வெள்ளி, 28 செப்டம்பர், 2012

சேது சமுத்திர திட்டத்தை கையில் எடுத்த திமுக!

டெல்லி: டீசல் விலை உயர்வு, சமையஸ் கேஸ் சிலிண்டர்கள் மீதான மானியத்துக்குக் கட்டுப்பாடு ஆகியவற்றை வாபஸ் பெற வேண்டும் என்று ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் திமுக வலியுறுத்தியது.
அதே நேரத்தில் மத்திய அரசின் பொருளாதார சீர்திருத்த நடவடிக்கைகளுக்கு திமுக ஒப்புதல் வழங்கியது. இதற்குப் பிரதிபலனாக சேது சமுத்திரம் திட்டத்தை உடனடியாக மீண்டும் செயல்படுத்த வேண்டும் என்றும் திமுக கோரியுள்ளது.

காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி தலைமையில் கடந்த 25ம் தேதி நடந்த காங்கிரஸ் காரியக்கமிட்டி கூட்டத்தில், மன்மோகன்சிங் அரசின் பொருளாதார சீர்திருத்த நடவடிக்கைகளுக்கு ஒப்புதல் வழங்கப்பட்டது.
இந்த நிலையில் காங்கிரஸ் கூட்டணியின் ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டம், சோனியா காந்தி தலைமையில் டெல்லியில் நேற்று நடந்தது.
காங்கிரஸ் கூட்டணியில் இருந்து மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் விலகியபிறகு நடந்த முதலாவது கூட்டம் என்ற வகையில் இந்த ஒருங்கிணைப்புக்குழு கூட்டம் முக்கியத்துவம் பெற்றது. இந்தக் கூட்டத்தில் காங்கிரஸ் கூட்டணியில் இடம் பெற்றுள்ள கட்சிகளின் தலைவர்கள் கலந்து கொண்டனர்.
இந்தக் கூட்டத்திலும், மத்திய அரசு மேற்கொண்டுள்ள பொருளாதார சீர்திருத்த நடவடிக்கைகளுக்கு ஒப்புதல் வழங்கப்பட்டது.
கூட்டத்துக்குப் பின் நிருபர்களிடம் பேசிய மத்திய நிதியைச்சர் ப.சிதம்பரம், ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில், கடந்த 10 நாட்களில் அறிவிக்கப்பட்ட முக்கிய முடிவுகளினால் ஏற்பட்டுள்ள நிலைமையை ஆராய்ந்தோம். அரசு மேற்கொண்டுள்ள நடவடிக்கைகளில் சில பொதுமக்களுக்கு சுமையாக அமைந்தபோதும், இந்த முடிவுகள் தேவையானவை, தவிர்க்க முடியாதவை என கூட்டணிக் கட்சி தலைவர்கள் கருத்து கூறி, திருப்தி தெரிவித்தனர்.
இன்னும் செய்ய வேண்டிய பொருளாதார சீர்திருத்தங்களின் அவசியம் பற்றியும் ஒருங்கிணைப்புக்குழு கூட்டத்தில் விவாதித்தோம். மேற்கொண்ட பொருளாதார நடவடிக்கைகள் தவிர்க்க முடியாதவை, தேவையானவை என்ற செய்தி மக்களை சென்றடைந்துள்ளது. இதை மக்கள் புரிந்து கொண்டதற்காக நன்றி.
ரூபாயின் மதிப்பு அடிக்கடி மாறுகிற நிலை ஏற்படாதிருப்பதை உறுதி செய்ய, இந்தியாவில் முதலீடுகள் குவிவதற்கும், உள்நாட்டு முதலீடுகளை ஊக்குவிக்கவும் பல பொருளாதார சீர்திருத்தங்கள் அவசியம் என்பதை ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் பிரதமர் விளக்கினார்.
இன்சூரன்ஸ், பென்ஷன் துறைகளில் அன்னிய நேரடி முதலீட்டுக்கு அனுமதி அளிப்பது குறித்து இன்றைய கூட்டத்தில் விவாதிக்கவில்லை.
சேது சமுத்திரத்திட்டம் குறித்தும் இந்தக் கூட்டத்தில் விவாதித்தோம். இது தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வரும்போது மத்திய கப்பல்துறை உரிய பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்யும்.
சேது சமுத்திரத் திட்டத்தை மாற்றுவழியில் நிறைவேற்றுவது தொடர்பான பச்செளரி கமிட்டியின் அறிக்கை அரசுக்கு வந்துள்ளது. இதுகுறித்த இறுதி முடிவை மத்திய அமைச்சரவை விரைவில் எடுக்கும் என்றார்.
கூட்டத்தில் மத்திய அரசின் பொருளாதார சீர்திருத்த நடவடிக்கைகளுக்கு திருப்தி தெரிவித்த போதிலும், மானிய விலையிலான சமையல் கேஸ் சிலிண்டர் வினியோக கட்டுப்பாட்டுக்கு திமுகவும் தேசியவாத காங்கிரஸ் கட்சியும் எதிர்ப்புத் தெரிவித்தன.
திமுக சார்பில் பங்கேற்ற டி.ஆர்.பாலு பேசுகையில் மானியத்துடன் கூடிய சமையல் கேஸ் சிலிண்டர்களின் எண்ணிக்கையை 6ல் இருந்து 12 ஆக அதிகரிக்க வேண்டும் என்று வற்புறுத்தினார்.
அந்த கோரிக்கை ஏற்கப்படாததால், 9 சிலிண்டர்களாவது மானிய விலையில் வழங்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். ஆனால், அந்த கோரிக்கையும் நிராகரிக்கப்பட்டுவிட்டது. தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவாரும், திமுகவின் கோரிக்கைக்கு ஆதரவு தெரிவித்தார்.
அதே போல டீசல் விலை உயர்வை குறைக்க வேண்டும் என்ற திமுகவின் கோரிக்கையும் ஏற்கப்படவில்லை.
அதே நேரத்தில் சில்லறை வர்த்தகத்தில் அன்னிய நேரடி முதலீட்டுக்கு அனுமதி வழங்கப்பட்டதற்கு கூட்டணி கட்சிகள் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக