வியாழன், 27 செப்டம்பர், 2012

5 ஆண்டுகளில் 36 ஆயிரம் டன் உணவு தானியம் வீண்: "திடுக்' சர்வே

புதுடில்லி: நாட்டில் உள்ள அரசு சேமிப்புக் கிடங்குகளில், கடந்த ஐந்தாண்டுகளில், 36 ஆயிரம் டன் உணவு தானியங்கள் வீணடிக்கப்பட்டுள்ளதாக, அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது. வீணடிக்கப்பட்ட இந்த உணவு தானியங்கள் மூலம், எட்டு கோடி மக்களின், பசியை போக்கி இருக்க முடியும்.
தேஜிந்தர் பால் சிங் பக்கா என்பவர், "கடந்த ஐந்தாண்டுகளில், இந்திய உணவு கழகத்துக்கு (எப்.சி.ஐ.,) சொந்தமாக, நாடு முழுவதும் உள்ள சேமிப்புக் கிடங்குகளில், எவ்வளவு உணவு தானியங்கள் கெட்டுப் போயின' என்பது பற்றிய, விவரங்களை தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ், கேட்டிருந்தார்.
அதற்கு அளிக்கப்பட்டுள்ள பதில்:
நாடு முழுவதும் உள்ள, இந்திய உணவு கழகத்துக்கு சொந்தமான சேமிப்புக் கிடங்குகளில், சேமித்து வைக்க முடியாமல், 2008லிருந்து, இதுவரை, 36 ஆயிரம் டன், உணவு தானியங்கள், பயன்படுத்த முடியாத அளவுக்கு, கெட்டு போயின. இதில், அதிகபட்சமாக, இந்தியாவின் உணவு தானிய களஞ்சியம் என அழைக்கப்படும், பஞ்சாபில் தான், 19.290 ஆயிரம் டன், உணவு தானியங்கள், அழுகி விட்டன. அடுத்தபடியாக, மேற்கு வங்கத்தில் உள்ள, அரசு உணவுப் பொருள் சேமிப்புக் கிடங்குகளில், 4,545 டன், உணவு தானியமும், குஜராத்தில், 4,290 டன்னும், அழுகி விட்டன. வீணடிக்கப்பட்ட, இந்த, 36 ஆயிரம் டன் உணவு தானியத்தின் மூலம், ஒரே ஒரு நாளைக்கு, 440 கிராம் என்ற அளவில், எட்டு கோடி பேரின் பசியை போக்கி இருக்க முடியும். இவ்வாறு அந்த பதிலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து, எப்.சி.ஐ., தரப்பில் கூறப்பட்டுள்ளதாவது:

சேமிப்புக் கிடங்குகளில் உள்ள பூச்சிகளால், பெருமளவு உணவு தானியங்கள் கெட்டு போகின்றன. தரமற்ற உணவு தானியங்களை சேமித்து வைப்பதாலும், இந்த பிரச்னை ஏற்படுகிறது. போக்குவரத்தில் ஏற்படும் கசிவு மற்றும் வெள்ளம், மனித கவனக் குறைவு போன்ற காரணங்களும், உணவு தானியங்கள் கெட்டுப் போவதற்கும், வீணடிக்கப்படுவதற்கும், காரணமாக உள்ளன. ஆனாலும், எவ்வளவு உணவு தானியங்கள், கெட்டுப் போகின்றன என்பது பற்றிய, துல்லியமான அளவை, கூற முடியாது. இவ்வாறு, எப்.சி.ஐ., தரப் பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக