செவ்வாய், 18 செப்டம்பர், 2012

ஞாநி: தமிழர்கள்தான் பெரும்பாலும் தேவாலயத்திருவிழாவுக்கு வந்திருக்கிறார்கள்.

பி.குமார் சங்கர், மணப்பாறை.
தி.மு.க. ஆட்சிக்கு வந்ததற்கு காரணமே இளைஞர்களின் தியாகமே என்கிறாரே ஸ்டாலின்?
அவர் சொல்வது 1967ல் தி.மு.க ஆட்சிக்கு வந்ததைப் பற்றி என்றால், அது உண்மைதான். ஹிந்தி திணிப்பு எதிர்ப்புப் போராட்டத்தில் மாணவர்கள் உயிர் தியாகம் செய்ததன் பயனை அன்று தி.மு.கதான் பெற்றது.
ஹேமா சண்முகம், கரூர்.
ஈ.மு.கோழி முதலீடு பண்ண சொல்லி மோசடிக்கு வற்புறுத்திய சினிமா நடிகர்களை தண்டிக்க வழியில்லையா?
இந்த விஷயம் மட்டுமல்ல, இன்னும் எத்தனையோ பொருட்களுக்கு விளம்பரங்களில் சினிமா நடிகர்கள், விளையாட்டு வீரர்கள் தோன்றி பரிந்துரைக்கிறார்கள். அவ்ர்கள் சொல்வதை நம்பி பொருட்களை வாங்கினால் அது நம் முட்டாள்தனம்தான். வாங்கப்போகும் பொருளைப் பற்றி, முதலீடு செய்யப்போகும் துறையைப் பற்றி நாம் விசாரித்து அறிந்துகொள்லவேண்டியது நம் கடமை.

வரதராஜன், திருச்சி.
கூடங்குளம் அணுமின் நிலையத்திற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டடிருந்த அனைத்து வழக்குகளையும் சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துவிட்டதே? இனி போராட்டம் அவ்வளவுதானா?

வழக்குகளைப் பொறுத்த மட்டில், உச்ச நீதிமன்றம் வரை செல்ல வாய்ப்பு மீதியிருக்கிறது. ஏற்கனவே உச்ச நீதிமன்றம் முன்பு ஒரு வழக்கு இன்னும் நிலுவையில் இருக்கிறது. மக்கள் போராட்டத்தைப் பொறுத்த மட்டில் இந்தியாவில் அணு உலைகளுக்கெதிரான் போராட்டங்கள் அறுபதுகளிலிருந்தே நடந்து வருகின்றன. கூட்னக்குலம் எதிர்ப்பு கூட எண்பதுகளிலேயே தொடங்கியது. ஆனால் இந்த முரை நடந்தது போல பெரும் எழுச்சியுடன் முற்றிலும் காந்திய வழிமுரையில் நடந்த போரட்டம் இதுவரை இல்லை. எனவே இப்போது இது ஒடுக்கப்பட்டாலும், அணு உலைப் போராட்டங்கள் நிச்சயம் தொடரும். பெரும் விபத்து ஏற்பட்ட பின்னர்தான் அரசுக்கும், பெருவாரியான மக்களுக்கும் கண் திறக்கும் என்றால் அதற்கு நாம் என்ன செய்வது ? வருமுன் காவாதான் வாழ்க்கை எரி முன் வைக்கோல் போல கெடும் என்று வள்ளுவன் சொன்னதை கூடங்குளம் இடிந்தகரை மக்கள் உனர்ந்திருப்பது போல பிறர் உனராமல் இருப்பதே சிக்கல்.
சுப்ரமணியன், திண்டுக்கல்.
அரசு ஆஸ்பத்திரிகளில் மட்டும் எலிகள் பெருக்கம் அதிகம் இருப்பது ஏன்?

அரசாங்கத்தில் பெருச்சாளிகள் அதிகம் இருப்பதுதான் காரணம்.

பன்னீர்செல்வம், நாமக்கல்.
கிரானைட் விவகாரத்தில் இன்னமும் தலைமறைவாக இருக்கிறாரே அழகிரியின் மகன்?

பெரும்புள்ளிகள் எப்போதும் முஞாமீன் மனுவைப் போட்டுவிட்டு அது நீதிமன்ரத்தில் விசாரணைக்கு வந்து முடிவு தெரியும்வரை பதுங்கியிருப்பதுதான் வழக்கம். முன்ஜாமீன் மறுக்கப்பட்டுவிட்டால், உடனே ஏதாவது ஒரு மருத்துவமனைக்குப் போய் அட்மிட் ஆவது அடுத்த உத்தி.
மீரான், திருப்பூர்.
வரதட்சணை கொடுமைக்கு ஆயுள் தண்டனை அளிக்க வேண்டும் என்று மத்திய அமைச்சர் கிருஷ்ணா திராத் சட்ட அமைச்சகத்துக்கு சிபாரிசு செய்திருப்பது பற்றி?

வரதட்சணை தராமல்தான் கல்யாணம் செய்வோம் என்று உறுதியாகச் சொல்லும் நிலைக்கு நம் பெண்களை மாற்றுவதுதான் அசல் தீர்வு. இப்போதைக்குக் கொடுமைக் காரர்களுக்கு கடும் சிறை தண்டனை தருவதில் எந்த தவறுமில்லை.
கேசவன், விருதுநகர்.
ஆலயத்துக்கு வந்த சிங்களவர்களை நம்மவர்கள் விரட்டி அடித்தது சரிதானா?

அப்படி விரட்டி அடிப்பவர்கள் உண்மையில் நம்மவர்களே அல்ல. வந்ததும் சிங்களவர்கள் மட்டுமல்ல. ஈழத்தமிழர்கள்தான் பெரும்பாலும் தேவாலயத்திருவிழாவுக்கு வந்திருக்கிறார்கள். அவர்களை விரட்டி அடித்தவர்கள் செய்வது தவறான அரசியல்.இலங்கை அரசு வேறு மக்கள் வேறு. அரசுகள் செய்யும் தவறுகளுக்கெல்லாம் மக்களை தண்டிக்கமுடியாது. பாகிஸ்தான் அரசு இந்தியா மீதான பயங்கரவாத செயல்களை ஊக்குவிப்பது பல முறை நிரூபிக்கப்பட்டிருக்கிறது. ஆனால் பாகிஸ்தான் மக்கள் இந்தியாவுக்கு வருவது, சென்னை வரை வந்து சிகிச்சை பெறுவதும் தடுக்கப்படவில்லை. அதுதான் சரி.. இரு நாடுகளுக்கும் இடையே வர்த்தகம், கலாசாரம், விளையாட்டு ஆகிய துறைகளில் பரிமாற்றம் இருப்பதுதான் மக்களிடையே நட்பை வலர்க்கும். அரசுகள் செய்யும் கொடுமைக்கு வேறு தீர்வுகளையே நாடவேண்டும். அப்பாவி தமிழர்களை கொன்று குவித்த இலங்கை ராணுவத்துக்கு இந்தியாவில் பயிற்சி தரக் கூடாது என்று சொல்வது சரி. இலங்கை கால் பந்து வீரர்கள் இங்கே விளையாடக் கூடாது என்று தடுப்பது தவறு.
இஸ்மாயில், சென்னை.
டாஸ்மாக்குக்கு மூடு விழா சாத்தியம் தானா?

சாத்தியப்படுத்தியாக வேண்டும். இல்லாவிட்டால் இன்னும் பத்தாண்டுகளில் தமிழகத்தில் எந்த துறையிலும் திறமையுடன் வேலை செய்வதற்கான பயிற்சியும் கல்வியும் பெற்ற இளைஞர்கள் கிடைப்பது அபூர்வமாகிவிடும். இப்போதே பல துறைகளில் ஸ்கில்ட், செமி ஸ்கில்ட் தொழிலாளர்களுக்குக் கடும் பஞ்சம் உள்ளது. பீஹார், ஜார்கண்ட், நேபாளத்திலிருந்தெல்லாம் தொழிலாளர்கள் இங்கே வரவேண்டிய காரணங்களில் ஒன்று நம்மவர்கள் குடித்து வீணாகப் போனதுதான்.

சிவா, திருவண்ணாமலை.
ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில் முதல் சாட்சியான ஸ்ரீவத்சாவை முன்னாள் தொலைத்தொடர்புத் துறை அமைச்சர் ஆ. ராசா குறுக்கு விசாரணை செய்ய டெல்லி சிறப்பு நீதிமன்றம் அனுமதித்துள்ளதே?

குற்றம் சாட்டப்பட்டவர் சார்பில் அவரது வழக்கறிஞர் எதிர் சாட்சிகளை குறுக்கு விசாரணை செய்வது வழக்கமான நடைமுறை. இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட ராசா, தாமே தமக்காக வாதாடுவதால் அவருக்கு குறுக்கு விசாரனை செய்ய அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதில் தவறோ ஆச்சரியமோ ஏதுமில்லை. நெடுக்கு விசாரணை, குறுக்கு விசாரனை எல்லாம் விரைவாக முடிந்து குற்றவாளிகள் தண்டிக்கப்படுவதுதான் முக்கியம்.
வேலு, மதுரை.
சிவகாசி பட்டாசு வெடி விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு தமிழக அரசு 5 லட்சம் ரூபாய் வரை இழப்பீடு வழங்கவேண்டும் என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கோரிக்கை விடுத்துள்ளாரே?

இந்த விபத்தில், விதிகளை மீறி செயல்பட்ட ஆலையை உரிய நேரத்தில் அதிகாரிகள் மூடத் தவறியதால் அரசின் பொறுப்பும் சேர்ந்திருக்கிறது. மற்றபடி இத்தகைய விபத்துகளில் அரசு இழப்பீடு வழங்குவது கருணை அடிப்படையில்தான் கடமை அடிப்படையில் அல்ல. விபத்து நடந்த ஆலையின் அதிபர், நிர்வாகம் ஆகியோருகுக்கு சொந்தமன சொத்துகளை பறிமுதல் செய்து அதிலிருந்து விபத்தில் பாதிக்கப்பட்டோருக்கு இன்னும் கூடுதல் நஷ்ட ஈடு தருவதுதான் முறை.
பஷீர், சென்னை.
நிலக்கரி சுரங்க ஒதுக்கீடுகள் அனைத்தையும் ரத்து செய்யவேண்டும் என்கிறாரே அத்வானி?

ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டு பிரச்சினையில் அப்படித்தான் செய்யப்பட்டது. அதே போல இதிலும் செய்யலாம். ஆனால் வேறுபாடு என்னவென்றால், ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடுகள் அனைத்தையும் ரத்து செய்ய உத்தரவிட்டது நீதிமன்றம்தான். அரசு அல்ல. நிலக்கரி பிரச்சினை இன்னும் நீதிமன்ரம் முன்பு ச்லெலவில்லை. சென்றால் அப்படிப்பட்ட உத்தரவு வரும் வாய்ப்பு உண்டு.
கௌரிசஙகர், கொடைரோடு.
கனிமொழி அமைதி காப்பதன் ரகசியம் என்ன?

அதுதான் அவருக்கும் நல்லது. நமக்கும் நல்லது.
ரம்யா, அம்பாசமுத்திரம்.
9 ஆண்டுகள் கழித்து 19ம் தேதி டெல்லியில் காவிரி நதிநீர் ஆணையக் கூட்டம் நடக்கவிருக்கிறதே?

உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டபிறகுதான் மன்மோகன் அரசு இதைக் கூட்டுகிறது என்பதே அரசுக்குப் பெரிய அவமானம். ஆணையத்தைக் கூட்டினால் போதாது. ஏற்கனவே டிரிப்யூனலும் நீதிமன்றங்களும் கொடுத்திருக்கும் தீர்ப்புகளை கர்நாடக அரசை நிறைவேற்றச் செய்வதும், நிறைவேற்றாவிட்டல் அந்த அரசை அதற்காக தண்டிப்பதும்தான்ன தேவைப்படுகிறது.
விஜயராஜ், செங்கல்பட்டு.
தமிழகத்தை வெள்ளநீரை வெளியேற்றுவதற்கான கால்வாயாக மட்டுமே பயன்படுத்துவோம் என்று கர்நாடக அரசு சொல்லாமல் சொல்லியிருக்கிறது. இது உச்சநீதிமன்றம், காவிரி நடுவர்மன்றம், மத்திய அரசு ஆகியவற்றுக்கு விடப்பட்ட சவால் ஆகும் என்கிறாரே ராமதாஸ்?

ராமதாசோ, இங்கிருக்கும் நாமோ என்ன சொல்லியும் பயனில்லை. நீதிமன்றமும் அரசும் அடுத்து என்ன செய்யப்போகின்றன என்பது மட்டுமே இனி முக்கியம். கர்நாடக அரசு மீது கடும் நடவடிக்கை எடுக்கச் செய்ய அரசையும் நீதிமன்றத்தையும் வலியுறுத்த, இங்கே தேவைப்படுவது ஒற்றுமை. அது தமிழ்நாட்டில் எந்த பிரச்சினையிலும் இல்லை.
மீரான்சாஹிப், சென்னை.
இலங்கை அதிபர் மகிந்த ராஜபக்சே இந்தியாவுக்கு வருமாறு சுஷ்மா ஸ்வராஜ் அழைக்கவில்லை என்று தமிழக பாரதிய ஜனதா கட்சி விளக்கம் அளித்துள்ளதே?

சுஹ்மா ஸ்வராஜ் அழைக்கவில்லை. ஆனால் மத்தியப் பிரதேச பா.ஜ.க அரசு அழைத்திருக்கிறது என்று சொல்வதாக எடுத்துக் கொள்ளவேண்டும். நிகழ்ச்சியை நடத்துவதே மத்திய பிரதேச அரசின் கலாசாரத்துறையும் ஸ்ரீல ந்க்கா போதி சங்கமும்தானே.
முருகவேல், கிருஷ்ணகிரி.
சிவகாசி பயங்கரம் – ‘பேன்சி’ பட்டாசுகளைத் தயாரித்ததால் வந்த வினையாமே?

இல்லை. ஊழல் அதிகாரிகள், அரசு நிர்வாகத்தால் வந்த வினை. விதிமீறும் ஆலைகளை உடடடியாக சீல் வைத்துப் பூட்டாமல் அதிகாரிகள் இருந்ததற்கு என்ன காரணம் இருக்க முடியும், ஊழ்லைத்தவிர…?!
சூரிய கதிர் 16.9.2012

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக