புதன், 12 செப்டம்பர், 2012

கூடங்குளம் போராட்டக்காரர்கள் பின்னணி விசாரிக்க வேண்டும்

சென்னை : ""கூடங்குளம் அணு மின் நிலைய போராட்டக்காரர்கள் பின்னணி குறித்து, விசாரிக்க வேண்டும், அவர்கள் விரிக்கும் மாயவலை என்ன? என்பதை, மத்திய அரசு கண்டறிய வேண்டும்,'' என, தமிழக காங்கிரஸ் தலைவர் ஞானதேசிகன் கூறியுள்ளார்.
சத்தியமூர்த்திபவனில் அவரது பேட்டி: கூடங்குளம் அணு மின் நிலையம் மிகவும் பாதுகாப்பானது. அதிலிருந்து உற்பத்தி செ#யப்படும், 2,000 மெகாவாட் மின்சாரத்தை, தமிழகத்திற்கு வழங்க வேண்டும் என, தமிழக அரசும், தமிழக காங்கிரசும், மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளது. மிகப்பெரிய மின் வெட்டு பிரச்னையை சந்தித்து வரும் தமிழகத்துக்கு, இந்த அணு உலையின் மூலம் கிடைக்கும் மின்சாரம், மிக பயனுள்ளதாக இருக்கும். இந்த அணு மின் நிலையத்தை, தி.மு.க.,- அ.தி.மு.க., காங்கிரஸ், பா.ஜ., இரு கம்யூனிஸ்ட் கட்சிகளும் ஆதரிக்கின்றன. ஆனால், ஐந்து பேர் கொண்ட சிறிய கூட்டம் மக்களிடம் அச்சத்தை உண்டாக்கி, போராட்டத்தை தூண்டி விட்டு வருகிறது.

அணு மின் நிலையம் முற்றுகையிடும் போராட்டத்தை அறிவித்ததை, எந்த அரசும் பொறுத்துக் கொள்ள முடியாது. கடந்த இரு நாட்களாக முற்றுகைப் போராட்டத்தை நடத்திய போது, போலீசார் அமைதி காத்தனர். அணு மின் நிலையத்தை ஒட்டியுள்ள பகுதியில், பந்தல் அமைக்கும் பணியில் ஈடுபட்ட போது தான், போலீஸ் தலையிட்டது. பெண்கள் மற்றும் குழந்தைகளை கேடயமாக முன் நிறுத்தி, போராட்டத்தில் ஈடுபட்டது, தமிழகம் இதுவரை காணாத போராட்டம்.

போராட்டக்காரர்கள் பின்னணி குறித்து, மத்திய அரசு முழுமையாக விசாரணை நடத்தி, நடவடிக்கை எடுக்க வேண்டும். துப்பாக்கிச்சூட்டில் ஒரு மீனவர் இறந்தது, துரதிருஷ்டவசமானது. முற்றுகைப் போராட்டம் மூலம் வன்முறை தூண்டிய உதயகுமார் மீது, நடவடிக்கை எடுக்க வேண்டும். போராட்டக்காரர்கள் விரிக்கும் மாயவலையில், பொதுமக்கள் விழக்கூடாது என, முதல்வர் கோரிக்கை விடுத்துள்ளார். அவர் சரியான வார்த்தையை தான் பயன்படுத்தியுள்ளார். அந்த மாயவலை என்ன? என்பதை, மத்திய அரசு கண்டறிய வேண்டும். இவ்வாறு ஞானதேசிகன் கூறினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக