வியாழன், 27 செப்டம்பர், 2012

காங்., அலுவலகத்தில் சி.பி.ஐ., தலைமையகத்தை துவக்கலாம்: நிதின் கட்காரி சாடல்

அரசியல் நோக்கங்களுக்காக, சி.பி.ஐ.,யை தொடர்ச்சியாக பயன்படுத்துவதால், அதன் தலைமை அலுவலகத்தை, காங்கிரஸ் தலைமை அலுவலகத்திற்கு இடம் மாற்றம் செய்துவிட வேண்டும்' என்று பா.ஜ., கடுமையாக சாடியுள்ளது. பா.ஜ.,வின்,மூன்றுநாள் தேசிய செயற்குழு கூட்டம், டில்லிக்கு அருகில், சூரஜ்கண்ட் என்ற இடத்தில் நேற்று துவங்கியது. இதில், கட்சியின் முக்கிய தலைவர்கள் பலரும் பங்கேற்றனர்.
துவக்க உரை ஆற்றிய பா.ஜ., தலைவர் நிதின் கட்காரி கூறியதாவது: அசாமில் நடப்பது மதக்கலவரங்கள் போல சித்தரிக்கப்பட்டு வருகிறது. ஆனால், உண்மை அதுவல்ல; வங்கதேசத்தில் இருந்து இந்தியாவுக்குள் நடக்கும் ஊடுருவல்தான் பிரச்னை.
மத்தியில் பா.ஜ., ஆட்சியை பிடித்தால் தான், நாட்டின் எல்லையோரப் பகுதிகள் முழுவதும் ,பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு அந்த பகுதிகளில் முறையான வேலி அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.

கட்காரியின் பேச்சு விவரம் குறித்து, பின்னர் நிருபர்களிடம், பா.ஜ., செய்தி தொடர்பாளரான ரவிசங்கர் பிரசாத், கூறியதாவது: லோக்சபாவிற்கு, எப்போது வேண்டுமானலும் தேர்தல் வரலாம். மத்தியில் உள்ள, ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு, எந்நேரமும் கவிழும். தேர்தல் வந்தால், அதை சந்திப்பதற்கு, பா.ஜ., தயாராகவே உள்ளது. தேர்தல் ஏற்பாடுகளுக்கு ஒருமாத கால அவகாசம் போதும்; பா.ஜ., முற்றிலும் தயார் ஆகிவிடும். ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு ஒரு மூழ்கும் கப்பல். இதன், கூட்டணி கட்சிகள் எல்லாமே வெளியேறிக் கொண்டு இருக்கின்றன. கூட்டணியின் ஸ்திரத்தன்மை பலவீனமாகிப்போய் கிடக்கிறது. சுதந்திர இந்தியாவில், அமைந்த அரசாங்கங்களிலேயே மிகவும் மோசமான, ஊழல் நிறைந்த அரசாங்கம் எதுவென்றால், தற்போதைய மன்மோகன்சிங் அரசுதான். மன்மோகன்சிங் அரசாங்கத்தில் தான் ஊழல்கள் முறைப்படுத்தப்பட்டுள்ளன. ஸ்பெக்ட்ரம் ஊழல், காமன்வெல்த் போட்டி ஊழல், நிலக்கரி ஊழல் என, மிகப்பிரமாண்டமான ஊழல்கள் எல்லாம், இந்த அரசாங்கத்தில்தான் நடைபெற்றுள்ளன. இந்த மூன்று ஊழல்களிலும் சேர்த்து, மொத்தம், 4 லட்சம் கோடி ரூபாய் வரை ஊழல் நடந்துள்ளது. இவை இல்லாமல், சிறியதும், பெரியதுமாய் இன்னும் பல ஊழல்கள் நடந்துள்ளன. இந்த ஊழல் பணத்தை எல்லாம் மிச்சப்படுத்தியிருந்தாலே, டீசல் விலையை உயர்த்த வேண்டிய அவசியம் எழுந்திருக்காது. அந்நிய முதலீட்டை சில்லரை வர்த்தகத்தில், அனுமதிக்கும் முடிவை எடுத் திருக்க வேண்டி வந்திருக்காது. ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு அமைந்து, இதுவரை எட்டு ஆண்டுகள் ஆகிவிட்டன. ஆனால், அரசியல் ரீதியிலான அதிகார தலைமையை பிரதமர் மன்மோகன்சிங்கிற்கு கொடுப்பதற்கு, காங்., தலைவர் சோனியா தயார் இல்லை. இது கட்சிக்குள் இருக்கும் அவரது ஆதிக்கத்தையே காட்டுகிறது. விலைவாசி உயர்வு, ஊழல்கள் ஆகியவற்றுக்கு பா.ஜ., வே காரணம் என, சோனியா கூறியுள்ளார். இந்த குற்றச்சாட்டை பா.ஜ., முற்றிலுமாக நிராகரிக்கிறது. அடிக்கடி நாட்டின் வளர்ச்சி வீதம் பற்றி பிரதமர் பேசுகிறார். உண்மையில் பா.ஜ., ஆளும் மாநிலங்களான, குஜராத், மத்தியபிரதேசம், பீகார், இமாச்சலபிரதேசம் போன்ற மாநிலங் களில்,11 சதவீத வளர்ச்சியை காட்டியுள்ளோம்.

சுஷ்மா,எடியூரப்பா பங்கேற்கவில்லை:

தேசிய செயற்குழு கூட்டத்தில், பா.ஜ., வின் பல முக்கிய தலைவர்கள் கலந்து கொண்டபோதிலும், மூத்த தலைவர், சுஷ்மா சுவராஜ் ,கர்நாடக முன்னாள் முதல்வர் எடியூரப்பா பங்கேற்கவில்லை; எடியூரப்பா ஆதரவாளர்களும் புறக்கணித்துள்ளனர். பா.ஜ., தேசிய தலைவர் ,பதவிகாலத்தை இரண்டு முறை நீட்டித்துக் கொள்ளலாம் என்பது குறித்த தீர்மானம், மும்பையில் நடந்த முந்தைய செயற்குழு கூட்டத்தில் தாக்கல் செய்யப்பட்டது. அந்த தீர்மானத்திற்கு ஒப்புதல் இன்றும், நாளையும் நடக்கும் கூட்டத்தில் வழங்கப்படும் என, எதிர்பார்க்கப்படுகிறது.
- நமது டில்லி நிருபர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக