இந்த மாதம் 23-ம் தேதி “ஹீரோயின்” எனும் இந்திப் படம் வெளியாகப் போகிறது. ஒரு இந்தி சினிமாவின் வரவு மாபெரும் விளம்பரப்
படையெடுப்பாக மாற்றப்பட்டிருக்கிறது. முக்கியமாக விளம்பரங்களை தவிர்க்கும்
உரிமை பார்வையாளருக்கு இனி இல்லை. கதைக்காக ஓடும் சினிமாக்கள் போய்
விளம்பரங்களுக்காக ஓட்டப்படும் சினிமா
பொதுவாக தியேட்டரில் படம் ஆரம்பிப்பதற்கு முன்னாலும் இடைவேளையிலும்
நிறைய விளம்பரங்கள் போடுவார்கள். பலர் அந்த நேரத்தில் வெளியே தம் அடிக்க
போய் விடுவாரக்ள, அல்லது பக்கத்தில இருப்பவர்களோடு அரட்டை அடிப்பார்கள்.
தொலைக்காட்சி பார்க்கும் போது விளம்பர இடைவேளையில் சமையல் வேலையை தொடர்வது,
கழிப்பறை போவது, என்று அவரவர் சொந்த வேலையை பார்க்க போய் விடுகிறோம். இது
விளம்பரம் கொடுக்கின்ற முதலாளிகளுக்கு கடுப்பை ஏற்படுத்துகிறது. விளம்பரம் போடும் முதலாளிகள் பட முதலாளிகளோடு சேர்ந்து ஒரே கல்லில் இரண்டு மாங்காய்கள் அடிக்க போட்ட திட்டம்தான் கதையோடு விளம்பரப் பொருளை இணைப்பது. ‘படத்தின் கதையோடு சேர்த்து என் பொருளை காட்ட வேண்டும்’ என்று ஒரு தொகையை கொடுத்து விளம்பர முதலாளி சினிமா முதலாளியுடன் ஒரு ஒப்பந்தம் போட்டுக் கொள்கிறார்.
ரூம் போட்டு கதை விவாதம் நடக்கும் போதே விளம்பர ஆட்களும் கூட உட்கார்ந்து விடுகிறார்கள். ‘விற்க வேண்டிய பொருளை கதையோடு இணைத்து, கதையை நகர்த்திக் கொண்டு போவதே அதுதான்’ என்கிற வகையில் கதையை உருவாக்குகிறார்கள்.
காசு கொடுத்து டிக்கெட் வாங்கி படத்துக்குப் போகிறவர்களுக்கு விளம்பரப் பொருளை பிரபலப்படுத்துவதற்காக உருவாக்கப்பட்ட படத்தை காட்டுவதுதான் முதலாளிகளின் சாமர்த்தியம்.
தமிழில் கோவில் திரைப்படத்தில் டி.ஐ நிறுவனத்தின் சைக்கிள் விற்பனையை அதிகரிப்பதற்கான காட்சிகள் திட்டமிடப்பட்டிருந்தன. கொல வெறிடி பாடல் காட்சிகளில் இமாமியின் நவரத்னா தலைமுடி எண்ணெய், ஆடி கார், செல்போன் நிறுவனம் ஏர்செல், வசந்த் அன்ட் கோ போன்ற பல பிராண்டுகள் காசு கொடுத்து இடம் பிடித்தன. சந்திரமுகி படத்தில் கங்குலியை காட்டும் டாடா இண்டிகாம் போர்டு, சச்சின் படத்தில் விஜய், ‘அட, இது நம்ம பிஸ்கட்’ன்னு சொல்வது இதெல்லாம் அந்தந்த நிறுவனங்கள் காசு கொடுத்து ஏற்பாடு செய்து கொண்டவை.
ஆங்கிலத் திரைப்படங்களில் ‘ஈ.டி. தி எக்ஸ்ட்ரா டெரஸ்டிரியல்’ படத்தில் ரீஸ் பீசஸ் என்ற மிட்டாய் பிராண்ட், ‘பேக் டு தி பியூச்சர்’ படத்தில் பெப்ஸி பிராண்ட், மைனாரிட்டி ரிப்போர்ட் திரைப்படத்தில் எதிர்கால விளம்பரங்களை காட்டுவது போன்றவை புகழ் பெற்ற உதாரணங்கள்.
இவைகளை பார்க்கவும்ஹீரோயின் படத்தை எடுப்பது நாயகியரை மையமாக வைத்து படம் எடுக்கும் இயக்குனர் என்று பெயர் பெற்ற மாதுர் பண்டார்கர். நாயகியாக வருபவர் பழம் பெரும் நடிகர் ராஜ் கபூரின் பேத்தி, முன்னாள் நடிகர் ரிஷி கபூரின் மருமகள், கடந்த பத்து ஆண்டுகளாக பாலிவுட்டின் விற்பனைப் பொருளாக பயன்படுத்தப்படும் கரீனா கபூர். இந்தப் படத்தில எட்டு நிறுவனங்கள் பொருட்களை விளம்பரப்படுத்த ஒப்பந்தம் போட்டிருக்கின்றன.
‘இது வரை ரஜினிகாந்த், சாரூக்கான், அமீர்கான் போன்ற பெரிய நடிகர்கள் படங்களில் மட்டும்தான் இது போன்ற ஒப்பந்தங்கள் போட்டார்கள். முதன் முதலில் ஒரு நாயகியின் மைய படத்துக்கு எட்டு பிராண்டுகள் ஒப்பந்தம் போட்டிருக்கின்றன’ என்று பத்திரிகைகள் முழங்குகின்றன. ‘எது பரபரப்பாக ஆகப் போகிறது என்பதைத்தான் விளம்பர நிறுவனங்கள் தேடுகின்றன. இது மாதுர் பண்டார்கர் படம் என்பதால் அவர்கள் வந்து சேர்ந்து கொண்டார்கள்’ என்று பூரிக்கிறார் கரீனா கபூர்.
என்னென்ன பிராண்டுகள் இந்த படத்துடன் சேர்ந்திருக்கின்றன என்ற பட்டியலை பார்த்தால் செரா என்ற கக்கூஸ் பீங்கான் செய்து விற்கும் நிறுவனமும் இருக்கிறது. ‘அதை திரைப்படத்தில் எப்படிக் காட்டியிருக்கிறார்கள்’ என்று கேட்டால் கக்கூசையே காட்டலையாம், படத்தின் நாயகி செரா விற்பனை கடையை திறந்து வைப்பது போல காட்சி அமைத்திருக்கிறார்களாம்.
கரீனா கபூர் ஏற்கனவே விளம்பரம் செய்யும், பெண்களில் அழகை உருவாக்கும் கம்பெனி லக்மே, ஜெலஸ்21 என்ற பெண்களுக்கான ஆடை பிராண்ட், பெரிய பணக்காரர்களுக்கு ஆடம்பர வீடு கட்டித் தரும் மோனார்க் யூனிவர்சல், முடியை பறக்கச் செய்யும் ஹெட்&ஷோல்டர் ஷாம்பூ இவற்றுக்கு முன்னுரிமை கொடுத்து சேர்த்துக் கொண்டிருக்கிறார்கள். கூடவே சர்க்கரை வியாதிக்காரர்கள் இனிப்புக்காக பயன்படுத்தும் சுகர் பிரீ மாத்திரை, ஒரு பன்-காபி குடிக்க போனாலே ஆயிரம் ரூபா வரை தேட்டையை போட்டு விடும் சாக்கோபெரி என்ற மேல் தட்டு டீக்கடை போன்றவர்களும் கூட்டு சேர்ந்திருக்கிறார்கள்.
‘இப்போதைய பெண்கள் எதைப் பார்த்து டிரெஸ்
வாங்குகிறார்கள், சினிமா கதாநாயகியை பார்த்துதான். அதனால கரீனா கபூர்
நடிக்கிற இந்த படத்துல பணத்தை போடுவது எங்களுக்கு நல்ல ஆதாயம் தரும்’ என்று
நம்புகிறார் இண்டஸ் குளோத்திங் முதலாளி ரச்னா அகர்வால்.
இந்த படத்தில் இடம் பிடிக்க கிட்டத்தட்ட இரண்டு கோடி ரூபாய்
செலவழிக்கிறது இண்டஸ். ‘இந்த ஆண்டு துணி விற்று வரும் வருமானம் ரூ 100
கோடியாக உயர வேண்டும்’ என்பது அவர்களின் இலக்கு. ஹீரோயின் படத்தை
பார்க்கின்ற பெண்கள் எல்லாம் அதே டிரெஸ் வாங்கிக் குவித்தால் ரூ 100 கோடி
என்ன ரூ 1000 கோடி வருமானத்தைக் கூட தொட்டு விடலாம்.- இந்த பற்பசை உபயோகப்படுத்தினால்தான் காதல் கை கூடும்
- இன்ன ஷாம்பூ போட்டாத்தான் வேலை கெடைக்கும்
- இன்ன மேகக் அப் போட்டாதான் கல்யாணம் ஆகும்
- இன்ன கக்கூஸ் வச்சிருந்தாத்தான் வீட்டுக்குள்ள லச்சுமி வருவாள்
ஒரு திரைப்படத்துக்கான தொலைக்காட்சி உரிமையை சன் டிவி வாங்கியிருந்தால், அல்லது வினியோக உரிமையை மாறன் சகோதரர்கள் வாங்கியிருந்தால் திரைப்படத்தில் தொலைக்காட்சி பார்ப்பதாக வரும் நிகழ்ச்சிகளில் சன் குழு தொலைக்காட்சிகள் காட்டப்படும். எதிர்காலத்தில் எஸ்ஆர்எம்மின் பாரி வேந்தர் குழுமம் காசு கொடுத்து ஆதரிக்கும் படத்தில் புதிய தலைமுறை சேனலை பார்ப்பது போல் கண்டிப்பாய் ஒரு காட்சி இருக்கும்.
பொதுவாக ‘இன்னார் நடித்த படம், இன்னார் எடுத்த படம்’ என்று படம் பார்க்கப் போவோம், அல்லது ‘படத்தின் கதை நன்றாக இருக்கிறது, சண்டை சீன்கள் அனல் பறக்கின்றன, வடிவேலு காமெடி சூப்பர்’ என்று கேள்விப்பட்டு போவோம். படம் எடுக்கும் முதலாளிகளுக்கும் அதில் விளம்பரம் செய்ய ஒப்பந்தம் போட்டுக் கொண்ட விளம்பர முதலாளிகளுக்கும் இது மட்டும் போதாது. ‘படம் ஓடவில்லை என்றால் என்ன செய்வது’ என்று படத்தை ஓட வைக்கவும் கடுமையாக உழைக்கிறார்கள்.
ஹீரோயின் படம் வெளியாகும் நேரத்தில் இண்டஸ் குளோத்திங் அந்த படத்தில் நாயகி போடும் ஆடைகளை எல்லாம் வைத்து ஒரு பேஷன் ஷோ நடத்த போகிறார்கள், அதாவது நிறைய பெண்களை முடிந்த அளவு குறைந்த அளவு டிரெஸ் போட்டுக் கொண்டு மேடையில் நடக்க விடுவார்கள். அதன் மூலமாக ஜெலஸ்21ம், ஹீரோயினும் அன்றைய பத்திரிகைச் செய்திகளிலும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் இடம் பிடித்து விடும்.
ஹீரோயின் என்ற பிராண்டில் புதிய மேக்அப் பொருட்களை அறிமுகப்படுத்தப் போகிறது லக்மே. இப்படி ஒரு இந்தி சினிமாவின் வரவு மாபெரும் விளம்பரப் படையெடுப்பாக மாற்றப்பட்டிருக்கிறது. முக்கியமாக விளம்பரங்களை தவிர்க்கும் உரிமை பார்வையாளருக்கு இனி இல்லை. கதைக்காக ஓடும் சினிமாக்கள் போய் விளம்பரங்களுக்காக ஓட்டப்படும் சினிமா என்ற இந்த பரிமாண வளர்ச்சியில் நாம் வெறும் நுகர்வு எந்திரங்களாகத்தான் கருதப்படுகிறோம் என்பது எத்தனை பேருக்குத் தெரியும்?
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக