திங்கள், 24 செப்டம்பர், 2012

சமூகம் எங்களை ஒதுக்குகிறதே?மனித மலத்தை மனிதர்கள் அள்ளும் தொழிலாளிகள்!

மனித மலத்தை மனிதர்கள் அள்ளும் அவலத்தை தடை செய்ய அரசு நடிவடிக்கை எடுக்க வேண்டும் என்ற குரல் ஒலித்து வரும் நிலையில் நீயா நானா நிகழ்ச்சியில் பங்கேற்றுப் பேசிய துப்புறவு தொழிலாளர்கள், இன்றைக்கும் நாங்கள் ஒதுக்கப்பட்டவர்களாகத்தான் இருக்கிறோம் என்று ஆதங்கத்தோடு பேசினார்கள்.
நலிவடைந்த தொழில்கள், நவீனமடைந்த தொழில்களைப் பற்றி ஞாயிறன்று நீயா நானாவில் விவாதம் நடைபெற்றது.
முன்பெல்லாம் பன்னீர் சோடாவும், கலர்களும் ஆக்கிரமித்திருந்த பெட்டிக்கடைகளை இன்றைக்கு கூல்டிரிங்ஸ்கள் நிரப்பியிருக்கின்றன. குச்சி ஐஸ்களும், பால் ஐஸ்களும் சாப்பிட்டவர்கள் இன்றைக்கு ஐஸ் கிரீம் சாப்பிடுவதற்கு மாறியதால் ஐஸ் கம்பெனிகள் நலிவடைந்து விட்டன.
இதற்குக் கரணம் மாற்றம்தான். இன்றைக்கு இந்தியாவில் விவசாயம் தொடங்கி, மண்பாண்டத்தொழில், புகைப்படத்தொழில், ஒவியம், உள்ளிட்ட பல பாரம்பரிய தொழில் செய்யும் கலைஞர்கள் நலிவுற்ற நிலையில் இருக்கின்றனர்.

கணினி வந்த உடன் டைப்ரைட்டருக்கு வரவேற்பு குறைந்து போனது. டிஜிடல் ப்ளெக்ஸ் வந்த உடன் ஓவியக்கலைஞர்களுக்கு வாய்ப்பின்றி போனது என்று தங்களின் நிலையை பதிவு செய்தனர் நலிவடைந்த தொழில்களைப் பற்றி பேசியவர்கள்.
நவீனத் தொழிலைத் தொடங்கியவர்கள் எவ்வாறு தங்களில் தொழிலில் நவீனத்தை புகுத்தி வெற்றி பெற முடிந்தது என்று கூறினார். இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றுப் பேசிய சமூக ஆர்வலரும், எழுத்தாளருமான முத்துகிருஷ்ணன், மாற்றம் என்பது தவிர்க்க முடியாதது என்றார்.
தொழில் நலிவடைந்து போனவர்களுக்கு அவர்களின் மரபு சிதைகிற வலி இருக்கிறது. எனவே மரபார்ந்த தொழில்களை ஆவணப்படுத்த வேண்டும் என்று கூறினார். இத்தகைய தொழிலை செய்பவர்களுக்கு மானியம் கொடுத்து அரசாங்கம் பாதுகாக்கவேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார். மேலும் இன்னமும் சாதியின் அடிப்படையில் நம்மீது சுமத்தப்பட்டுள்ள இழிவான தொழில்களை விட்டுவிட்டு வெளியேற வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்தார்.
சவரத்தொழிலாளியின் பரம்பரை சவரத்தொழில்தான் செய்யவேண்டும், சலவைத்தொழிலாளியின் குடும்பம் பரம்பரையாக சலவைத்தொழில்தான் செய்யவேண்டும், துப்புறவு தொழிலாளர்களின் பிள்ளைகள் தொடர்ந்து அதே தொழிலை செய்யவேண்டும் என்ற நிலையை மாற்றவேண்டும் என்றும் தனது கருத்தை பதிவு செய்தார்.
இதனையடுத்து சாதீய ரீதியாக தொழிலைச் செய்து வரும் சில தொழிலாளர்கள் தங்களில் வலிகளை பதிவு செய்தனர். துப்புறவு தொழில் செய்யும் தங்களை இந்த சமூகம் ஒதுக்கித்தான் வைக்கிறது என்றும். மனிதக் கழிவுகளை அள்ளுவதால் நோய் தாக்கி நாங்கள் விரைவில் மரணமடைகிறோம் என்றும் அவர்கள் கூறியபோது அனைவரின் மனதும் ரணமானது.
நிகழ்ச்சியில் பங்கேற்றுப் பேசிய பெண் ஒருவர், "நாங்கள் கீழானவர்கள் என்பதால் எங்களை இந்த சமூகத்தில் ஒதுக்கிவைக்கின்றனர், நீங்க கூட எங்களை நிக்க வச்சுத்தானே கேட்கறீங்க" என்றார்.
உடனே பதறிப்போன கோபிநாத், நீங்க எனக்கு அக்கா மாதிரி என்று கூறி கட்டி அணைத்தார். கேமராவுக்கு நல்லா தெரியணும்கிறதுக்காக நாங்க நிற்க வைத்திருக்கிறோம் என்று கூறினார்.
செய்யும் தொழில் நம்மை உயர்த்தவேண்டும். ஆனால் ஒருவர் செய்யும் தொழில் வாழ்நாளை பாதியாக குறைக்கிறது என்பதுதான் வேதனையான விசயம். மனிதக்கழிவுகளை மனிதர்கள் அள்ளும் அவலத்திற்கு முடிவு ஏற்படவேண்டும் என்றும் அவர்கள் பதிவு செய்தனர்.
கல்விதான் அனைத்தையும் மாற்றும் என்பதற்காக எங்கள் சந்ததிகளை நன்றாக படிக்கவைத்திருக்கிறோம் என்றனர் அந்த தொழிலாளர்கள்.
நிகழ்ச்சியின் இறுதியில் பேசிய கோபிநாத், மரபார்ந்த அறிவும், நவீனமும் இணைந்து செயல்படவேண்டும் என்று கூறி ஐஸ்கம்பெனி அதிபருக்கும், நவீன டி சர்ட் வடிவமைப்பாளருக்கும் பரிசுகளை வழங்கினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக