திங்கள், 3 செப்டம்பர், 2012

எப்படி ஜெயித்தது அல்-ஜசீரா டி.வி. சேனல்-1: பின்-லேடன் பேட்டி


Viru News
நவம்பர் 1-ம் தேதி 1996-ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட அல்-ஜசீரா டி.வி. சேனல், கத்தாரிலும், வேறு சில அரபு நாடுகளிலும் மட்டுமே அறியப்பட்டு இருந்த காலமும் உண்டு. ஆரம்பத்தில் அரபு மொழி ஒளிபரப்பு மாத்திரமே செய்யப்பட்டும் வந்தது.
அப்படியிருந்த சேனல், இன்று பிரிட்டனில் பி.பி.சி.-க்கும், சேனல்-4க்கும், அமெரிக்காவில் சி.என்.என். மற்றும் ஃபாக்ஸ் நியூஸ் போன்ற மெகா சேனல்களுக்கும் சவால் விடும் வகையில் வளர்ந்தது எப்படி என்று தெரியுமா?
“ஆப்கானிஸ்தான் யுத்தம் அல்-ஜசீரா சேனலை உலகெங்கும் பிரபலமாக்கியது” என்ற சிம்பிள் பதில் ஒன்று சொல்வார்கள். அது முழுமையான உண்மையல்ல.
ராணுவத்தின் பீரங்கிக் குண்டுகளுக்கு மத்தியிலும், அரசாங்கங்களின் அதிர்வேட்டுகளுக்கு மத்தியிலும் அல்-ஜசீரா, கேமராவை தூக்கிக் கொண்டு ஓடி ஜெயித்த கதை தெரிய வேண்டுமா? மீடியா உலகில் இந்த தலைமுறையின் மகத்தான வெற்றிக் கதை, அல்-ஜசீராதான்!
வேறு எந்த மீடியாவும் இவர்களை போல வளரவில்லை. வளர்ச்சிக்காக போராடவும் இல்லை.

அரபு நாடுகளுக்குள் அறியப்பட்ட அல்-ஜசீரா சேனலின் திருப்பு முனை எது? எப்போது அவர்களது அரேபிய கதை, அகில உலக கதையாக மாறியது?
1998-ல்! அப்போதுதான், ஒசாமா பின்லேடனின் பிரத்தியேக பேட்டியை ஒளிபரப்பப் போவதாக அல்-ஜசீரா விளம்பரம் செய்தது.
கத்தார் நாட்டில் இருந்து இயங்கிய அல்-ஜசீராவின் இந்த விளம்பரத்துக்கு கடும் எதிர்ப்பு! பக்கத்து நாடுகளான பஹ்ரேன், குவைத், சௌதி அரேபியா ஆகிய நாடுகள் எதிர்ப்புத் தெரிவித்தன.
அந்தவேளையில், மத்திய கிழக்குப் பகுதிகளில் ஓசாமா பிரபலமானவராக இருந்தார்.  சாதாரண மக்களுக்கு ஒசாமா ஒரு ஹீரோவாக இருந்தார். ஆனால், மேற்கத்திய நாடுகளில் பொதுமக்கள் இவரைப் பற்றி அவ்வளவாக அறிந்திருக்கவில்லை.
1998 மார்ச்சில் லிபியா நாடு முதன்முறையாக ஒசாமாவுக்கு எதிராக ‘இன்டர்போல்’ மூலமாக கைது வாரண்ட் பிறப்பித்தது. பின்னர் கென்ய மற்றும் டான்சானியாவில் உள்ள அமெரிக்கத் தூதரகங்களை குண்டுவைத்து ஒசாமா தகர்க்க அதில் ஏராளமானோர் கொல்லப்பட்டனர். இதையடுத்து உலகம் முழுவதும் தேடப்படும் மனிதராக மாறினார்.
சௌதி அரேபியாவில் ஒசாமாவின் பேச்சுகள் அடங்கிய பிரசுரங்களை வைத்திருந்தால் 6 மாதம் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. ஆக மக்கள் மத்தியில் ஆதரவும், அரசாங்கங்கள் எதிர்க்கும் நபராக இருந்தார் ஒசாமா.
ஒசாமாவின் பேட்டி ஒளிபரப்பப்படுவதற்கு முன்பாக அமெரிக்க உளவுத்துறை எப்.பி.ஐ. தேடப்படும்

பத்து நபர்களில் ஒருவராக ஒசாமாவை அறிவித்தது. அவரைப்பற்றி தகவல் தந்தால் 5 மில்லியன் டொலர் வழங்கப்படும் எனக்கூற, அல்-ஜசீராவின் பேட்டியை பார்க்க அரபு நாடுகளில் ஆர்வம் பற்றிக்கொண்டது.
இப்படிப்பட்ட சூழலில் 1998-ல் ஒசாமாவின் பதிவு செய்யப்பட்ட பேட்டி அல்-ஜசீராவில் ஒளிபரப்பானது.
அதில் அமெரிக்கா, பிரித்தானிய நாடுகளின் யூதர்களைக் கொன்று குவிக்கும்படி இஸ்லாமியர்களுக்கு அழைப்பு விடுத்தார் ஒசமா. இதற்கு முன் அமெரிக்காவின் ஏ.பி.சி. தொலைக்காட்சி ஒசாமாவின் பேட்டியை ஒளிபரப்பி உள்ளது. ஆனாலும், அல்-ஜசீராதான் இவரது பேட்டியை ஒளிபரப்பிய முதலாவது அரேபிய தொலைக்காட்சி.
90 நிமிடங்கள் ஒளிபரப்பான அந்த பேட்டியின்போது மக்கள் இருக்கையில் இருந்து நகரவில்லை. ராணுவ உடையில் தோன்றிய ஒசாமா, அமெரிக்காவுக்கு எதிராகப் புனிதப்போரை அறிவித்தார்.
பதிவு செய்யப்பட்டு ஒளிபரப்பான இந்தப் பேட்டி, சௌதி அரேபியா மற்றும் குவைத் ஆகிய நாடுகளில் பீதியைக் கிளப்பியது. அல்-ஜசீரா இந்தப் பேட்டியை ஒளிபரப்பியது மன்னிக்க முடியாத குற்றமாக இந்த இரு நாடுகளும் கருதின.
ஏற்கெனவே, சௌதியில் பணியாற்றிய அல்-ஜசீரா செய்தியாளர்களுக்கு ஏகப்பட்ட சிக்கல்கள் இருந்தன. தற்போது ஒசாமாவின் பேட்டி ஒளிபரப்பாக, அல்-ஜசீராவை முற்றிலுமாக தடுக்க சௌதி அரசு முடிவு செய்தது.
ஆனால் அல்-ஜசீராவை முற்றிலுமாக தடுக்க சௌதி அரசு, பின்-லேடனின் பேட்டி ஒளிபரப்பானதை காரணமாக காட்டவில்லை. அல்-ஜசீரா தனது நாட்டின் உள்விவகாரங்களில் தலையிடுவதாகக் குற்றம்சாட்டியது. இதற்கு சில அரசியல் காரணங்கள் இருந்தன. அதற்குள் நாம் போக வேண்டாம்.
அல்-ஜசீராவுக்காக பணியாற்றிய சௌதி அரேபியாவை சேர்ந்த பத்திரிகையாளர் ஒருவரை பதவி விலகும்படி வலியுறுத்தியது. சௌதி பத்திரிகைகள் அல்-ஜசீராவின் ஊழியர்களை பேட்டி எடுக்கத் தடை விதிக்கப்பட்டது. அல்-ஜசீரா நிருபர்கள் ஹஜ் புனித யாத்திரையைக்கூட பதிவு செய்ய அனுமதி மறுக்கப்பட்டது. சௌதியில் ஹோட்டல் மற்றும் பொது இடங்களில் அல்-ஜசீரா தொலைக்காட்சியைப் பார்ப்பதற்கு தடைவிதிக்கப்பட்டது.
சௌதியோடு ஒப்பிடுகையில் குவைத் நாட்டில் ஒசாமா பேட்டியை ஒளிபரப்பியதற்காக அல்-ஜசீராவுக்கு குறைந்த அளவே சிக்கல் ஏற்பட்டது.
ஆனால் அல்-ஜசீராவில் ஒளிபரப்பாகிய, ‘மதம் மற்றும் வாழ்க்கை’ என்ற நிகழ்ச்சி குவைத்தை ஆத்திரமடைய வைத்தது. ‘மதம் மற்றும் வாழ்க்கை’ நிகழ்ச்சி ஒரு டாக்-ஷோ. போனில் தொடர்பு கொண்டு கருத்து கூறும் நிகழ்ச்சி. அரபு பெண்களின் உரிமை பற்றி அதிகம் பேசப்பட்ட நிகழ்ச்சி அது.
குவைத்தில் இருந்த அல்-ஜசீரா அலுவலகத்தை, தமது விசாரணை முடியும்வரை தற்காலிகமாக மூடும்படி, குவைத் அரசு உத்தரவு பிறப்பித்தது.
குவைத் அரசின் ஆத்திரத்துக்கு காரணம், இந்த நிகழ்ச்சியின்போது நார்வேயிலிருந்து பேசிய ஈராக்கை சேர்ந்த ஒருவர், குவைத் அரசாங்கத்தைப் பற்றி கடுமையாக விமர்சித்திருந்தார்.
இது தொடர்பில் விளக்கம் அளித்த அல்-ஜசீரா, குறிப்பிட்ட நிகழ்ச்சி நேரடி ஒளிபரப்பு என்பதால்
 நார்வேயில் இருந்து பேசிய நபர் குவைத் அரசை விமர்சிக்கும்போது, தம்மால் எதுவும் செய்ய முடியவில்லை என்று கூறியது.
ஆனால், இந்த விளக்கத்தை ஏற்றுக் கொள்ளவில்லை குவைத்.
குவைத் நாட்டின் தகவல் தொடர்பு அமைச்சர், அல்-ஜசீராவின் தலைமையகம் அமைந்துள்ள கத்தார் சென்று, நேரடியாக குவைத் அரசின் எதிர்ப்பைத் தெரிவித்தார்.
அதற்கு கத்தார் எமீர், “அல்-ஜசீரா சுதந்திரமான டி.வி. சேனல். இதில் அரசாங்கம் தலையிட முடியாது” என்று கூறிவிட்டார்.
இறுதியில், அல்-ஜசீரா லோக்கல் செய்தியாளர் ஒருவரின் அங்கீகாரத்தை ரத்துச் செய்த குவைத் அரசு, அல்-ஜசீரா அலுவலகத்தை நிரந்தரமாக மூடும்படி உத்தரவிட்டது. ஒரு மாதத்திற்குப் பிறகு கோபம் தணிந்த குவைத் அரசு, தடையை ஒரு வழியாக நீக்கியது.
சௌதி, குவைத் தவிர வேறு சில நாடுகளும் ஆரம்ப காலத்தில் அல்-ஜசீராவுக்கு எதிர்ப்புத் தெரிவித்தன. ஒவ்வொரு நாடு ஒவ்வொரு காரணம் கூறியது. ஒரு நாடு, அல்-ஜசீரா சதாம் ஹூசேனுடன் தொடர்பு வைத்திருப்பதாக கூறியது. மற்றொரு நாடு, அல்-ஜசீரா ஒசாமா பின்லேடன் உடனும், இதர இஸ்லாமிய தீவிரவாதிகளுடனும் நெருக்கமாக உள்ளது என குற்றம்சாட்டியது. இன்னொரு நாடோ இதற்கு தலைகீழாக, அல்-ஜசீரா இஸ்ரேலுடன் ரகசிய டீல் வைத்திருக்கிறது என்றது.
ஒரு டி.வி. சேனலுக்கு, ஒரே நேரத்தில், பல நாடுகளில் இருந்து, வெவ்வேறு காரணங்களை காட்டி எதிர்ப்பு வந்தது, மீடியா உலகில் புதிதாக இருந்தது.
ஒளிபரப்பு செய்வதைவிட, எதிர்ப்புகளை சமாளிப்பதே அல்-ஜசீராவின் மிகப்பெரிய பணியாக இருந்தது.
தாம் பட்ட கஷ்டம் பற்றி பின்நாட்களில் கருத்து தெரிவித்த, அல்-ஜசீராவின் அரபு நியூஸ் டைரக்டர் முஸ்தாஃபா சௌவக், “கடவுளே ஏன் இப்படி முட்டாள்தனமாக புகார் சொல்கிறார்கள்? இஸ்ரேலியர்கள் எங்களை எங்களை தங்களுக்கு எதிரானவர்கள் என்றனர். மத சார்பற்றவர்கள் எங்களை இஸ்லாமியர்கள் என்று குற்றம் சாட்டினர்.
சில இஸ்லாமிய நாடுகள் எங்களை அமெரிக்க உளவுத்துறை சி.ஐ.ஏ.யின் பினாமி அமைப்பு என்று தவறாகச் சொன்னார்கள்; இன்னும் சிலர் ஒசாமா பின்லேடனும், சதாம் ஹூசேனும் எங்களுக்கு நிதி உதவி செய்வதாகச் சந்தேகித்தனர். இதெல்லாம் கேட்பதற்கே மிகவும் வேடிக்கையாக இல்லையா? ஒரு டி.வி. சேனல், எத்தனை நாடுகளின் கையாளாக இருக்க முடியும்?” என்றார்.
இவர் என்ன சொன்னாலும், பல நாடுகள் ஒரு டி.வி. சேனலை மிக சீரியஸாக எடுத்துக் கொண்ட ஆச்சரியம் அது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக