சனி, 15 செப்டம்பர், 2012

ஆசிரியையின் தண்டனையால் மரணத்தை தழுவிய பள்ளி மாணவன்

  100 முறை, உட்கார்ந்து எழுந்திருக்கும் (தோப்புக்கரணம்) தண்டனையை தந்தார் மாணவன் மரணம் 
வகுப்பில் குறும்பு செய்த மாணவனை கண்டிக்க, ஆசிரியை தந்த தண்டனை, அந்த, 15 வயது மாணவனின் உயிரை பறித்தது.
ஆந்திர தலைநகர், ஐதராபாத்தில் உள்ளது ராயல் எம்பசி பள்ளி. இங்கு, 10ம் வகுப்பில் படித்த மாணவன் முகமது இஸ்மாயில் உசேன். இவன், வீட்டுப் பாடங்களை ஒழுங்காக செய்யவில்லை என்பதற்காகவும், பாடத்தை கவனிக்காமல், சக மாணவர்களுடன் ஓயாமல் பேசிக் கொண்டிருந்ததாலும், வகுப்பு முடியும் வரை, 100 முறை, உட்கார்ந்து எழுந்திருக்கும் (தோப்புக்கரணம்) தண்டனையை தந்தார் ஆசிரியை, முபினா பேகம்.
சிறுவன் முகமது இஸ்மாயில் உசேனுக்கு, ஏற்கனவே, காலில் அறுவைச் சிகிச்சை செய்யப்பட்டு, உலோகத் தகடு பொருத்தப்பட்டிருந்தது. அதனால், அவனால், சிறிது நேரத்துக்கு மேல், ஆசிரியை கொடுத்த தண்டனையை தாங்க முடியவில்லை. "வலிக்கிறது' என, கூறினார். இருப்பினும், ஆசிரியையின் மிரட்டலால், தொடர்ந்தது தண்டனை.வகுப்பு முடிந்து வீட்டுக்கு சென்ற உசேனுக்கு, பல்வேறு உடல் பிரச்னைகள் ஏற்பட்டன. இதையடுத்து, மருத்துவமனையில் சேர்க்கப்பட்டான். 10 நாட்களுக்குப் பின், சிகிச்சை பலன் அளிக்காமல், உசேன் நேற்று பரிதாபமாக இறந்தான்.
பள்ளியில் ஆசிரியை அளித்த தண்டனை பற்றி, இரண்டு நாளுக்கு முன், பெற்றோரிடம் கூறியுள்ளான் உசேன். அவர்கள் மற்றவர்களிடம் சொல்ல, விஷயத்தை கேள்விப்பட்ட பொதுமக்கள், திரண்டு பள்ளி மீது தாக்குதல் நடத்தினர். பொருட்களை சூறையாடினர்.

மகன் இறந்தது குறித்து, தந்தை, முகமது சித்திக் உசேன், போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். பள்ளி நிர்வாகம் மற்றும் ஆசிரியைக்கு எதிராக, வழக்கு பதிவு செய்யப்பட்டது. இருப்பினும், "ஆசிரியை தந்த தண்டனையால், மாணவன் இறக்கவில்லை' என, பள்ளி நிர்வாகம் கூறியுள்ளது.

- நமது சிறப்பு நிருபர் -

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக