சனி, 8 செப்டம்பர், 2012

.வீரமணி:திரு’வுக்குப் பதில் ‘ஸ்ரீ’ வந்தது எப்படி?

 K Veeramani Questions On Avoiding Tamil Hc சென்னை உயர் நீதி மன்ற விழா அழைப்பிதழில் ‘திரு’வுக்குப் பதில் ‘ஸ்ரீ’ வந்தது எப்படி?- கி.வீரமணி கேள்வி



சென்னை : 150 ஆண்டு காணும் சென்னை உயர் நீதி மன்ற விழா அழைப்பிதழில் ‘திரு'வுக்குப் பதில் ‘ஸ்ரீ' வந்தது எப்படி ? என திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி கேள்வி எழுப்பியுள்ளார்.
இது குறித்து திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி வெளியிட்டுள்ள அறிக்கை:
சென்னை உயர் நீதி மன்றத்திற்கு 150 ம் ஆண்டு விழா இன்று தலைநகர் சென்னையில் மிகவும் சிறப்புடன் நடைபெறுகிறது. இந்த விழாவிற்கு நமது நல்வாழ்த்துக்கள்.
100 ஆண்டுகளுக்கு முன்பு அதிகம் காணப்படாமல் இருந்த சமூக நீதிக் கொடி
இன்று தான் பட்டொளி வீசிப் பறக்கின்றது. தந்தை பெரியாரும், திராவிடர் இயக்கமும் அதன் கருத்துச் செறிந்த தன்னலமற்ற போராட்டங்களும் தான் அந்த சமூக நீதிக் கொடி ஏற்றப்பட்டதற்கும், அது தலை தாழாமல் பறப்பதற்கும் காரணம் என்பதை, பலனை அனுபவிக்கும் ஒடுக்கப்பட்ட சமுதாய வழக்குரைஞர்கள், நீதிபதிகள் எத்தனைப் பேர் நினைவில் கொண்டுள்ளனர் என்பது கேள்விக் குறியே என்ற போதிலும், "எம் கடன் பணி செய்து கிடப்பதே" என்ற மூதுரைக்கேற்ப, நன்றி என்பது பயன் பெற்றோர் காட்டவேண்டிய பண்பு.
உதவியோர் எதிர்பார்த்தால் அது சிறுமைக்குணம் என்பதே தந்தை பெரியார் தம் அறிவுரை.
இந்தியாவின் இதர மாநிலங்களில் உள்ள உயர் நீதி மன்றங்களிலும், உச்ச நீதி
மன்றத்திலும் இன்னமும் சமூக நீதிக் கொடிகள் - இங்குள்ளதைப் போல் கம்பீரமாகப்
பறக்கவில்லை என்பது கவலைக்குரிய, கணக்கில் எடுத்துக்கொள்ளப்பட வேண்டியதொரு செய்தியாகும்.
இன்னமும் ஏராளமான வழக்குகள் ஏன் தேங்கி உள்ளன? (மற்ற மாநிலங்களின் நீதிமன்றங்களோடு ஒப்பிடுகையில் இது குறைவு என்பது ஒரு ஆறுதல் என்றாலும் கூட) தாமதிக்கப்பட்ட நீதி மறுக்கப்பட்ட நீதி அல்லவா.
அது மட்டுமல்லாமல், அரசுகளின் அதீதச் சட்டங்கள் - நடவடிக்கைகளிலிருந்து அப்பாவி மக்களையும், நிறுவனங்களையும், ஜனநாயக மரபுகளையும் காப்பாற்றும் மக்களின் கடைசி நம்பிக்கையாக உயர்நீதிமன்றங்கள், உச்சநீதிமன்றம் (சில நேரங்களில் மாறுபட்டும் இருக்கலாம்) தான் என்பதால் வழக்குகளும் பெருகிடும் நிலை உள்ளது.
அழி வழக்குகள், அக்கப்போர் வழக்குகளைத் தடுத்து, அவை உண்மையான பொதுநல வழக்குகள் அல்ல என்றும் நம் நீதியரசர்கள் கண்டிப்பதும் தண்டிப்பதும் கூட வரவேற்கத்தக்கதே.
தற்போதுள்ள, சென்னை உயர் நீதி மன்ற தலைமை நீதிபதி மாண்பை இக்பால் அவர்கள் மட்டும் தேர்ந்து உணர்ந்து நீதி பரிபாலனம் செய்வது, நமது நீதியரசர்களும் அந்த மாண்பை உயர்த்துவதும் மிகவும் சிறப்பான அம்சங்கள் ஆகும்.
ஸ்ரீ நுழைந்தது எப்படி?
இந்தப்படி நடக்கும் பொன் விழா அழைப்பிதழில் "ஸ்ரீ" (sri) என்பது எப்படி நுழைந்தது ? திரு என்பது தான் தமிழக அரசின் ஆணைப்படியான நடைமுறை. அறிஞர் அண்ணா முதல் அமைச்சராக வந்தவுடன் போட்ட ஆணைகளில் இது முதலாவது ஆகும்.
தமிழ்நாடு அரசு நிதி உதவி செய்து, தமிழக முதல் அமைச்சரும் கலந்து கொள்ளும் ஒரு முக்கிய விழாவில் ஏன் தமிழ் புறக்கணிக்கப்பட வேண்டும் ? புரியவில்லையே. இதற்கு மூல காரணம் யார் ? தலைமை நீதிபதி அவர்கள் இதனை விசாரித்து இனி வகுக்கும் நிகழ்ச்சிகளில் இது போன்று நடக்காமல் தடுத்து நிறுத்தப்பட வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறேன் என அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக