ஞாயிறு, 30 செப்டம்பர், 2012

மனிதநேயத் தன்மைகளுக்கு புறம்பாக இருக்கும் மதநம்பிக்கைகள்

இந்திய அரசமைப்புச் சட்டம் வலியுறுத்தும் அடிப்படைக் கடமை ஆற்றிடும் குடிமக்கள் அனைவரும் நாத்திகரே!
ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் நடைபெற்ற சரஸ்வதி கோரா நூற்றாண்டு நினைவு விழாவில் தலைவர் எழுச்சிப் பிரகடனம்!

 இந்திய அரசமைப்புச் சட்டம் குடிமக்களுக்கான அடிப்படை உரிமைகளை வழங்கியுள்ளதுபோல, குடிமக்கள் ஆற்றிட வேண்டிய அடிப்படைக் கடமைகளையும் வலியுறுத்துகிறது. அப்படிப்பட்ட அடிப்படைக் கடமைகளில் ஒன்றாக விதி 51ஏ(எச்) வலியுறுத்திக் கூறுவதாவது:
ஒவ்வொரு குடிமகனும் அறிவியல் மனப்பான்மை யினை, கேள்வி கேட்டு உண்மை அறியும் உளப்பாங்கினை, சமூக சீர்திருத்தத்தை, மனிதநேயத்தினை வளர்த்திட வேண்டும்.
விஜயவாடாவில் நடைபெற்ற சரஸ்வதி கோரா நூற்றாண்டு நிறைவு விழாவில் பகுத்தறிவு எழுத்தாளர் ஜிம் ஹெர்ரிக் எழுதிய ‘‘The Atheist Centre:  Unbound by Cages’’  நூலை தமிழர் தலைவர் கி. வீரமணி வெளியிட்டார் (28.9.2012)
விஜயவாடா, செப். 29- ஆந்திர மாநிலம், விஜயவாடா வில் நாத்திகப் பெண் போராளி சரஸ்வதி கோராவின் நூற்றாண்டு நிறைவு விழா செப்டம்பர் 28 மற்றும் 29 ஆகிய இரு நாள்களும் ஏற்பாடு செய்யப்பட்டு நிகழ்ச்சிகள் சிறப்பாக நடைபெற்று வருகின்றன.

முதல் நாள் நடைபெற்ற நூற்றாண்டு நிறைவு விழா தொடக்க நிகழ்ச்சியில் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் கி. வீரமணி தலைமையேற்று எழுச்சிப் பேருரை ஆற்றினார்.
ஆந்திர நாத்திக அறிஞர் கோரா அவர்களின் துணைவியார் சரஸ்வதி கோராவின் நூற்றாண்டு நிறைவு நிகழ்ச்சிகள், விஜயவாடாவில் உள்ள சித்தார்த்த கலை மற்றும் அறிவியல் கல்லூரி அரங்கில் நடைபெற்று வரு கின்றன. உலகின் பல்வேறு நாடுகளிலிருந்தும், இந்தியா வின் பிற மாநிலங்களிலிருந்தும் வருகை தந்த நாத்தி கர்களின் சங்கமமாக நூற்றாண்டு விழா அமைந்துள்ளது.
கோரா மற்றும் சரஸ்வதி கோரா பன்னாட்டு ஆய்வு மய்யத்தினை பன்னாட்டு மனிதநேய மற்றும் நன்னெறி ஒன்றியத்தின் தலைவர் சோனியா எக்கரிக்ஸ் திறந்து வைத்தார். தமிழர் தலைவர் கி. வீரமணி முன்னிலை வகித்தார்.
முதல் நாள் (செப்.28) நடைபெற்ற நூற்றாண்டு விழா தொடக்க நிகழ்ச்சிக்கு திராவிடர் கழகத் தலைவரும், பெரியார் மணியம்மை பல்கலைக் கழக வேந்தருமான தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள் தலைமை வகித்தார்.
கோரா குடும்பத் தலைவரான, மருத்துவர் டீமாஸ் கோராவின் வரவேற்பு நாட்டியத்துடன் தொடக்க விழா நிகழ்ச்சிகள் தொடங்கின. பெல்ஜியம் நாட்டைச் சார்ந்த கல்வியாளரும், பன்னாட்டு மனிதநேய மற்றும் நன்னெறி ஒன்றியத்தின் தலைவருமான சோனியா எக்கரிக்ஸ் (Sonja Eggereikx) சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார்.
சரஸ்வதி கோரா நூற்றாண்டு நிறைவு விழாவினை ஜெர்மன் சுதந்திர சிந்தனையாளர் மன்றத்தின் தலைவர் டாக்டர் வோல்கர் முல்லர் தொடங்கி வைத்தார். தமிழர் தலைவர் கி. வீரமணி தலைமை வகித்தார் (28.9.2012).
பெரியார் இயக்கத்திற்கு மிகவும் தொடர் புள்ளவரும் ஜெர்மனி நாட்டு சுதந்திர சிந்தனையாளர் சங்கத்தின் தலைவருமான முனைவர் வோல்கர் முல்லர் (Dr.Volker Muller) மற்றும் இங்கிலாந்து நாட்டைச் சார்ந்த சிறந்த பத்திரிகையாளரும், பகுத்தறிவு எழுத்தாளரும், மனிதநேயர் இதழின் மேனாள் ஆசிரியருமான ஜிம் ஹெர்ரிக் (Jim Herrick), டில்லியிலிருந்து வருகை தந்த காந்தி அமைதி நிறுவனத்தின் தலைவர் ராதாபட், நாகார் ஜுனா பல்கலைக் கழகத்தின் மேனாள் துணைவேந்தர் பேராசிரியர் வி. பாலமோகன் தாஸ் ஆகியோர் தொடக்க விழாவில் பங்கேற்றுச் சிறப்பித்தனர்.
தமிழர் தலைவர் கி. வீரமணி தலைமை உரை
தொடக்க விழாவினை தலைமையேற்று நடத்திய தமிழர் தலைவர் கி. வீரமணி அவர்கள் தனது உரையில் குறிப்பிட்டதாவது:
ஒரே நாணயத்தின் இரு பக்கங்கள்
பெரியார் இயக்கமும், கோரா இயக்கமும் சமூக மாற்றத்திற்காகப் பாடுபட்டுவரும் இருபெரும் நாத்திக இயக்கங்களாகும். ஒரே நாணயத்தின் இரு பக்க பகுத்தறிவு அமைப்புகளாகும். வெளிநாட்டில் நாத்திகர், பகுத்தறிவாளர், மனிதநேயர் எனும் சொல் பயன்பாடு கருத்தியல் அடிப்படையில் வேறுபட்டு பொருள் கொள்ளப் படும் சூழல்கள் நிலவுகின்றன. ஆனால், இந்திய நாட்டைப் பொறுத்த அளவில் பகுத்தறிவாளர், மனிதநேயர் என்பவர்கள் அடிப்படையில் நாத்திகர்களாகத்தான் இருந்திடல் வேண்டும். அத்தகைய கருத்தியல் தன்மை, செயல்பாட்டுப் பக்குவத்தினை தந்தை பெரியாரும், கோராவும் உருவாக்கிவிட்டனர்.
அவர்கள் உருவாக்கிய அந்த கருத்தியல் தன்மைகள் பகுத்தறிவு அமைப்பு களுக்கு வழிகாட்டுபவையாக உள்ளன. விஜயவாடா நாத்திகர் மய்யத்தின் நிறுவனர் கோராவின் பணிகளுக்கு உறுதுணையாக இருந்து அவரது மறைவிற்குப் பின்னர் மய்யத்தின் செயல்பாடுகளை தலைமையேற்று நடத்திய அவரது துணைவியார் சரஸ்வதி கோராவின் நூற் றாண்டு நிறைவு விழாவில், கலந்துகொள்வது ஒரு குடும்ப விழாவில் பங்கேற்பதற்கு ஒப்பானதாகும். தந்தை பெரியாருக்குப் பின் இயக்கத்தினை தலைமையேற்று நடத்திய அன்னை மணியம்மையாரைப் போன்று கோரா வின் மறைவிற்குப் பின் அவர்தம் அமைப்பினை நடத்திய நாத்திகப் பெண் போராளி சரஸ்வதி கோரா அவர்களா வார்கள்.
அறிவியல் மனப்பான்மையினை வளர்த்திட வலியுறுத்தும் இந்திய அரசமைப்புச் சட்டம்
இந்திய அரசமைப்புச் சட்டம் குடிமக்களுக்கான அடிப்படை உரிமைகளை வழங்கியுள்ளதுபோல, குடிமக்கள் ஆற்றிட வேண்டிய அடிப்படைக் கடமைகளையும் வலியுறுத்துகிறது. அப்படிப்பட்ட அடிப்படைக் கடமைகளில் ஒன்றாக விதி 51ஏ(எச்) வலியுறுத்திக் கூறுவதாவது:
ஒவ்வொரு குடிமகனும் அறிவியல் மனப்பான்மை யினை, கேள்வி கேட்டு உண்மை அறியும் உளப்பாங்கினை, சமூக சீர்திருத்தத்தை, மனிதநேயத்தினை வளர்த்திட வேண்டும்.
Art 51a(h) says, ‘‘It shall be the duty of every Citizen to develop scientific temper, humanism and the spirit of inquiry and reform.’’
அறிவியல் மனப்பான்மையினை வளர்த்திட, எதையும் கேள்வி கேட்டு உண்மை நிலை அறியும் உளப்பாங்கு அவசியம். உண்மை நிலை அறிந்து கொண்டால், சுற்றி யுள்ள சமூகச் சூழல்களை சீர்திருத்தும் எண்ணம் உருவாகும். இந்தப் பணியில் மனிதநேய உணர்வுகளும் உள்வாங்கப்பட்டால் மானிடம் செழித்திடும்.
துவக்க நிகழ்ச்சியில் தமிழர் தலைவர் கி.வீரமணி தலைமை உரை ஆற்றினார்.
இந்திய அரசமைப்புச் சட்டம் வலியுறுத்திடும் அடிப்படைக் கடமையினை ஆற்றிட ஒவ்வொரு குடிமகனும் தலைப்பட்டால், சமுதாயத்தில் நிலவும் ஏற்றத் தாழ்வுகள், மூடநம்பிக்கைகள் அகன்று புத்துலகம் பிறந்துவிடும். இந்த அடிப்படைக் கடமையினை ஆற்றிட முற்பட்டால், அதன் நிறைவு நிலை ஒவ்வொரு குடிமகனும் நாத்திகராக மாறிடும் நல்ல நிலைமை உருவாகிடும். காரணம், மத உணர்வுகளுக்கும், அறிவியல் மனப்பான்மைக்கும் தொடர்பு இல்லை;
மூட நம்பிக்கையின் அடிப்படையில் உருவானவை கடவுள், மத உணர்வுகள்; எதையும் கேள்வி கேட்டு அறிந்து உண்மை நிலை உணருவது அறிவியல் மனப்பான்மை ஆகும். நீரும் நெருப்பும் ஒன்றாதல் இயலாது. அதுபோல, அறிவியல் மனப்பான்மையும், கடவுள் நம்பிக்கையும் ஒருங்கே அமைந்திட முடியாது. அந்த வகையில் இந்திய அரச மைப்புச் சட்டம் வலியுறுத்தும் அடிப்படைக் கடமையினை ஆற்றிடும்  குடிமக்கள் அனைவரும் நாத்திகர்களே.
நாத்திகர் என்பது பெருமையுடன் சொல்லக்கூடிய சமுதாயக் கடமை ஆற்றிடும் அடையாளம் ஆகும், வெளிநாட்டில் உள்ள பல்வேறு பகுத்தறிவாளர்களும், மனிதநேய அமைப்பினைச் சார்ந்தவர்களும் தம்மளவில் கடவுள் மறுப்பாளர்களாக இருந்தாலும், நாத்திகர் என தம்மை அடையாளப்படுத்திக் கொள்ள தயங்கும் நிலையே உள்ளது.
ஜெர்மன் நாட்டு பகுத்தறிவாளர் டாக்டர் வோல்கர் முல்லர் அவர்களுக்கு தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள் சால்வை அணிவித்து பாராட்டு தெரிவித்தார்.
ஆனால், இந்த நாட்டில் கடவுள் தத்துவம், மத நம்பிக்கைகள் அனைத்தும் மனிதநேயத் தன்மை களுக்கும், செயல்களுக்கும் புறம்பாக இருக்கும் நிலையில், ஒரு நல்ல குடிமகன் கடவுள் மறுப்பாளராக தான் இருக்க முடியும். கடவுளை மறுக்கும், கடவுள் தத்துவத்தை எதிர்க்கும் பகுத்தறிவு நிலையினை இந்த மண்ணில் உருவாக்கியவர்கள், தந்தை பெரியாரும், கோராவும் ஆவார்கள். இந்தச் சமூக மாற்றப் பயணத்தில் போராடிய சரஸ்வதி கோரா அவர்களின் நினைவுகள், செயல்பாடு கள் போற்றுதலுக்குரியவை; பின்பற்றி கடைப்பிடிக்கப்பட வேண்டியவை. எதையும் பகுத்தறிந்து அறியும் மனப்பாங்கு, செயல்பாங்கு மக்களிடம் வளர்ந்திட வேண்டும்.
பகுத்தறிவுபற்றி அறிஞர் அண்ணா விளக்கம்
சரஸ்வதி கோரா நூற்றாண்டு புகைப்படக் கண்காட்சியினை தமிழர் தலைவர் கி.வீரமணி முன்னிலையில் தென் குஜராத் பல்கலைக் கழக மேனாள் துணைவேந்தர் பேராசிரியர் பி.ஏ.பாரிக் திறந்து வெத்தார்
தந்தை பெரியாரின் தலைமை மாணாக்கரும், தமிழகத்தின் அரசியல் தளத்தில் தந்தை பெரியாரின் கொள்கைகளுக்கு ஆக்கம் கூட்டியவருமான தமிழ்நாட்டின் முன்னாள் முதல்வர் அறிஞர் அண்ணா அவர்கள் சிதம்பரம் - அண்ணாமலை பல்கலைக் கழகத்தில் ஆற்றிய உரையில், பகுத்தறிவு என்பதற்கு செயல்பாட்டு தன்மை மிக்கதொரு விளக்கத்தினை அளித்தார்.
‘‘Rationalism does not mean repudiation of basic and fundamental truths and maxims, but the annihilation of dubious modes of thought and action.
பகுத்தறிவுக் கொள்கை என்பது அடிப்படை மதவாதக் கொள்கை கோட்பாடுகளை மறுப்பது மட்டும் ஆகாது. போலித்தனமான, உண்மைக்கு மாறான எண்ணம் மற்றும் செயல்களை எதிர்த்து அவைகளை அழித்திடும் ஆக்கப் பூர்வமான பணி ஆகும்.
அப்படிப்பட்ட பகுத்தறிவுக் கொள்கையினை ஏந்திச் செல்லும் போராளிகளாக நாம் இருந்திடவேண்டும் என்பது அறிஞர் அண்ணாவின் பேரழைப்பு. பகுத்தறிவு பற்றிய இப்படிப்பட்ட தொடர் சிந்தனை, சமூக மாற்றத் திற்கான செயல்களை உருவாக்கிட ஆரம்பகாலத்தில் வித்திட்டவர்கள் தந்தை பெரியாரும், கோராவும் ஆவார்கள்.
சரஸ்வதி கோராவிற்கு நூற்றாண்டு நினைவு தபால்தலை வெளியிடக் கோரிக்கை!
இங்கிலாந்து நாட்டுப் பகுத்தறிவாளர், சீரிய எழுத்தாளர் ஜிம் ஜெர்ரிக் அவர்களுக்கு தமிழர் தலைவர் கி.வீரமணி சால்வை அணிவித்து சிறப்பு செய்கிறார்.
தந்தை பெரியாருக்கும், கோராவிற்கும் நூற்றாண்டு நினைவு தபால்தலைகளை இந்திய அரசு வெளியிட்டது. நினைவு தபால்தலைகளை வெளியிடுவது அந்தத் தலைவர்களுக்குப் பெருமை சேர்ப்பது என்பது மட்டும் அடிப்படை ஆகாது. சமூக மாற்றத்திற்குப் பாடுபட்ட அந்தத் தலைவர்களுக்கு நினைவு தபால் தலை வெளியிடுவதால் இந்திய அரசு தனக்குப் பெருமை சேர்த்துக் கொள்கிறது என்பதே உண்மையான நிலையாகும்.
அப்படிப்பட்ட செயலாக நூற்றாண்டு விழா காணும் நாத்திகப் போராளி சரஸ்வதி கோராவின் நினைவிற்கு சிறப்புத் தபால் தலை வெளியிட்டு இந்திய அரசு தனக்குப் பெருமை சேர்த்துக்கொள்ளவேண்டும். இந்த வேண்டுகோளை இந்திய நாத்திகர் மற்றும் அமைப்பின் சார்பாக இந்திய அரசுக்கு கோரிக்கையாக, இந்த நூற்றாண்டு நிறைவு வேளையில் வைத்திடுகிறோம். சமூக மாற்றத்திற்காகப் பாடுபட்ட தலைவர்களுக்கு சிறப்புத் தபால் தலை வெளியிடுவது சமூக மாற்றத்தினை விரைவுபடுத்திடும் செயலாகும். அத்தகைய செயல்களை நிறைவேற்ற இந்திய அரசு முன்வரவேண்டும்.
விஜயவாடா நாத்திகர் மய்யத்தின் செயல் இயக்குநர் டாக்டர் விஜயம் அவர்களுக்கு தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள் பாராட்டு தெரிவித்தார்
வாழ்க நாத்திகக் கொள்கை! பெருகிடுக பகுத்தறிவு!
இவ்வாறு உரையாற்றினார் தொடக்க விழா நிகழ்ச்சிக்குத் தலைமையேற்று நடத்திய தமிழர் தலைவர்.
வெளிநாட்டு நாத்திகப் பெருமக்களுக்கு தமிழர் தலைவர் பாராட்டு
தந்தை பெரியாரின் கொள்கைக் குடும்பமும், கோராவின் கொள்கைக் குடும்பமும் சமூக மாற்றத் திற்காகப் பாடுபட்டுவரும் ஒரே விதமான அமைப்பு களாகும். அந்த நிலையில், சரஸ்வதி கோரா நூற்றாண்டு விழாவிற்கு வருகை தந்துள்ள பன்னாட்டு மனிதநேயர் மற்றும் நன்னெறி ஒன்றியத்தின் தலைவர் திருமதி சோனியா எக்கரிக்ஸ், ஜெர்மன் நாட்டு சுதந்திர சிந் தனையாளர் அமைப்பின் தலைவர் டாக்டர் வோல்கர் முல்லர், இங்கிலாந்து நாட்டு பகுத்தறிவு எழுத்தா ளர், பத்திரிகையாளர் ஜிம் ஹெர்ரிக் ஆகியோருக்கு பெரியார் இயக்கத்தின் சார்பில் சிறப்பு செய்யப்படுகிறது எனக் கூறி அவர் கள் அனைவருக்கும் தமி ழர் தலைவர் கி. வீரமணி அவர்கள் சால்வை அணி வித்து பாராட்டு தெரிவித் தார். நாத்திகர் மய்யத்தின் செயல் இயக்குநர் கோரா வின் மைந்தர் டாக்டர் விஜ யம் அவர்களுக்கும் சால்வை அணிவித்து சிறப்புச் செய்தார்.
நூற்றாண்டு விழா புத்தக வெளியீடுகள்
தொடக்க விழாவில், பகுத்தறிவு கொள்கை சார்ந்த புத்தகங்கள் வெளியிடப்பட்டன. இங்கிலாந்து நாட்டு பகுத்தறிவு எழுத்தாளர் ஜிம் ஹெர்ரிக் எழுதிய ‘‘The Atheist Centre:  Unbound by Cages’’ எனும் புத்தகத்தினை தமிழர் தலைவர் டாக்டர் கி. வீரமணி வெளியிட்டார். ‘‘My Life with Gora’’ (கோராவுடன் எனது வாழ்க்கைப் பயணம்) எனும் சரஸ்வதி கோராவின் தன் வலராறு நூலினை அய்தராபாத் திறந்தவெளி பல்கலைக் கழகத்தின் மேனாள் துணைவேந்தர் பேராசிரியர் ஆர்.வி.ஆர். சந்திரசேகரராவ் வெளியிட்டார். ‘‘Women Visionaries and Activists’’ (பெண் சிந்தனையாளர்களும் மற்றும் போராளிகளும்) எனும் தொகுப்பு நூலை டில்லி காந்தி அமைதி நிறுவனத்தின் தலைவர் ராதாபட் வெளியிட்டார்.
விகாஸ் கோரா எழுதிய ‘‘Life and Work of Saraswathi Gora’’ (சரஸ்வதி கோராவின் வாழ்வும், பணியும்) எனும் நூலை நாகார்ஜுனா பல்கலைக் கழகத்தின் மேனாள் துணை வேந்தர் பேராசிரியர் பாலமோகன்தாஸ் வெளியிட்டார்.
சரஸ்வதி கோரா நூற்றாண்டு புகைப்படக் கண்காட்சி
பன்னாட்டு மனித நேய மற்றும் நன்னெறி ஒன்றியத்தின் தலைவர் சோனியா எக்கரிக்ஸ் அவர்களுக்கு தமிழர் தலைவர் கி.வீரமணி சால்வை அணிவித்து சிறப்பு செய்தார்.
சரஸ்வதி கோராவின் வாழ்க்கைப் பயணத்தின் பல்வேறு கட்டங்களைப் பிரதிபலிக்கும் ஒளிப்படங்களின் தொகுப்பாக அரியதோர் புகைப்படக் கண்காட்சி அமைக்கப்பட்டிருந்தது.
தொடக்க விழா நடைபெறும் முன்பு புகைப்படக் கண்காட்சியினை பெரியார் மணிம்மை பல்கலைக் கழக வேந்தர் தமிழர் தமிழர் டாக்டர் கி. வீரமணி அவர்களது முன்னிலையில், தென் குஜராத் பல்கலைக் கழக மேனாள் துணைவேந்தர் பேராசிரியர் பி.ஏ. பாரிக் திறந்து வைத்தார். புகைப்படக் கண்காட்சியில், கோராவின் 101 ஆவது பிறந்த நாள் நிகழ்ச்சியில் விஜயவாடாவில் தமிழர் தலைவர் பங்கேற்ற நிகழ்வு, சரஸ்வதி கோரா சென்னை- பெரியார் திடலுக்கு வருகை தந்த நிகழ்வுகளை நினைவூட்டும் ஒளிப்படங்கள் இடம்பெற்றிருந்தன.
பிற மாநிலங்களிலிருந்து பல்வேறு நாத்திக, பகுத்தறிவு அமைப்புகளின் பொறுப்பாளர்கள் நூற்றாண்டு விழாவில் பங்கேற்றனர். சரஸ்வதி கோராவின் நூற்றாண்டு விழாவில் கலந்துகொள்ளச் சென்ற தமிழர் தலைவருடன், பகுத்தறிவாளர் கழகப் பொதுச்செயலாளர் வீ. குமரேசன், திராவிடர் கழக ஊடகத் துறையின் மாநிலச் செயலாளர் பிரின்ஸ் என்னாரெசு பெரியார், புகைப்படக் கலைஞர் பா. சிவகுமார் ஆகியோர் உடன் சென்றிருந்தனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக