந்தினர் தமிழக திட்ட குழு உறுப்பினர் பாலகுருசாமி பேசியதாவது:
இந்தியா பொருளாதாரத்தில், வளர்ந்து வரும் நாடாக இருக்கலாம். ஆனால், சமூக அடிப்படையில், இன்னும் வளர வில்லை. ஒரு நாட்டின் வளர்ச்சிக்கு, பொருளாதாரம் மட்டும் போதாது. சமூக வளர்ச்சியும் முக்கியம்.வரும் 2020ல், இந்தியா வல்லரசாகிவிடும் என்பது அப்துல்கலாமின் நம்பிக்கை. ஆனால், அதற்கான சாத்தியம் இல்லை. பல்கலைக்கழகங்கள் உட்பட அரசின் அனைத்து துறையிலும், லஞ்சம் நிறைந்து இருக்கிறது. இங்கு, படித்தவர்கள் செய்யும் குற்றங்கள்தான் அதிகம்.சுதந்திரம் பெற்று, 66 ஆண்டுகள் ஆகியும் ஏழ்மையும், வறுமையும் குறைய வில்லை. ஒரு வேளை உணவுக்குக்கூட உத்திரவாதம் இல்லாத மக்களும், உள்ளனர். இன்றைக்கு, இந்தியாவில் 25 சதவீதம் பேர் குடிசைகளிலும், 15 சதவீதம் பேர் ரோட்டோரங்களிலும் வாழ்கின்றனர். இன்னும் தீண்டாமை ஒழியவில்லை.
வேலைவாய்ப்பு அலுவலகங்களில், பதிவு செய்துவிட்டு, வேலைக்கு காத்திருப்போர், 75 லட்சம் பேர். இதில்,மூன்று லட்சம் பேர் இன்ஜீனியர்கள். இந்நிலையில், 2020ல் இந்தியா வல்லரசாகும் என்று சொன்னால், அது எப்படி சாத்தியமாகும்.படித்த இளைஞர்கள், இந்தியாவின் வளர்ச்சிக்கு உதவ வேண்டும். அதற்கான அறிவும், ஆற்றலும் உங்களிடம் உள்ளது. நல்ல மனிதர்களை உருவாக்குவதுதான், கல்வி நிறுவனங்களின் நோக்கம். இவ்வாறு, பாலகுருசாமி பேசினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக