செவ்வாய், 4 செப்டம்பர், 2012

ஆண், பெண், குழந்தைகளுக்கு கல்வீசிய வீர வேங்கைகள்: “இதோ யுத்தம்!”

Viruvirupu
வேளாங்கண்ணியில் நடக்கும் தேவாலயப் பெருவிழாவிலும், தஞ்சை மாவட்டம் பூண்டி மாதா திருக்கோயில் விழாவிலும் பங்கேற்க வந்த இலங்கை சேர்ந்த நூற்றுக்கணக்கான சிங்கள ஆண்கள், பெண்கள், குழந்தைகளை, கல்லெறிந்து விரட்டியடித்தார்கள் தமிழ்த் தேசப் பொதுவுடமைக் கட்சி, நாம் தமிழர், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மறத் தமிழர்கள்.
நேற்று இலங்கையில் இருந்து திருச்சிக்கு விமானத்தில் பூண்டி மாதா ஆலயத்தை தரிசிக்க வந்த இவர்கள், பூண்டி மாதா ஆலயத்தில் உள்ள விடுதிகளில் தங்கி இருந்தனர். பூண்டி மாதா ஆலயத்தில் நடைபெற்று வரும் அன்னை மரியாள் பிறப்பு பெருவிழாவில் பங்கேற்கவே இவர்கள் வந்தனர்.
இதையடுத்து தமிழ் தேசப் பொதுவுடமைக் கட்சி, நாம் தமிழர், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியைச் சேர்ந்த சுமார் 100 பேர் பூண்டி மாதா திருக்கோயிலை முற்றுகையிட்டனர்.

இலங்கையில் யுத்தம் நடந்த நாட்களில், தமிழர் மானம் காக்க போர் புரிய வன்னிக்கு செல்ல தோள் தினவெடுத்த இந்த வேங்கைகளுக்கு அப்போது விசா கிடைக்கவில்லை.
அதனால் அந்த யுத்தத்துக்கு செல்லவில்லை. மாறாக, பூண்டி மாதா திருக்கோயிலை யுத்த களமாக்கிக் கொள்ள படையெடுத்த இந்த வீரர்களை, இங்கும் சரியான முறையில் யுத்தம் புரிய யாரும் விடவில்லை என்பதே சோகம். இருப்பினும் முற்றுகை தொடர்ந்தது.
இலங்கையில் பெண்கள், வயோதிபர்கள் குழந்தைகள் உள்பட தமிழர்கள்மீது தாக்குதல் நடத்தியது காட்டுமிராண்டித்தனம் என அறிக்கை விட்ட கட்சியினர், அன்னை மரியாள் பிறப்பு பெருவிழாவில் பங்கேற்க வந்த பெண்கள், வயோதிபர்கள் குழந்தைகள் உள்பட சிங்களவர்கள்மீது தாக்குதல் நடத்துவோம் என்று முற்றுகையிட்டதில், இன்று அதிகாலை 3 மணிக்கு பூண்டி மாதா ஆலயத்தில் தங்கியிருந்த 184 சிங்களர்களும் வேன்கள் மூலம் திருச்சி விமான நிலையத்திற்கு போலீஸ் பாதுகாப்போடு அழைத்துச் செல்லப்பட்டனர்.
திருச்சி விமான நிலையம் போகும் வழியில் காட்டூர் அருகில் சிலர், அந்த வேன்கள் மீது கல்வீசித் தாக்குதல் நடத்தினர். அதே போல திருச்சி பால்பண்ணை அருகே இலங்கை பக்தர்கள் வந்த வேன்களை வழிமறித்து மறியல் செய்ய முயன்ற சுமார் 60 பேரை போலீசார் கைது செய்தனர்.
இந் நிலையில் இன்று காலையும் இலங்கையில் இருந்து 134 சிங்கள பக்தர்கள் திருச்சி வந்தனர். தமிழகத்தில் உள்ள எதிர்ப்புகளை சுட்டிக்காட்டி, அவர்களை திருச்சி விமான நிலையத்தில் இருந்து வெளியேற விடாமல் போலீசார் தங்க வைத்தனர்.
தற்போது திருச்சி விமான நிலையத்தில் தங்க வைக்கப்பட்டிருப்பவர்களை தமது நாட்டுக்கு அழைத்துக் கொள்ள மிகின் லங்கா விமானம் ஒன்றை அனுப்பி வைக்கிறது இலங்கை அரசு.
இந்திய வெளியுறவுத்துறை குறிப்புகளின்படி, கொழும்புவில் உள்ள இந்திய தூதரகம் ஆண்டுக்கு சுமார் 2 லட்சம் பேருக்கு விசா வழங்குகிறது. இந்த 2 லட்சம் பேரில் பாதிக்குமேல், ஈழத் தமிழர்கள். மீதிதான் சிங்களவர்கள்.
தமிழகத்தில் இருந்து இலங்கை செல்லும் இந்தியப் பயணிகளின் எண்ணிக்கை 1.75 லட்சம்! இவர்களில் அநேகர் தமிழர்கள்.
இந்தியாவில் இருந்து செல்லும் தமிழர்கள் இலங்கையில் தரையிறங்குவது, சிங்களவர்கள் அதிகம் வசிக்கும் கொழும்பு நகரில்!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக