திங்கள், 24 செப்டம்பர், 2012

சென்னை விநாயகர் சிலை மசூதி வழியாக ஊர்வலம். ராம.கோபாலன் அடாவடி

 சென்னையில் நேற்று நடந்த விநாயகர் சிலை ஊர்வலத்தின்பொது பொதுவாக அமைதி நிலவியது. இருப்பினும் தண்டையார்பேட்டை பகுதியில் நடந்த ஊர்வலத்தின்போது மசூதி உள்ளது. அந்த வழியாகத்தான் ஊர்வலம் நடக்க வேண்டும் என்று இந்து முன்னணி அமைப்பினர் வலியுறுத்தியதால் பிரச்சினை எழுந்தது. மோதல் வெடித்ததில் ஒருவரது மண்டை உடைந்து போனது.
இந்து முன்னணி சார்பில் விநாயகர் சதுர்த்தியையொட்டி சென்னை மாநகரில் உள்ள தெருமுனைகள், முக்கிய சந்திப்புகள் உள்பட பல்வேறு இடங்களில் விநாயகர் சிலைகள் அமைக்கப்பட்டன. 5-வது நாளான நேற்று, பூஜிக்கப்பட்ட விநாயகர் சிலைகள் அனைத்தும் பட்டினப்பாக்கம் கடற்கரையில் கரைக்க அறிவுறுத்தப்பட்டிருந்தது. இந்து முன்னணி சார்பில் திருவல்லிக்கேணி திருவெட்டீஸ்வரர் கோவில் முன்பு அமைக்கப்பட்டிருந்த விநாயகர் சிலை ஊர்வலத்தை இந்து முன்னணி நிறுவனர் ராம.கோபாலன் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
சென்னை மாநகரில் ஆவடி, பட்டாபிராம், திருநின்றவூர், தாம்பரம், பள்ளிக்கரணை, சோழிங்கநல்லூர், வேளச்சேரி மற்றும் திருவள்ளூர் மாவட்டத்தின் ஒரு சில பகுதிகளிலிருந்தும் விநாயகர் சிலைகள் மேள தாளங்கள் முழுங்க ஊர்வலமாக பட்டினப்பாக்கத்திற்கு கொண்டு செல்லப்பட்டன.

வழியில் பக்தர்கள் தேங்காய் உடைத்தும், கற்பூரம் காண்பித்தும் பூஜை செய்தனர். பட்டினப்பாக்கத்தில் தனியாருக்கான 110 டன் எடை தூக்கும் கிரேனும், சென்னை துறைமுகத்துக்குச் சொந்தமான 75 டன் எடைகளை தூக்கும் அளவிலான ஒரு கிரேன் உட்பட 2 கிரேன்கள் கடற்கரையில் நிறுத்தப்பட்டு இருந்தன.
பெரிய சிலைகள் கிரேன்கள் மூலம் தூக்கப்பட்டு கடலில் கரைக்கப்பட்டன. இப்படி ஒவ்வொரு சிலையாக கரைக்கும் பணி நள்ளிரவு வரை நடந்தது. இந்துமுன்னணி, பாரதீய ஜனதா கட்சி, விஸ்வ இந்து பரிஷத், இந்து மக்கள் கட்சி, பாரத இந்து முன்னணி, சிவசேனா, பாரத் மாதா, ருத்ரசேனா போன்ற அமைப்புகளை சேர்ந்தவர்களுடன், தனியார் சிலைகளும் கரைக்கப்பட்டன.
சென்னை தண்டையார்பேட்டை நேதாஜி நகரில் விநாயகர் ஊர்வலம் நடப்பதாக இருந்தது குறிப்பிட்ட பகுதியில் பிள்ளையார் ஊர்வலம் செல்வதை மற்றொரு பிரிவினர் தடுத்தனர். இதனால் நேற்று காலையில் இருந்தே நேதாஜி நகரில் இருந்து போலீஸ் குவிக்கப்பட்டிருந்தது.
கூடுதல் கமிஷனர் சஞ்சய் அரோரா இணை கமிஷனர் செந்தாமரை கண்ணன், துணைகமிஷனர்கள் அன்பு, மகேஷ்வரன்,லஷ்மி உள்ளிட்ட அதிகாரிகள் தலைமையில் 500க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர்.
நேதாஜி நகர் 1வது தெருவில் மசூதி உள்ளது. அந்த வழியாகத்தான் ஊர்வலம் நடக்க வேண்டும் என்று இந்து முன்னணி அமைப்பினர் வலியுறுத்தியதால் பிரச்சினை எழுந்தது. இந்த நிலையில், இதுதொடர்பாக மோதல் வெடித்தது. அப்போது இந்து முன்னணி பிரமுகர் ஜெகன் என்பவரின் மண்டை உடைந்து ரத்தம் கொட்டியது. இதனால் பெரும் பதட்டம் மூண்டது.
இதையடுத்து கூடுதலாக போலீஸார் வரவழைக்கப்பட்டனர். நூற்றுக்கணக்கில் போலீஸார் குவிக்கப்பட்ட பின்னர் 1வது தெருவில் வைக்கப்பட்டிருந்த 2 விநாயகர் சிலைகளை மட்டும் மசூதி வழியாக கொண்டு செல்வது என்றும் மற்ற சிலைகளை 2 மற்றும் 3வது தெரு வழியாக கொண்டு செல்வது என்றும் பேசி முடிக்கப்பட்டது. அதன் பின்னர் அமைதி திரும்பியது.
திருவல்லிக்கேணியில் வழக்கம் போல ராம. கோபாலன் கைது
திருவல்லிக்கேணியில் நடந்த விநாயகர் சிலை ஊர்வலத்தின்போது தடை செய்யப்பட்ட பகுதி வழியாக செல்ல இந்து முன்னணி அமைப்பாளர் ராம கோபாலன் உள்ளிட்டோர் முயன்றனர். ஆனால் அதை போலீஸார் அனுமதிக்கவில்லை. இதையடுத்து அவர்கள் தடையை மீற முயன்றபோது போலீஸார் அவர்களைத் தடுத்து கைது செய்து பின்னர் விடுவித்தனர்.
நேற்று சென்னையில் மட்டும் 5000க்கும் மேற்பட்ட சிறிய மற்றும் பெரிய அளவிலான விநாயகர் சிலைகள் கடலில் கரைக்கப்பட்டன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக