திங்கள், 3 செப்டம்பர், 2012

எது நான்காவது தூண்? ரத்தக்கறை, கொலை, கொள்ளை, கற்பழிப்பு?


இன்றைய பத்திரிகை உலகை நான்காவது தூண் என்று அழைக்கமுடியுமா? அதற்கான தகுதியோடுதான் பத்திரிக்கைகளும் பத்திரிக்கை ஆசிரியர்களும் பத்திரிக்கை நிருபர்களும் செயல்படுகின்றனரா? தங்கள் பணியை நேர்மையோடும், தர்மத்தோடும், தைரியத்தோடும் செய்கிறார்களா? இவர்கள் தங்களை என்றேனும் சுய பரிசோதனை செய்துகொண்டிருக்கிறார்களா?
 கிட்டத்திட்ட எல்லாப் பத்திரிக்கைகளும் அரசியல் கட்சியைப் போல ஒரு கொள்கை வைத்துக் கொண்டு அதனடிப்படையில் மட்டுமே இயங்கி வருகின்றன. உதாரணத்துக்கு, பத்திரிகைகளில் இடம்பெறும் பேட்டிகளை எடுத்துக்கொள்ளுங்கள். எந்த மாதிரியான கேள்விகளை அரசியல் தலைவர்களிடம் கேட்க வேண்டும் என்பதற்குப் பதில் எதையெல்லாம் கேட்கக்கூடாது என்பதில்தான் அந்தப் பத்திரிகை கவனமாக இருக்கும். நெற்றியில் அடித்தாற்போன்ற கேள்விகள் கேட்கப்படுவதில்லை. நேரடியான ஒரு கேள்வியைப் பத்திரிக்கை நிருபர் முன் வைக்கிறார். பதில் மழுப்பலாக வருகிறது அல்லது பொதுப்படையான அரசியல் மொழியில் வருகிறது. அதற்குப் பிறகு அதைத் தொடுத்து, அது சார்ந்த பல கேள்விகளை பத்திரிக்கை நிருபர்களால் முன்வைக்க முடியும்.
 
அது போன்ற கேள்விகள் கேட்கப்படும் போது மட்டுமே, அரசியல் கட்சிகளுக்கும் பேட்டி அளிப்பவருக்கும் ஒரு சவாலாகவும், மக்களுக்கு  அவர்களின் நிலைப்பாடு குறித்தும் அறிய இயலும். ஆனால் ஒரு நேரடிக் கேள்விக்கு வருகிற மழுப்பலான பதிலோடு அடுத்த கேள்விக்கு நிருபர் தாவிவிடுகிறார். உதாரணத்துக்கு, தேர்தல் உடன்பாடு குறித்து ஒரு கேள்வி எழுப்பப்படுகிறது என்று வைத்துக் கொள்வோம்.
 
கேள்வி:  நீங்கள் இதுவரை அந்தக் கட்சியோடுதான் கூட்டணி உறவு வைத்திருந்தீர்கள்? இப்பொழுது இந்தக் கட்சியோடு கூட்டணி சேர்வது சரி என்று நினைக்கிறீர்களா?
பதில்: அரசியலில் நிரந்தர நண்பனும் இல்லை. நிரந்தரப் பகைவனும் இல்லை. (பொதுப்படையான தெளிந்த அரசியல் பதில்.)
 
அடுத்த கேள்வியாக நாம் எதிர்ப்பார்ப்பது இதைத்தான்.
கேள்வி: ஆனால் கடந்த முறை பேசும்போது, இனிமேல் இந்தக் கட்சியுடன் கூட்டணி வைக்க மாட்டோம். அப்படி வைத்தால் அது எங்கள் மானத்தை அடகு வைக்க சமம் என்று குறிப்பிட்டீர்கள். இப்போது எந்த அடிப்படையில் கூட்டணியை மாற்றுகிறீர்கள்? மக்கள் இதனை ஏற்றுக்கொள்வார்களா? ஆகையால் எப்படி இம்முறை நீங்கள் இந்தக் கட்சியுடன் கூட்டணி வைப்பீர்கள்? மக்கள் ஏற்றுக் கொள்வார்களா? அல்லது மக்கள் மறந்து விடுவார்கள் என்கிற உங்கள் நம்பிக்கையா?
 
இப்படிப்பட்ட நேரடிக் கேள்விகளைக் கேட்க பத்திரிக்கை நிருபர்களிடம் துணிவில்லையா? அல்லது இது போன்ற கேள்விகளை அரசியல்வாதிகள் அனுமதிக்கவில்லையா? அரசியல்வாதிகள் அனுமதிக்கவில்லை எனில், இன்னாரிடம் இக்கேள்வி நமது பத்திரிக்கை நிருபரால் கேட்கப்பட்டது ஆனால் பதில் அளிக்க இன்னார் முன் வரவில்லை என்று நேர்மையோடு எழுதும் துணிச்சல் அவர்களுக்கு இருக்கிறதா
 
எல்லாத் தரப்பு பிரச்னைகள் குறித்தும் கேள்விகள் எழுப்பப்பட்டது, குறிப்பிட்ட அரசியல்வாதி பொறுமையாக அனைத்துக்கும் பதில் அளித்துள்ளார் என்று  ஆரம்ப வரிகளில்  சொல்லி விட்டு, நுனிப் புல் போல ஒவ்வொரு விடயம் குறித்தும் ஒரு கேள்வியை மட்டும் கேட்டு நிறுத்தி விடுகிறார்கள் பத்திரிக்கை நிருபர்கள்.
 
நடுநிலை பத்திரிகை என்று தம்மைத் தாமே அவர்கள் சொல்லிக் கொண்டாலும் ஒரு அரசியல் கட்சியின் கூட்டணி போலல்லவா பெரும்பாலான பத்திரிகைகள் செயல்படுகின்றன?
பத்திரிக்கைத் தொழில் என்பது கல்வி, மருத்துவம் போல வெறும் வியாபாரம்தான் என்று சொல்ல வருகிறீர்களா? அப்படி நீங்கள் சொல்லிக் கொள்வீர்களேயானால் நடுநிலை என்ற அடைமொழியைக் கொண்டாட உங்களுக்கு எந்த உரிமையும் இல்லை.
 
புதிய பத்திரிகைகள், புதிய சானல்கள் என்று ஊடகத்துறையின் வீச்சு அதிகரித்துவிட்டாலும், எது உண்மை, யார் சொல்வது சரி என்னும் அடிப்படையையே புரிந்துகொள்ளமுடியாதவாறு பொதுமக்கள் இருக்கிறார்கள் என்பதுதான் உண்மை. அரசியல், சமூகம் உள்ளிட்ட விஷயங்கள் பற்றிய செய்திகளில் இருந்து எதையும் நம்மால் தெரிந்துகொள்ளமுடியவில்லை. உதாரணத்துக்கு, தேர்தல் குறித்த கருத்துக் கணிப்பு முடிவுகளிலும் தேர்தல் குறித்த செய்திகளிலும் ஊடகங்களின் நிலை மெச்சத்தக்கதாக இல்லை.
 
மற்றபடி நாம் தினமும் சுவாரஸ்யமான செய்திகளை நிறையவே படிக்கிறோம். அலுவலகங்களில் உணவு இடைவேளையின் போது அவை குறித்து பேசுகிறோம். அடுத்த நாள் அதைவிட கவர்ச்சியான செய்தி வந்துவிட்டால் அதைப்பற்றிப் பேசுகிறோம். பத்திரிக்கைகள் பெரும்பாலும் கற்பழிப்பு, கொலை, கொள்ளை செய்திகளை வெளியிடும் போது அது நம்மை எளிதாக ஆக்கிரமித்துவிடுகிறது. நாம் எதைப் பற்றிப் பேச வேண்டும் என்பதையும் பத்திரிக்கைகளே தீர்மானித்து விடுகின்றன. 
 
ஒரு சாமியார் குறித்த காம லீலைகள் தொடராக வெளிவருகிறது. ஒரு நடிகையின் கண்ணீர்க் கதை, இது ஒரு நிஜக் கதை போன்ற கவர்ச்சி தலைப்புகளுடன் பல தொடர்கள் நம்மை தாக்குகின்றன.
உதாரணத்துக்கு இப்படியொரு செய்தி. ’22 வயதான இளம்பெண் லக்ஷ்மி (பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது), நான்கு ஆண் காமுகர்களை வன்மமான முறையில் கொலை செய்துள்ளார். மூன்று கொலைகளின்போது சிக்காமல் இருந்தவர் இன்று கைது.’
 
பெயர் மாற்றப்பட்டுள்ளது என்று குறிப்பிட்டுவிட்டு, கவர்ச்சிவாத நோக்கில் ஒரு செய்தியை மாற்றியமைக்கும் வேலையைத்தான் பத்திரிகைகள் செய்து வருகின்றன.
ஒரு விபத்தைப் பற்றிய செய்திக்குக்கூட பல படங்களை வெளியிட்டு படிப்பவர்களின் மனதைப் பதைபதைக்கச் செய்கிறார்கள். ரத்தக்கறையோ, கொலை, கொள்ளை, கற்பழிப்பு  இல்லாத செய்திகளையோ தினப் பத்திரிக்கைகளில் நீங்கள் இன்று பார்க்க முடியுமா? செய்திகளை அளிப்பதில் தவறில்லை, ஆனால் அது எவ்வாறு அளிக்கப்படுகிறது என்பதுதான் பிரச்னை.
தொலைக்காட்சி சானல்கள் டிஆர்பி ரேட்டிங் உயர்வதற்காக, நாடகங்களைப் போல, ரியாலிட்டி ஷோக்களைப் போல ஒரு சிறிய விஷயத்தையும் பெரிதாக்கி ஒளிபரப்புகின்றன.
 
மீடியாவை கட்டுப்படுத்தலாமா? என்ற கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ளது போல, அசலான செய்திகளை அளிப்பதில் அல்ல மறைப்பதில்தான் இன்றைய மீடியா முனைப்புடன் இருக்கிறது.
 
பத்திரிக்கை சுதந்தரம் என்ற பெயரில் வியாபார நோக்கில் செய்திகளை வழங்கிக்கொண்டிருக்கிறது நான்காவது தூண். அந்தப் பெயருக்கான அர்த்தத்தையே பெரும்பாலான பத்திரிகைகள் இழந்துவிட்டன.நேர்மையான சுயபரிசோதனையை ஊடகத்துறை மேற்கொள்ளவேண்டிய தருணம் இது.
0
லஷ்மண பெருமாள்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக