வெள்ளி, 28 செப்டம்பர், 2012

சேரி சுற்றுலா! குறைந்பட்சம் ஒரு ஆண்டுக்கு குற்ற உணர்ச்சி இருக்காது

மும்பையின் தாராவி
மேற்கத்திய சுற்றுலா பயணிகளில் பலர் பாரிசின் ஈபல் கோபுரம், நியூயார்க்கின் சுதந்திர தேவி சிலை, ஆக்ராவின் தாஜ்மகால் இவற்றில் கிடைக்காத புதிய உணர்வை தேடி ஏழ்மை பீடித்துள்ள நகர்ப் பகுதிகளை தேடி போகிறார்கள் என்கிறது பிபிசி உலக சேவையின் பிசினஸ் டெய்லி.
ஆறு வருடம் முன்பு கிருஷ்ணா புஜாரி என்பவரும் அவரது பிரிட்டிஷ் நண்பர் கிரிஸ் ரே என்பவரும் ரியாலிட்டி டூர்ஸ் அண்ட் டிராவல்ஸ் என்ற நிறுவனத்தின் மூலம் ஆசியாவின் மிகப்பெரிய சேரியான மும்பையின் தாராவி பகுதியை சுற்றிக் காட்டும் திட்டத்தை ஆரம்பித்திருக்கிறார்கள்.
“இதை வறுமை என்று மட்டும் நினைத்தால் அது மட்டும்தான் உங்களுக்குத் தெரியும், ஆனால் இந்த வறுமையிலிருந்து கற்றுக் கொள்ள வேண்டியது நிறைய இருக்கிறது” என்கிறார் பூஜாரி.

சுற்றுலாவிற்கு வந்த பிரான்சை சேர்ந்த புளோரன்ஸ் மார்ட்டினா என்பவர் “இந்த மக்கள் ஏழ்மையை எதிர்த்து போராடுகிறார்கள், தமது வாழ்க்கையை நடத்துவதற்காக ஏதோ ஒரு தொழிலையும் வணிகத்தையும் உருவாக்கி கொள்கிறார்கள்” என்று வியக்கிறார்.
சான் பிரான்சிஸ்கோவைச் சேர்ந்த கிறிஸ்டியன் ஹான்சன், “மக்கள் இவ்வளவு கடும் உழைப்பாளிகளாக இருப்பார்கள் என்று நான் எதிர்பார்க்கவில்லை” என்கிறார்.
பூஜாரியின் நிறுவனத்தின் பெரும்பகுதி வருமானம் இந்த தாராவி சுற்றுலாவின் மூலம் வருவதால் லாபத்தில் 80 சதவீதத்தை சக நிறுவனமான ரியாலிட்டி கிவ்ஸ் என்ற தொண்டு நிறுவனத்துக்கு கொடுத்து விடுகிறார்களாம்.
மும்பையின் தோல் பதனிடும் தொழிலிலும் கட்டுமானத் தொழிலிலும் வேலை செய்வதற்காக அழைத்துச் செல்லப்பட்ட உழைக்கும் மக்களால் உருவாக்கப்பட்ட பகுதி தாராவி. 19-ம் நூற்றாண்டின் இறுதியிலும் 20-ம் நூற்றாண்டின் தொடக்கத்திலும் மும்பைக்கு இடம் பெயர்ந்த தமிழ்நாட்டைச் சேர்நத முஸ்லீம்கள், தலித்துகள், நாடார்கள், தேவர்கள் போன்ற உழைக்கும் மக்கள் சதுப்பு நிலப்பகுதியில் மண் கொட்டி, சிறு சிறு வீடுகள் கட்டி வசிக்க ஆரம்பித்தார்கள். மும்பையின் மையப் பகுதியில் 535 ஏக்கர் பரப்பில் விரிந்திருக்கும் தாராவி உழைக்கும் மக்களுக்கு புகலிடமாக இருக்கிறது. இங்கு ரூ 2000 மாத வாடகைக்கு கூட குடியிருக்க இடம் கிடைக்கிறது.
இப்போது சுமார் 10 லட்சம் மக்கள் தாராவியில் வசிக்கிறார்கள்.
‘உலக அளவில் சேரிகளின் எண்ணிக்கை அதிகமாவதாலும், மேலும் மேலும் மக்கள் சேரிகளில் வசிப்பதாலும் சேரி சுற்றுலா போவது அதிகமாகிறது’ என்கிறார் ஜெர்மனியின் ஓஸ்னாப்ருக் பல்கலைக் கழகத்தின் முனைவர் மால்டே ஸ்டெயின்பிரிங்க்.
ஐரோப்பிய ஒன்றியத்தின் பண உதவியின் கீழ் சேரி சுற்றுலா பற்றி ஆய்வு செய்யும் லெஸ்டர் பல்கலைக் கழக பேராசிரியர் டாக்டர் பேபியன் பிரென்சல் ‘விக்டோரியா காலத்து இங்கிலாந்திலேயே ஸ்லம்மிங் என்ற பெயரில் போலீஸ் அல்லது தொண்டு நிறுவனத்தினரில் துணையுடன் கிழக்கு லண்டனில் இருக்கும் சேரிகளை சுற்றிப் பார்க்க போனார்கள்’ என்கிறார்.
நுகர்வு கலாச்சாரத்தில் ஊறித் திளைக்கும் மேற்கத்திய சுற்றுலா பயணிகள் வறுமையில் வாழும் மக்களைப் பார்த்து
  • எளிமையாக வாழ்கிறார்கள், நிரம்பி வழியும் சாக்கடைகளுக்கு மத்தியில் மகிழ்ச்சியாக வாழ்கிறார்கள்! 1400 பேருக்கு ஒரு கழிப்பறை என்ற அவலச் சூழலை திறமையாக சமாளிக்கிறார்கள்!
  • இடிந்து போகவிருக்கும் பள்ளி கட்டிடங்களில் குழந்தைகள் இயல்பாக படிக்க போகிறார்கள்!
  • சிறு கிளினிக்கில் இருக்கும் ஒற்றை டாக்டரிடமே ரூ 15க்கு மருந்து வாங்கிக் கொண்டு உடல் நலக் குறைவை சரி செய்து கொள்கிறார்கள்!
  • காற்றோட்ட வசதி இல்லாமல் இருட்டாக இருக்கும் குடிசைகளில் தொழில் செய்து ஒவ்வொரு ஆண்டும் ரூ 5,000 கோடி மதிப்பிலான பொருட்களை உற்பத்தி செய்கிறார்கள்!
என்று வியக்கிறார்கள். வறுமையுடனான மக்களின் போராட்டத்தை ‘உண்மையில் ஏழைகள்தான் மகிழ்ச்சியாக இருக்காங்க, தெரியுமா!’ என்று  புனிதப்படுத்துகிறார்கள்.
ஒரு தடவை மும்பை தாராவியை சுற்றி வந்து சாம்சங் கேலக்ஸி மூலம் படங்கள் எடுத்து பேஸ்புக்கில் “பாவம் பா எவ்வளவு கஷ்ட்டப்படுகிறார்கள்” என்று போட்டு விட்டால் அடுத்த ஒரு ஆண்டுக்கு உலகின் வறுமையைப் பற்றிய குற்றவுணர்வு இல்லாமல் நுகர்வு கலாச்சாரத்தில் திளைக்கலாம்.
படித்த நகர்ப்புற இந்தியர்கள் இத்தகைய சுற்றுலாக்கள் இந்தியாவின் அவமானத்தை விற்று காசு சம்பாதிப்பதாக கருதுகிறார்களாம். இந்திய வரலாறு, சமூகம், கலாச்சாரம் போன்றவை மேற்கத்திய ஊடகங்களில் சரியாக காட்டப்பட வேண்டும் என்று அவர்கள் அக்கறையாக இருக்கிறார்கள். ‘சேரிகளில் மக்கள் சேற்றிலும் சகதியிலும் உழன்றாலும் பரவாயில்லை, பாரதத் தாயின் இமேஜ் பளபளப்பாக அழுக்கு படாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்’ என்கிறார்கள் அவர்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக